“அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி உள்ளார்.பா.ஜ.கவுக்கு என்று ஒரு புரோட்டோகால் உள்ளது அதன்படியே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் அறிவிப்போம். இது வழக்கமான ஒன்றுதான்” என தஞ்சாவூரில் நடந்த `நம்ம ஊரு பொங்கல்’ நிகழ்ச்சியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான குஷ்பு தெரிவித்தார்.

பி.ஜே.பி பொங்கல் விழாவில் குஷ்பு

தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறு ஐயாறப்பர் கோயில் வளாக முகப்பில் பா.ஜ.க சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார். அவருடன் சேர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். இதற்கான ஏற்பாட்டை தஞ்சை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளரான பூண்டி வெங்கடேசன் செய்திருந்தார்.

பொங்கல் வைத்த பிறகு, கோயில் யானை தர்மாம்பாளிடம் குஷ்பு ஆசிர்வாதம் வாங்கினார். இதையடுத்து சன்னிதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் விழா மேடைக்கு வந்த அவர் பத்து நிமிடங்கள் பேசிய பிறகு புறப்பட்டு சென்றார்.

பி.ஜே.பி பொங்கல் விழாவில் குஷ்பு

முன்னதாக குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது, “அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து முதல்வர், துணை முதல்வர் பேசியுள்ளனர். அதே கூட்டத்தில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பா.ஜ.க குறித்து அவரின் தனிப்பட்ட கருத்தை கூறியுள்ளார். அது அவர்களின் கட்சி விவகாரம். இதுகுறித்து எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் பதில் அளிப்பார்.

நாட்டிலேயே மிகப் பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. தமிழகத்தில் மிகப் பெரிய கட்சி அ.தி.மு.க. அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். இருப்பினும் எங்கள் கட்சிக்கு என்று ஒரு புரோட்டோகால் உள்ளது. அதன்படியே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தெரிவிப்போம். இது வழக்கமான ஒன்றுதான். இது குறித்து ஏற்கனவே, கட்சி பொதுச் செயலாளர் ரவி தெளிவுபடுத்தி கூறியிருக்கிறார்.

குஷ்பு

தை பிறந்தால் வழிபிறக்கும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது, தி மு க-விற்கு அல்ல பா.ஜ.கவுக்கு தான். ஸ்டாலினை பொறுத்தவரை அவர் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என முடிவு செய்யட்டும். ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டி போட நான் தயாராக இருக்கிறேன்.

ஆனால், நான் தேர்தலில் போட்டியிட போகிறேனா என்பது பற்றி எனக்கே தெரியாது. பா.ஜ.க இதுவரை போட்டியிடும் தொகுதிகள் குறித்து யாரிடமும் கேட்கவில்லை. அப்படியாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தால், அவர்கள் முதலில் தி.மு.க-விடம் எத்தனை சீட் கேட்டு வருகிறார்கள் என பார்ப்போம்.

குஷ்பு

எனது பெயருக்கு பின்னால் என் தந்தை பெயர் கிடையாது. அப்படியாக கார்த்திக் சிதம்பரம் அப்பா பெயரை ஒதுக்கி விட்டு வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என பார்ப்போம். சிதம்பரம் காங்கிரஸில் இருந்து விலகி த.மா.க -வில் இணைந்து, தனியாக கட்சி தொடங்கி போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்.

நாங்கள் எந்த கட்சிக்கு சென்றாலும் விசுவாசமாக இருப்போம். சிதம்பரம் போன்ற ஆட்கள் எங்களை மாதிரி ஆட்கள் கட்சியில் இருந்தால் தனது மகனுக்கு போட்டியாக வந்து விடுவோமோ என பயந்து எங்க மாதிரி ஆட்களை புறக்கணித்தார். பா.ஜ.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. யாரையும் யாரும் வழி நடத்தவில்லை.

பொங்கல் விழாவில் குஷ்பு

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு முடிவு கட்ட ஒரு புதிய சட்டம் இயற்றும் வரை இதுபோன்ற வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கும். வேளாண் சட்டங்களை சரியாகப் படித்துப் பார்த்தால், அனைவருக்கும் சாதகமான ஒன்று தான் என புரியும்.

இதற்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு சட்மன்ற தேர்தலில் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய வேளாண் மசோதா குறித்து ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். அல்லது தேர்தல் அறிக்கையில் கூறிய வேளாண் மசோதா தவறு என மன்னிப்பு கேட்கட்டும், பிறகு அதனைப் பற்றி பரிசீலிக்கலாம்” என தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.