முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நாளை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய பங்கு இருக்கும் என்று அவர் கூறியிருந்த நிலையில், நாளை நடைபெற இருக்கும் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப் படுகிறது.

image

இந்நிலையில், கடந்த 31ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.அழகிரி கட்சித் தொடங்கினால் திமுக நான்காக உடையும் என்று பேசியிருக்கிறார். இது தமிழக அரசியலில் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இதுகுறித்து அரசியல் சதுரங்கம் நிகழ்ச்சி பற்றிய ஓர் அலசல்…

மு.க.அழகிரியை பொருத்தவரை தனிக்கட்சி தொடங்குவார். மீண்டும் திமுகவில் இணைவார். பாஜகவில் சேர்வதற்கான வாய்ப்பிருக்கிறது. ரஜினி கட்சித் தொடங்கினால் அதில் சேர்வார். ரஜினியோடு கூட்டணி வைப்பார் என பல செய்திகள் வெளிவந்த நிலையில், நான் எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப் போகிறேன். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று பேசியிருக்கிறார்.

image

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசும்போது அழகிரி கட்சி ஆரம்பித்தால் திமுக நான்காக உடையும் என பேசியிருக்கிறார். அதற்கு காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக இரண்டாக உடையும் என்று சொல்லியிருந்தார். அதற்கு எதிர்வினையாகத்தான் முதலமைச்சரின் பேச்சை நாம் பார்க்க வேண்டியதிருக்கும்.

கேள்வி: அதிமுக உடையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதற்கான எதிர்வினையாக முதலமைச்சர், அழகிரி கட்சித் தொடங்கினால் திமுக நான்காக உடையும் என்று அழகிரி குறித்து பேசியிருக்கிறாரா? 

வைகைச் செல்வன் (அதிமுக செய்தித் தொடர்பாளர்)

பதில்: ஏற்கெனவே மு.க.அழகிரி ஜனவரி 3ஆம் தேதி தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவரையும் சந்திக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த நிலையில் அவர் தனிக்கட்சி தொடங்குவரா இல்லையா என்று சொல்ல முடியாது. ஆனால் தனிக்கட்சி தொடங்கினால் அது திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக போய்விடும்.

image

திமுக இரண்டு மூன்று கூறுகளாக உடைவதற்கும் வாய்ப்பிருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக இரண்டாக உடைந்துவிடும் என்ற கருத்தை முன்வைத்தார். ஆனால் தற்போது உண்மையான சம்பவம் நடந்தேறி இருக்கிறது என்பதைத்தான் முதலமைச்சர் அப்படி குறிப்பிட்டார் என்று தெரிகிறது.

திமுக வலிமையாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். திமுக வலிமையாக இருக்கிறது என்ற மாயத்தோற்றம், மு.க.அழகிரி கட்சித் தொடங்கினால் அவைகள் உடைத்தெறியப்படும். சிதறுண்டு போவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. மு.க.அழகிரி எடுக்கும் முடிவுகளைப் பொருத்தே மாற்றங்கள் இருக்கும் என்பதைத்தான் முதலமைச்சர் தனது கருத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அதிமுக பலமிக்க ஒரு இயக்கமாக, மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று வெற்றிகரமான பயணத்தில் இருக்கிறார்கள். சின்னச் சின்ன உரசல்கள், சின்னச் சின்ன சிக்கல்கள், குடும்பத்தில் கூட ஏற்படுகிறது. இவைகளை வைத்தக் கொண்டு பெரிய பூதாகரமாக ஆக்க முனைந்தால் அவை தவறாகத்தான் போய்விடும்.

கேள்வி: திமுகவில் மு.க.அழகிரி நன்றாக வேரூன்றி இருக்கிறார். அவர் தனிக்கட்சி தொடங்கினால் கண்டிப்பாக திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்?

