சர்க்கரையும், கரும்பும் என்னவோ தித்திப்பாகத்தான் இருக்கிறது, ஆனால் அதனை உருவாக்கும் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையோ அவ்வளவு இனிப்பாக இல்லை. ஒரு தாய் தன்னுடைய கருவில் குழந்தையை 10 மாதங்கள் சுமப்பது போல் கரும்பு விவசாயிகளோ 10 மாதங்கள் கரும்பினை ஏராளமான உழைப்பையும், பணத்தையும் கொட்டி பாதுகாப்ப்பாக விளைவிக்கிறார்கள். ஆனால், அந்த கரும்பினை எடுத்துக் கொள்ளும் சர்க்கரை ஆலைகளோ வருடக்கணக்கில் பணத்தை விவசாயிகளுக்கு வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதனால், நம்முடைய நாக்கிற்கு இனிப்பை கொடுக்கின்ற அந்த விவசாயிகளின் வாழ்க்கையோ நாள்பட நாள்பட வாழ்க்கை கசந்து கொண்டே செல்கிறது.

image

10 மாதத்தில் கரும்பு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தாலும் ஆலையோ உரிய நேரத்தில் கரும்பினை அரவைக்கு எடுப்பதில்லை. அதனால், விவசாயிகளுக்கு கரும்பின் எடை அளவு குறைந்துவிடுகிறது. அதுதான் போகட்டும் அரவைக்கு கொடுத்த கரும்பிற்காவது உரிய விலை, உரிய நேரத்தில் கிடைத்தால் போதும் என்றே விவசாயிகள் நினைக்கிறார்கள். ஆனால், பல தனியார் ஆலைகளில் விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நிலுவையில் வைத்திருக்கிறார். அப்படித்தான், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருவத்திற்கு அருகில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையும் சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்துள்ளது. அந்த தனியார் ஆலையால் பாதிக்கப்பட்டு பணம் கிடைக்காமல் அவதிப்பட்டும் வரும் விவசாயிகளில் சிறுநாகலூர் கிராம விவசாயிகளும் ஏராளமானோர் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக சிறுநாகலூர் விவசாயிகளின் நிலைமை இருக்கிறது.

image

சிறுநாகலூர் விவசாயி உமா சக்கரவர்த்தி என்பவர் கூறுகையில், “நாங்கள் கரும்பு அனுப்பி இரண்டரை வருடத்திற்கு மேல் ஆகிறது. 2 லட்சத்திற்கும் மேல் பணம் வரவேண்டியுள்ளது. ஆனால் இதுவரை எங்களுக்கு பணம் தராமல் இழுக்கடித்துக்கொண்டு இருக்கின்றனர். இதுகுறித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி விட்டோம். ஆனால் எவ்வித பலனும் இல்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டோம். ஆனால் எங்கள் கையில் இருந்தா எடுத்துக்கொடுக்க முடியும் என அவர் பதிலளிக்கிறார்.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு எங்கள் பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும். இல்லையேல் ஜனவரி 2 அல்லது 3 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிப்பேன். இதை அதிகாரிகள் தடுத்து எங்கள் பணத்தை பெற்றுதந்தாலும் சரி. இல்லையேல் என் உயிர் போனாலும் சரி. கடவுள் விட்ட வழி. வட்டி மேல் வட்டி கட்டி என்னால் சமாளிக்க முடியவில்லை” என்றார்.

image

சிறுநாகலூர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “ 2017-18 ஆம் ஆண்டு தரணி சர்க்கரை ஆலையில் என்னிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்தனர், அப்போது வெறும் வெட்டுக்கூலி மட்டுமே அவர்கள் தந்தனர். ஆனால் அதன்பின்னர் இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நான் பயிர்செய்ய அனைத்து தொகையும் வட்டிக்கு வாங்கிதான் பயிர்செய்தேன், இப்போது வட்டிக்கடன் கழுத்தை நெரிக்கிறது, அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

image

விவசாயி பழனி கூறுகையில், “2017-18 தரணி சர்க்கரை ஆலைக்கு கரும்பு விற்பனை செய்தோம், ஆனால் இதுவரை அவர்கள் நிலுவைத்தொகையை வழங்கவில்லை. நான் இந்த இரண்டு ஆண்டில் மட்டும் சுமார் 50 ஆயிரம் வட்டி கட்டியுள்ளேன். எனக்கு கொஞ்சம் நிலம்தான் உள்ளது, உடல்நிலையும் சரியில்லை, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு வாழ்வாதாரம் எதுவுமே இல்லை. அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. அடுத்தகட்டமாக போராட்டம் செய்யவுள்ளோம், அரசு உடனடியாக நிலுவைத்தொலையை தரவேண்டும்”
என்றார்.

image

தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் அருள்தாஸ் “எங்கள் பகுதியில் கரும்புதான் பிரதான பயிர். ஏனென்றால் இந்த மண்ணுக்கு கரும்புதான் ஏற்றப்பயிர். இதனாலேயே இப்பகுதியில் ஐந்து கரும்பு ஆலைகள் உள்ளன. அவ்வாறு நாங்கள் 2016-17 ஆம் ஆண்டிலிருந்து அனுப்பிய கரும்புக்கான நிலுவைத்தொகையை பல ஆலைகளும் இதுவரை வழங்கவில்லை. குறிப்பாக தரணி சர்க்கரை ஆலையில் மட்டும் 2017-18இல் கரும்பு அனுப்பிய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இந்த நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறோம், கடந்த மார்ச் மாதத்தில் நாங்கள் நடத்திய போராட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர் மார்ச் 31க்குள் நிலுவைத்தொகையை பெற்றுத்தருவதாக சொன்னார், ஆனால் இதுவரை அந்த தொகை வந்தபாடில்லை. அதன்பின்னர் கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு இருந்ததால் போராட முடியவில்லை என்றாலும், தொடர்ந்து அமைதியான முறையில் போராடி வருகிறோம்.

image

ஒவ்வொரு முறையும் மாவட்ட ஆட்சியர் விரைவில் நிலுவைத்தொகையை தருவதாக உத்தரவாதம் தருகிறார், ஆனால் எங்களுக்கு அது கிடைக்கவில்லை. ஏற்கனவே விளைச்சல் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், விற்பனை செய்த கரும்புக்காவது நிலுவை பணத்தை கொடுத்தால்தான் அடுத்தகட்டமாக ஏதாவது பயிர் செய்யமுடியும். கரும்புக்காக வாங்கிய கூட்டுறவுக்கடன் ஒருபக்கம் ஏறிக்கொண்டிருக்கிறது, நகைக்கடன் எல்லாம் மூழ்கும் நிலையில் உள்ளது. இந்த சூழலில் எங்களுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகையை தராவிட்டால் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழல்தான் உருவாகும். மேலும் பல விவசாயிகள் தொழிலை விட்டே வெளியேறியும் வருகிறார்கள். கரும்பு கொள்முதல் செய்தால் 15 நாட்களுக்கும் பணத்தை தரவேண்டும், இல்லையென்றால் அதன்பின் ஒவ்வொரு நாளுக்கும் வட்டியுடன் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை தரவேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் அதனை அரசும் மதிப்பதில்லை, சர்க்கரை ஆலைகளும் மதிப்பதில்லை” என்கிறார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.