வைகோ, திருமாவின் தனிச் சின்ன முழக்கம்… ஸ்டாலினின் `மிஷன் 200’-தான் காரணமா #TNElection2021

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தன்று பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை வழக்கமாகவைத்திருக்கும் வைகோ, இந்தமுறை சந்தித்தபோது வெளிப்படுத்திய கருத்துகள்தான் இவை. அவரைத் தொடர்ந்து நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், `புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசம்’ என அந்த மாநில அரசு அரசாணை பிறப்பித்ததற்கு, முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரிக்கு வந்தார். சந்திப்பை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தி.மு.க கூட்டணியில் எங்கள் கட்சி வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்’’ என்று தெரிவித்திருக்கிறார். தற்போது மட்டுமல்ல, தொடர்ச்சியாகவே வைகோவும் திருமாவளவனும் இதே கருத்தைத் தெரிவித்துவருகின்றனர்.

வைகோ பத்திரிகையாளர் சந்திப்பு

`மிஷன்’ உதயசூரியன்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தேனி ஒரு தொகுதியைத் தவிர்த்து புதுச்சேரி உட்பட 39 இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கூட்டணிக் கட்சிகள் இணைந்து பல போராட்டங்களை நடத்தின. அந்தக் கூட்டணி இப்போதுவரை எந்த விரிசலும் இல்லாமல் சுமுகமாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால், இந்தமுறை, தி.மு.க அதிக தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான இடங்களை ஒதுக்கவிருப்பதாகவும், கூடவே ம.தி.மு.க., வி.சி.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் கசிந்தன.

2016 தேர்தல் பாடம்!

கடந்த 2016 தேர்தலில், நூலிழையில் தி.மு.க வெற்றியைத் தவறவிட்டதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கியதே காரணம் என தி.மு.க தலைமை கருதுவதாக செய்திகள் வெளியாகின. கூடவே, அந்தத் தேர்தலில், எப்படி அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளையும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வைத்தாரோ அதேபோல, இந்தமுறை தி.மு.க தலைமை முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனாலும், தி.மு.க தரப்பில் இது குறித்து அதிகாரபூர்வ தகலவல்கள் எதுவும் வெளியாகாமலேயே இருந்தன.

ஐபேக் – ஸ்டாலின்

மிஷன் 200!

இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் சென்னை அண்ணா அறிவாலத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,

“வரும் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கு மேல்தான் என்று நாம் உறுதி எடுத்தாக வேண்டும். `மிஷன் – 200’ என்ற இலக்கை நோக்கி நாம் சென்றாக வேண்டும். 200-க்கு ஒரு தொகுதி அல்ல; ஒரு இஞ்ச்கூட குறையக் கூடாது. இன்று முதல் ஒவ்வொரு 24 மணி நேரமும் உழைத்தால்தான் 200-க்கும் மேல் என்பது சாத்தியம். நம்மால் முடியும்; நம்மால் மட்டும்தான் முடியும்’” என்று பேசியதாகச் செய்திகள் வெளியாகின. அதற்குப் பிறகுதான் தனிச்சின்னம் என்கிற விவாதம் சூடிபிடிக்கத் தொடங்கியது.

ம.தி.மு.க நிர்வாகிகள் கருத்து!

“இந்தத் தேர்தலில் எங்களுக்கென்று சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில், தி.மு.க-வின் கொள்கைகளோடு பெரும்பாலும் ஒத்துப்போகும் கட்சியாக ம.தி.மு.கவே இருக்கிறது. அதனால் கௌரவமான இடங்களை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். தி.மு.க கடைசியாக எங்களுக்கு 2001-ல் 22 இடங்களை ஒதுக்கினார்கள். ஒரு சீட்டுப் பிரச்னையில்தான் நாங்கள் அந்தக் கூட்டணியைவிட்டு வெளியேறினோம். தொடர்ந்து, 2006 அ.தி.மு.க கூட்டணியில், 35 இடங்களில் போட்டியிட்டோம். 2016 மக்கள் நலக் கூட்டணியிலும் 29 இடங்களில் போட்டியிட்டோம். இந்தத் தேர்தலில் ஒரு வருவாய் மாவட்டத்துக்கு ஓர் இடம் வீதம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