பொன்முடி (முன்னாள் அமைச்சர்)

பதில்: ஏற்கெனவே அதிமுக உடைந்தே போயிருந்தது. இன்னமும் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. ஒட்ட வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எங்களை பார்த்து திமுக உடைந்துவிடும் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. குறிப்பாக முதலமைச்சர் இதைப்பற்றி பேசுவதற்கு அவசியமே இல்லை. பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே நன்றாகத் தெரியும்.

image

இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் எதிர்த்து ஓட்டுப்போடும் அளவிற்கு பிரிந்து இருந்தார்கள். இப்படி இருக்கும்போது அதிமுக உடையும் என்பது இயற்கை. அதிமுக உறுதியில்லாத, தலைமை இல்லாத, தொண்டர்கள் இல்லாத ஒரு கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவில் வாரிசு அரசியல் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் எல்லா கட்சியிலும் வாரிசு இருக்கிறார்கள்.

அதிமுகவில் வாரிசு இல்லையா? ஓபிஎஸ் பையன் யாரு? ஜெயக்குமார் பையன் யாரு? கட்சிக்காக உழைத்தவர்கள் கட்சியில் வாரிசாக வரலாம். கட்சிக்காக உழைத்த குறிப்பிட்ட சிலரின் வாரிசுகள் கட்சியில் இருக்கக் கூடாதா. நாங்கள் கட்சியில் இருக்கிறோம் அதனால் எங்கள் பிள்ளைகள் கட்சியில் இருக்கக் கூடாது என்று விதியிருக்கிறதா.

உதயநிதி திரைப்பட நடிகர் அவர் போகின்ற இடமெல்லாம் பெரிய கூட்டம் கூடுகிறது. அவருக்கு கூட்டத்தைக் கூட்டும் கவர்ச்சி இருக்கிறது. அழகிரி கட்சி ஆரம்பிப்பதாக நேற்று இன்று பேசவில்லை. நான்கு ஐந்து ஆண்டுகளாக பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவரால் திமுகவிற்கு ஒன்றும் ஏற்பட்டு விடாது. அவர் திமுகவிற்கு வந்தாலும் ஒன்றும் ஏற்பட்டுவிடாது.

image

கேள்வி: அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான ஜெயக்குமார் சொல்லியிருந்தார், திமுகவின் தலைமையை மு.க.அழகிரி ஏற்பார் என்று. அதேபோல அமைச்சர் செல்லூர் ராஜூ, மிகப்பெரிய அரசியல் வலம் வருவார் அழகிரி என்று. ஆனால், நேரடியாக முதலமைச்சரே பேசியிருக்கிறார், மு.க.அழகிரி கட்சித் தொடங்கினாhல் திமுக நான்காக உடையும் என்று. இவர்கள் சொல்வதுபோல் மு.க.அழகிரியின் தாக்கம் இருக்குமா?

மாலன் நாராயணன் (பத்திரிகையாளர்)

பதில்: ஏற்கெனவே மு.க.அழகிரி தனக்கு இருந்த வாய்ப்புகளை தவறவிட்டு விட்டார் என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். அவர் திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஏழு ஆண்டுகளில் மறைமுகமாக கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருந்தாரா என்பது கூட தெரியாத சூழ்நிலையில்தான் அவர் இருந்தார்.

image

மீடியா வெளிச்சத்தில் இருந்து அவர் விலகியிருந்தார். கட்சியினர் அவரோடு தொடர்பு கொண்டால் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று சங்கடப்பட்டு சிலபேர் இருந்தார்கள். அவருடைய ஆதரவாளர்கள் என்று அறியப்பட்ட ராமலிங்கம் போன்றோர் கட்சிமாறி சென்றுவிட்டனர். அவர் இப்போது கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்றால் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுக நான்காக உடைவதற்கெல்லாம் வாய்ப்பில்லை. கட்சியில் இருக்கும் சிலர் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் போகலாம். அல்லது தேர்தல் முடிவுகளை வைத்து முடிவெடுக்கலாம். தென்மண்டலங்களைச் சேர்ந்த அவருடைய விசுவாசிகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் ஓரவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் என்று மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையை கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அனைவரும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். மு.க.அழகிரியின் தாக்கம் குறைவாக இருக்கும். ஓட்டுக்களை பிரிக்கக் கூடும். ஆனால், வரப்போகிற தேர்தல் என்பது மிகவும் நெருக்கமான போட்டியாக இருக்கும். சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி முடிவுகள் இருக்கும் அதை மு.க.அழகிரி மாற்றக் கூடும் என்று நான் நினைக்கிறேன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.