2020-ம் ஆண்டை பொறுத்தவரை ஆட்டோமொபைல் துறை கடும் சிக்கலைத் சந்தித்தது என்றே சொல்லவேண்டும். லாக்டவுன் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் கிட்டத்தட்ட விற்பனை இல்லை என்ற நிலையில்தான் இருந்தன. ஆனால், அன்லாக் அறிவித்ததில் இருந்து வாகன விற்பனை தொடர்ந்து உயர்ந்தன. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய தேவை இருந்ததால், சிறிய ரக வாகனங்களுக்கான தேவை உயர்ந்தது. வாகனம் தேவைப்படும், ஆனால் புதிய வாகனம் வாங்க முடியாது என்னும் சூழல் இருந்ததால், பழைய வாகனங்கள் – யூஸ்டு வாகனங்கள் விற்பனையும் 2020-ம் ஆண்டு சூடு பிடித்தது. ஆனால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் தாக்கம் இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் 30 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

இ.வி சந்தை

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் 8,000-க்கும் குறைவாக மட்டுமே எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதிலும் நடப்பு நிதி ஆண்டில் மட்டும் 2,959 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில், டாடா குழுமத்தின் ‘நெக்ஸான்’ 2,086 கார்களை விற்பனை செய்திருக்கிறது. எலெட்க்ரிக் வாகனத்தின் சந்தை மிக மிக சிறியது என்றாலும், இதில் தற்போது வரை டாடா குழுமம் ஆதிக்கம் செலுத்துகிறது. இனி, இந்தப் பிரிவில் டெஸ்லாவும் களம் இறங்க தயாராகி வருகிறது.

image

‘சில மாதங்களுக்கு முன்பு காத்திருப்பு முடிந்தது, 2021-ல் நாங்கள் இந்தியாவுக்கு செல்ல இருக்கிறோம்’ என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் இதனை உறுதி செய்திருக்கிறார். 2016-ம் ஆண்டில் இருந்து இந்திய சந்தையில் களம் இறங்க திட்டமிட்டது டெஸ்லா. அதற்கான முனபதிவும் தொடங்கியது. ஆனால், போதிய கட்டுமான வசதிகள் இல்லாததால் பின்வாங்கியது. இந்த நிலையில், இந்த ஆண்டு (2021) இந்திய சந்தைக்கு வருகிறது டெஸ்லா.

மாடல் 3

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனத்தின் ‘மாடல் 3’ கார்கள் இந்தியாவுக்கு வர இருக்கின்றன. இதுவரை இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்துக்கு உற்பத்தி ஆலை இல்லை என்பதால், வெளிநாட்டில் தயாரித்து அதன் பிறகு இந்தியாவில் இறக்குமதி செய்து விற்க வேண்டும். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் ஆலை அமைப்பது தொடர்பாக திட்டமிட்டுவந்தாலும், இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆண்டுக்கு 2,500 கார்களை வரை இறக்குமதி செய்து விற்றால், குறைந்த வரியில் விற்க முடியும். இதற்கு மேலே இறக்குமதி செய்யும் பட்சத்தில் கூடுதல் தொகைக்கு விற்க வேண்டியிருக்கும். இதைவிட முக்கியம், ஏற்கெனவே இந்த கார்களின் விலை மிக அதிகம். ‘மாடல் 3’ ரக கார்கள் 37,990 டாலர் முதல் 54,990 டாலர் வரை விற்கப்படுகிறது. ரூபாய் மதிப்பில் பார்த்தால் ரூ.28 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இருக்கும். இறக்குமதி வரியை சேர்த்தால் ரூ.50 லட்சம் வரை இந்த காரின் விலை இருக்கக் கூடும்.

2 கோடி கார் இலக்கு

இதுவரை சர்வதேச அளவில் 10 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை டெஸ்லா விற்பனை செய்திருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 2 கோடி கார்களை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டை தவிர்த்துவிட்டு, இந்த இலக்கை அடைய முடியாது. ஆனால், அதேசமயத்தில் இந்தியாவில் இந்த கார்களுக்கு வரவேற்பு இருக்குமா என்பதும் போகப் போகவே தெரியும். 50 லட்ச ரூபாய்க்கு எலெக்ட்ரிக் கார் வாங்குவதற்கு பதிலாக பென்ஸ், ஆடி போன்ற சொகுசு கார்களை வாங்கலாம் என்பதே பெரும்பாலான இந்தியர்களின் எண்ணமாக இருக்கும்.

image

தவிர இந்தியர்களின் தனிநபர் வருமானம் சர்வதேச அளவில் ஒப்பீட்டளவில் மிக மிக குறைவு. அமெரிக்காவில் தனிநபர் வருமானம் 63,690 டாலர்கள். ஆனால், இந்தியர்களின் தனிநபர் வருமானம் 7,680 டாலர் மட்டும் மட்டுமே. அதனால் இந்தியாவில் இந்தக் கார்களுக்கு பெரிய வரவேற்பு இருக்குமா என்பது தெரியாது.

உதாரணத்துக்கு மெர்சிடென்ஸ் பென்ஸ் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 5,007 கார்கள் மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. அதனால், அடுத்த 10 ஆண்டுகளில் 2 கோடி கார் என்பதை இலக்காக வைத்து டெஸ்லா செயல்பட்டாலும், இந்தியாவில் பெரிய அளவுக்கு விற்பனையை அவர்களால் எட்ட முடியாது என்பதே தற்போதைய யதார்த்தம்

இந்திய நிறுவனங்களுக்கு?

டெஸ்லா வருகையால் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரிய மாற்றம் இருக்காது. இதுவரை எலெக்ட்ரிக் வாகனங்கள், சந்தையில் பெரிய அளவுக்கு ஊடுருவவில்லை. தவிர, கார் சந்தையை எடுத்துக்கொண்டால் 10 லட்ச ரூபாய்க்கு கீழ் இருக்கும் வாகனங்கள்தான் கணிசமான சந்தையை வைத்திருக்கின்றன.

image

இப்போதைக்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிக அதிகம், அதற்கான கட்டுமானமும் இல்லை என்பதால் டெஸ்லா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதேபோல, டெஸ்லாவால் இந்திய சந்தைக்கு பயனும் இல்லை. கார்களை வெளிநாட்டிலே தயார் செய்துவிடுவதால் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கான தேவை இருக்காது என்பதால், டெஸ்லாவின் வருகையால் சாதகமோ, பாதகமோ உடனடியாக இருக்காது.

வரும் காலத்தில் விலை குறைவு மற்றும் அதற்கு ஏற்ற கட்டுமான வசதிகள் இருக்கும்போது டெஸ்லா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவரை சொகுசு கார் சந்தை பிரிவில் உள்ள நிறுவனங்கள் எப்படி செயல்படுகிறதோ அதேபோல டெஸ்லாவின் செயல்பாடும் இருக்கும். ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் வாகன விற்பனையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு உயர்ந்துகொண்டே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

– வாசு கார்த்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.