கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், 3-ஆம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்ட பத்திரிகையாளர் அஃப்சல் அலாம் தனது அனுபவம் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான காரணங்களை ‘இந்தியா டைம்ஸ்’-க்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

’’நான் 2020, டிசம்பர் 30ஆம் தேதி டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டேன். இரண்டாவது டோஸ் ஜனவரி 27ஆம் தேதி எடுத்துக்கொள்ள இருக்கிறேன். அதுவரை கண்காணிக்கப்பட்டு வருகிறேன். இதற்கிடையில், எனக்கு எந்த உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டாலும், அதை மருத்துவமனைக்கு தெரியப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாரத் பயோடெக்கின் இந்தத் தடுப்பூசியை செலுத்தி 8 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த உடல்நலக் குறைபாடும் எனக்கு ஏற்படவில்லை.

நான் கொரோனா தடுப்பூசி சோதனையில் தன்னார்வலராக பங்கேற்றதற்கான காரணத்தையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா பரவ ஆரம்பித்தபோது, அதன் வீரியத்தை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கான சரியான மருந்தும் இல்லாததால் பரவலையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

image

மேலும், லட்சக்கணக்கான மக்கள் இதனால் வேலையிழந்து உணவுகூட இன்றி, வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

எனவே கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் என்று நான் நம்புகிறேன். தொழிற்சாலைகள் திறக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உயிர்பிழைக்கும். எனவே இந்த தடுப்பூசியின் வீரியத்தன்மையை உறுதிசெய்வது நம் கடமை என்பதை உணர்ந்துதான் தடுப்பூசி சோதனையில் பங்கேற்றேன்.

மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக உழைத்து, ஒரே வருடத்தில் தடுப்பூசியை தயாரித்துள்ளனர். இதில் நம் பங்களிப்பு நிச்சயம் தேவை. நான் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ரத்ததானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எனவே இந்தப் பரிசோதனையில் பங்கேற்பதற்கு பயம் ஏதும் ஏற்படவில்லை.

இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். டிசம்பர் 30ஆம் தேதி, மதியம் 3 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றேன். அப்போது என் மனதில் பல கேள்விகள் இருந்தன. இந்த தடுப்பூசி சோதனையில் என் உயிர் பிரிந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ பாரத் பயோடெக் நிறுவனம் அல்லது ஐசிஎம்ஆரிடம் இருந்து ஏதேனும் பண உதவிகள் கிடைக்குமா? என்று முதலில் மருத்துவரிடம் கேட்டேன்.

அடுத்ததாக, முதல் டோஸ் மருந்தை செலுத்தியபிறகு, நான் என்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமா? என்றும் கேட்டேன்.

என்னுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் மருத்துவர் விளக்கம் அளித்ததுடன், தடுப்பூசியால் அசம்பாவித மரணம் ஏற்பட்டால், இறந்த நபரின் வயது மற்றும் வருமானத்திற்கு ஏற்ப அவர் பண உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

image

அதேசமயம் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட ஒருவரால் 6 மாதத்திற்கு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள முடியாது என்றும், அதேசமயம் பாலுறவில் ஈடுபடுவதில் எந்தவித பிரச்னையும் இருக்காது என்றும் தெரிவித்தார். மேலும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.

ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சினின் மூன்று கட்ட பரிசோதனைகளையும் செய்துமுடிக்க 1 மணிநேரம்தான் ஆகும்.

முதலில் உயரம், எடை, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த பரிசோதனை செய்யப்படும். பிறகு கொரோனாவைரஸ் பரிசோதனையின் செயல்முறைகள் செய்துமுடிக்கப்பட்டவுடன், தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்தியபிறகு அரை மணிநேரம் மருத்துவர் கண்காணிப்பில் அங்கேயே இருக்கவேண்டும்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனையிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். தடுப்பூசியின் கடைசிகட்ட முடிவு எப்படியிருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்’’ என்கிறார் அலாம்.

– தகவல் உறுதுணை: indiatimes

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.