நகைக்காக மூதாட்டி கொடூரமாகக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. உடல் அருகில் ஆக்சா பிளேடு, நைலான் கயிறு, கடப்பா கல், ஆகியவை கிடந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

திருச்சி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி சந்தை பேட்டையைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவர் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி ஹபிபா பீவி (70). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து விட்டு இரவு வீட்டிற்கு வந்து விடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டம், நாகமங்களத்தில் உள்ள சகோதரரின் வீட்டிற்குச் சென்று விட்டு இரவு வீடு திரும்பிய பின்னர் சாப்பிட்டுத் தூங்கச் சென்றிருக்கிறார்.

திருச்சி

நேற்று காலையில் வீட்டின் வாசலில் பால் பாக்கெட் போட்டது போட்டபடியே கிடந்துள்ளது. குடிதண்ணீர் வந்ததையும் ஹபிபா பீவி பிடிக்க வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த போது, வீட்டின் கதவில் ரத்தம் படிந்திருந்ததை கண்டு அதிர்ந்து, கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அங்கு ஹபிபா பீவி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.

உடனே அப்பகுதி மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இறந்தவரின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைக்காக நடந்த கொடூரம்

மோப்பநாய் சம்பவ இடத்தையும், இறந்தவரின் உடலையும் மோப்பம் பிடித்த பின் அருகிலேயே சுற்றிச் சுற்றி வந்தது. பின்னர் மோப்பம் பிடித்துக்கொண்டு சிறிது தூரம் ஓடியது. பின்னர், அங்கிருந்து திடீரென ஓட்டம் பிடித்த மோப்ப நாய் மீண்டும் வீட்டிற்கே வந்துவிட்டது. குடியிருப்பு நிறைந்த பகுதிகள் கொண்ட சந்தைப்பேட்டைப் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கை விசாரித்து காவலர்களிடம் பேசினோம். “நகைக்காக இந்த கொலை நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த மூதாட்டியின் கழுத்தில் நகை அணிந்திருக்கிறார். கழுத்தை அறுத்து முகத்தைச் சேதப்படுத்திக் கொன்றிருப்பதும் தெரியவந்தது. இறந்த மூதாட்டியின் அருகில் நைலான் கயிறு, கடப்பா கல், ஆக்சா பிளேடு ஆகியவை இருப்பதும் அதில் அதிக அளவில் ரத்தம் படிந்திருப்பதும் தெரியவந்தது.

திருச்சி போலீஸார்

கழுத்தில் அணிந்திருந்த நகைகளை திருடுவதற்காகத் திருடன் முயற்சி செய்ததில் அந்த அம்மாவின் கழுத்து மற்றும் நெஞ்சு பகுதிகளில் காயம் நிறைந்து இருக்கிறது. அத்தோடு இறந்த மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் நகை மற்றும் ஒரு செல்போனும் திருடு போயிருக்கிறது. கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்த நபர் யார்? ஒருவருக்கு தான் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பா என்பது தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.