சென்னையை அடுத்த மாங்காட்டில் நாடார் சமுதாயத்தில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட பனைப்பொருள்களை விற்பனை செய்ய அரசு பரிசீலனை செய்யும்” என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, பனைத் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், சீனி கலந்த கலப்பட கருப்பட்டி ஆதிக்கத்தின் மத்தியில் கலப்படத்தை ஒழிக்காமல், கலப்படமில்லாத கருப்பட்டி, கல்கண்டை விற்பனை செய்வது சாத்தியமில்லாதது என்கின்றனர் கருப்பட்டி உற்பத்தியாளர்கள்.

பனை மரங்கள்

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பனங்கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டு உற்பத்தியாளர் நல அமைப்பு தலைவர் சந்திரசேகரனிடம் பேசினோம், “தமிழகத்துல தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள்ல பனை தொழில் நடந்துட்டு வருது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பனை தொழில் செய்துட்டு வந்த நிலையில, இப்போ 10,000 பேர்தான் இந்தத் தொழிலைச் செய்துட்டு வர்றாங்க.

இதுல, தூத்துக்குடி மாவட்டத்துலதான் பனை தொழில் அதிகமா நடந்துட்டு வருது. இந்த மாவட்டத்துல இருக்குற `உடன்குடி’தான் கருப்பட்டி, கல்கண்டு தயாரிப்புக்கு பிரசித்திபெற்றது. ஒரு வருஷத்துல மார்ச் முதல் ஆகஸ்ட் வரையுள்ள ஆறு மாசம்தான் பனை சீஸன். இந்த மாசங்கள்ல மட்டும்தான் கருப்பட்டியையும், கல்கண்டையும் தயாரிக்க முடியும். ஆனா, இந்த உடன்குடி சுத்து வட்டாரத்துல மட்டும் சிறியதும் பெரியதுமா 100-க்கும் மேற்பட்ட சீனிக்கருப்பட்டி தயாரிப்பு ஆலைகள் இருக்கு.

சந்திரசேகரன்

ஆனா, இந்த ஆலைகள்ல கல்கண்டு தயாரிக்கும் பானையின் அடியில் தேங்கியிருக்கும் கழிவு பதனீருடன் சீனி கலந்து வருஷம் முழுக்கவும் சீனிக்கருப்பட்டி தயார் செய்யப்படுகிறது. அதுலயும், ஒரிஜினல் சீனி இல்லாம, சர்க்கரை ஆலை கழிவுகள் மற்றும் மொலாசியஸ் எனப்படும் வெல்லப்பாகு கழிவுகள் சேர்க்கப்படுகின்றன. கருப்பட்டியோட வாசனைக்காக மட்டும்தான் கழிவுக்கூப்பனி (கல்கண்டு பானையில் அடியில் தேங்கியிருக்கும் கழிவு பதனீர்) கலந்து சீனிக்கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.

30 லிட்டர் பதனீரைக் காய்ச்சினா 3 கிலோ கருப்பட்டிதான் கிடைக்கும். ஆனா, இரண்டு லிட்டர் கூப்பனியுடன் 100 கிலோ சீனியைக் கலந்தால் 90 கிலோ வரை சீனிக்கருப்பட்டி கிடைக்கும். ஒரிஜினலா உற்பத்தி செய்யுறதைவிட சீனிக்கருப்பட்டி உற்பத்திக்கு 80 சதவிகிதம் குறையும். இதனால, சீனிக்கருப்பட்டி தயாரிப்பாளர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்குது. இதனால, ஒரிஜினலா கருப்பட்டி உற்பத்தி செய்யுறவங்க விரக்தியில் பனை தொழிலை கை விடுறாங்க. கருப்பட்டி தயாரிப்பதற்கான லைசென்ஸை வாங்கி, சீனிக்கருப்பட்டியை ஒரிஜினல் கருப்பட்டி என லேபிள் ஒட்டி விற்பனை செய்யுறாங்க.

பனங்கல்கண்டு

அதிலும், பெரும்பாலான கருப்பட்டி தயாரிப்பாளர்கள் லேபிளே ஒட்டுறது இல்ல. ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் சீனியில் இரண்டாவது ரக சீனியைத்தான் விற்பனை செய்கிறார்கள். சீனியிலேயே இரண்டாவது ரகத்தை விற்பனை செய்யும்போது ஒரிஜினல் கருப்பட்டி, கல்கண்டை எப்படி விற்பனை செய்ய முடியும் என்பதுதான் எங்களின் கேள்வி. அதிலும், ஒரிஜினல் கல்கண்டு ரூ.500 முதல் 600-க்கும், கருப்பட்டி ரூ.300 முதல் 400-க்கும் விற்பனையாகும் நிலையில் குறைந்த விலையில் எப்படி வழங்க முடியும்?

ரேஷன்கடைகளில் தற்போது அரிசி இலவசமாகத் தரப்படுகிறது. கோதுமை, சீனி, பாமாயில், உப்பு, பருப்பு என விற்பனை செய்யப்படும் பொருள்களில் கருப்பட்டி, கல்கண்டுதான் உச்சபட்ச விலையாக இருக்கும். இந்த சூழ்நிலையில் கலப்பட கருப்பட்டி, கல்கண்டு தயாரிப்பை அடியோடு நிறுத்திட அரசு முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பனை தொழிலாளர்களுக்கு உதவித்தொகை கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பனை தொழிலை ஏற்று நடத்த முன் வரவேண்டும். அவர்களுக்கு பனைவாரியம் சார்பில் பயிற்சி அளிக்கவேண்டும். அரசின் நோக்கம் நல்லதுதான். ஆனால், கலப்படமில்லாத ஒரிஜினல் கருப்பட்டி, கல்கண்டை மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. கலப்படம் ஒழிக்கப்படாமல் இந்தத் திட்டம் சாத்தியமில்லை” என்றார்.

பனைமரங்கள்

மேலும், ”போன வருஷம் 5 ஆலைகளில் மட்டும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள 40 டன் கலப்பட கருப்பட்டியை பறிமுதல் செய்தனர். அந்தக் கருப்பட்டியை ஆய்வு செய்ததில் தரமில்லாத கலப்பட கருப்பட்டி என்பது தெரிய வந்தது. `சீனிக்கருப்பட்டி தயாரிப்பவர்கள் ஒரிஜினல் கருப்பட்டி நிறத்தில் தயாரிக்கக் கூடாது, லேபிள்களில் சீனிக்கருப்பட்டி எனக் குறிப்பிடவேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளேன். `எதன் அடிப்படையில் சீனிக்கருப்பட்டி தயார் செய்யலாம் என அனுமதி அளித்தீர்கள்?’ என மாநில உணவுப் பாதுகாப்புத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வரும் 28-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.