முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஜெகநாதன்,  வாட்ஸ்அப்பில்  மாவட்ட ஆட்சியருக்கு ஒரேயொரு மெசேஜ்தான் அனுப்பினார். இன்று அவரது வாழ்க்கையே மாறியிருக்கிறது.

எப்போதாவது வேலை கிடைக்கும் சாதாரண நெசவு கூலித்தொழிலாளி தந்தை, சகோதரிகளின் கல்விக்கட்டணம், தனது முதுகுத் தண்டுவட பாதிப்பு என வாட்டும் வறுமையுடன் போராடிக்கொண்டிருந்த ஜெகநாதன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு தனது தங்கையின் கல்லூரிக் கட்டணத்தை செலுத்த வாட்ஸ்அப்பில் ஒரேயொரு மெசேஜ்தான் அனுப்பி வைத்தார்.

அடுத்த இரண்டாவதுநாளே தங்கையின் இறுதியாண்டு கல்விக்கட்டணம் 31 ஆயிரம் ரூபாய் மட்டுமல்ல, தங்கை படிக்கவேண்டுமென்ற நல்லெண்ணத்திற்காக மாற்றுத்திறனாளி ஜெகநாதனுக்கு 78 ஆயிரம் ரூபாய் செலவில் வீல் சேரையும் கொடுத்து ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார், சந்தீப் நந்தூரி. சாதாரண அரசு சார்ந்த கையெழுத்துக்களை வாங்கவேண்டுமென்றாலே நடையாய் நடக்கவேண்டும். ஆனால், வாட்ஸ்அப் கோரிக்கைக்கே நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

image

ஏற்கெனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியில் முன்னேற ஆட்சியர் அலுவலகத்திலேயே ‘ட்ரீம் கிச்சன்’ உணவகத்தை ஆரம்பித்துக் கொடுத்தவர், சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளுக்கு வீடுகளையும், பால் பண்ணையையும் அமைத்துக்கொடுத்து ’முன்மாதிரி ஆட்சியர்’ என்று பெயரெடுத்தார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 16-ஆம் தேதி முதல் திருவண்ணாமலை ஆட்சியராக பொறுப்பேற்றவுடன் புயல் பாதிப்பு பகுதிகளில் ‘புயல்’ வேகத்தில் களப்பணியாற்றிய சந்தீப் நந்தூரி ஆதரவற்றக் மூன்று குழந்தைகளையும் தாயுள்ளத்தோடு காப்பாற்றி அரசின் ’தொட்டில் குழந்தை’ திட்டத்தில் சேர்த்து பாராட்டுகளைக் குவித்தார். அதோடு, ஜவ்வாது மலை பழங்குடியின மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் உதவிகளை செய்துள்ளார்.

image

இந்நிலையில்தான், தற்போது திருவண்ணாமலை மாவட்டம் ஆவியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத உதவிகளை செய்திருக்கிறார். ஜெகநாதனுடன் பிறந்த மூன்று சகோதரிகளில் ஒருவருக்கு திருமணமாகிவிட, இரண்டு சகோதரிகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தந்தை சம்பத் நெசவுக்கூலித் தொழிலாளி. எப்போதாவதுதான் அவருக்கும் வேலை.

இப்படிப்பட்ட கையறு சூழலில்தான் இறுதியாண்டுப் படிக்கும் தனது தங்கை சத்யாவின் கல்விக்கட்டணத்தை செலுத்த உதவிக்கேட்டு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு கோரிக்கை வைத்துள்ளார் ஜெகநாதன். ’உடனே, அலுவலகத்திற்கு தங்கையுடன் வாருங்கள்’ என்று ரிப்ளை செய்துள்ளார் ஆட்சியர்.

image

ஆனால், அங்கு தங்கையை அழைத்துக்கொண்டு சென்ற ஜெகநாதனுக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ’குடும்ப வறுமை… உடல்நலப் பாதிப்பு.. மூன்று சகோதரிகள் என வறுமையிலும் தங்கையின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்த உங்கள் நல்லெண்ணம் பாராட்டுக்குரியது. அதனால், உங்கள் தங்கையின் கல்விக்கட்டணம் மட்டுமல்ல, உங்களுக்கும் வீல் சேரை கொடுக்கிறோம்’ என்று நெகிழ்ந்துபோய் பாராட்டியதோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 78 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீல்சேரையும் ஜெகநாதனுக்கு வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

image

சாதாரண அரசு சார்ந்த கையெழுத்துகளை வாங்கவே பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்களிடம் நடையாய் நடக்கவேண்டும் நிலை உள்ளது. ஆனால், ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜில் வாழ்க்கையையே மாற்றிக்காட்டிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் இந்த எதிர்பாராத உதவியால் திக்குமுக்காடிப்போன ஜெகநாதனும், அவரது குடும்பமும் ‘கடவுளாய் வந்து உதவி செய்திருக்கிறீர்கள்’ என்று கண்ணீரோடு நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

  – வினி சர்பனா 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.