25 ஆண்டுகளாக தமிழக மக்களுக்காகப் போராடிவரும் எங்களுக்கு, தேர்தல் காலங்கள்தான் அபாயகட்டமாக இருக்கும். ஆனால், இந்த முறை வெற்றி பெற்று தேர்தல் கமிஷனில் அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கிறது. அது தனிச் சின்னத்தில் போட்டியிட்டால்தான் சாத்தியமாகும். அதேவேளையில், உதயசூரியனில்தான் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க தரப்பிலிருந்து எங்களுக்கு இதுவரை எந்த நிர்பந்தமும் வரவில்லை.”

ம.தி.மு.க ஆர்ப்பாட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் தரப்பு :

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2001 தேர்தலில், தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டது. ஆனால், வெற்றி பெற்றாலும் எங்கள் தலைவரால் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை என்பதால்தான் ராஜினாமா செய்தார். அதேபோல. 2006 தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் இரட்டை இலைச் சின்னத்தில் நிற்கச் சொல்லி ஜெயலலிதா அம்மையார் கேட்டுக்கொண்டார். ஆனால், நாங்கள் அந்தத் தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டோம். அப்போது மட்டுமல்ல, தொடர்ந்து, 2011, 2016 தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டிருக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட, ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தின் காரணமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டியிருந்தது. ஆனால், நாங்கள் சட்டமன்றத் தேர்தல்களில் பெரும்பாலும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டிருக்கிறோம். அதேபோல, இதுவரை, இரட்டை இலக்கங்களில்தான் சீட்டுகளையும் பெற்றிருக்கிறோம். கடந்த தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறையும் இரட்டை இலக்கங்களில் இடம் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

Also Read: எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு… தி.மு.க, அ.தி.மு.கவின் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

எங்களுக்கென்று தனியாகக் கட்சி இருக்கிறது. தலைவர் இருக்கிறார். கால் நூற்றாண்டுகளாகக் கட்சி நடத்திவரும் எங்களுக்கென்று சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இன்னொரு கட்சியில் கரைந்துபோக நாங்கள் விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களும் அப்படித்தான். எங்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை, நிரந்தரச் சின்னத்தைப் பெற விரும்புகிறோம். தி.மு.க-வும் இதுவரை எங்கள் சுயமரியாதைக்கு பாதிப்பு வரும் வகையில் நடந்துகொண்டது கிடையாது. எங்கள் நலனுக்காக யோசித்திருந்தாலும், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதும் கிடையாது. இந்தத் தேர்தலிலும் அது தொடரும் என்றே நாங்கள் நம்புகிறோம்” என்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரணி

தி.மு.க-வின் பதில்!

“இதுவரை கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னதில் போட்டியிடவைக்க வேண்டும் என்கிற எந்த முடிவும் எங்கள் தரப்பில் எடுக்கப்படவில்லை. ஆனால், எங்கள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 200 தொகுதிகளில் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று எங்கள் தலைவர் சொன்னதை, பத்திரிகைகள், தி.மு.க-வே 200 தொகுதிகளில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என தலைவர் பேசியதுபோல எழுதிவிட்டன. அதனால்தான், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தற்போது தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என தொடர்ச்சியாகப் பேசிவருகின்றனர் என நினைக்கிறேன். ஆனால், எங்கள் தலைவரைப் பொறுத்தவரை, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் அனைத்தையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

அதேவேளையில் 2019 தேர்தல் நமக்குப் பல படிப்பினைகளைக் கொடுத்திருக்கிறது. அதனால், கூட்டணிக் கட்சிகள் விருப்பப்பட்டால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம். கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட விரும்பினால், பெரும்பாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். காரணம், இந்தத் தேர்தல் வழக்கமான ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல. இது மாநில சுயாட்சிக்கான ஒரு போராட்டம். அதனால், எந்தப் பரிசோதனைக்கும் தற்போது நேரமில்லை. கூட்டணிக் கட்சிகள் அதைப் புரிந்துகொண்டு ஒற்றுமையாக நிற்க வேண்டும். நாங்களும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்” என்கின்றனர் உறுதியாக.

தேர்தல் தேதி நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கும் என்றே தெரிகிறது.