ஆர்யா ராஜேந்திரன்… கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக 21 வயதில் பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார். மேயர் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஆர்யாதான் நேற்றைய ட்ரெண்டிங். ஆனால், இந்த அறிவிப்பு ஆர்யாவுக்கு சற்று வித்தியாசமாக தெரியவந்துள்ளது. ஆர்யா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் மீடியாவில் வெளியானபோதும், அவருக்கு சொன்னது அவரின் நண்பர்கள்தான். ஆனால், நண்பர்கள் தன்னை ப்ராங்க் செய்வதாக நினைத்து ஆர்யா அதை முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால், கட்சியில் இருந்து முறையாக அவரிடம் சொன்னபோதுதான் நம்பியிருக்கிறார். அலகாபாத்தைச் சேர்ந்த அபிலாஷ் குப்தா நந்தினி என்பவர் தனது 23 வயதில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதே இதற்கு முன் வரலாறாக இருந்தது. ஆனால், நேற்று இந்த வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார் 21 வயதுகொண்ட ஆர்யா.

யார் இந்த ஆர்யா?!

திருவனந்தபுரத்தில் உள்ள ஆல் சைன்ட்ஸ் கல்லூரியில் (All Saints College) பிஎஸ்சி கணிதவியல் (B.sc Methametics) இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் ஆர்யாவின் தந்தை கே.ராஜேந்திரன் ஒரு எலக்ட்ரிஷியன். தாய் ஸ்ரீலதா எல்.ஐ.சி ஏஜெண்ட். சகோதரர் அரவிந்த் அரபு நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

திருவனந்தபுரத்தில் ஒரு சிறிய வீட்டில் மாதத்திற்கு ரூ.6,000 வாடகை செலுத்தி வசித்து வருகிறது ஆர்யாவின் குடும்பம். குடும்பத்தின் நிதிச் சூழல்கள் அவ்வளவு பெரிதாக இல்லை. இதனால்தான் அவரின் சகோதரர் அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தின் நிதி நிலைமை சரி இல்லை என்றாலும் இவர்கள் கட்சிப் பணிகளை ஒருபோதும் கைவிடவில்லை. ஆம், இவர்களின் குடும்பமே கம்யூனிஸ்ட் குடும்பம்.

image

அதுவும் ஆர்யாவுக்கு சிறுவயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சிறுவயதில் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர், தனது 6 வயதிலேயே குழந்தைகளுக்கான அமைப்பான பாலசங்கத்தில் உறுப்பினராக இருந்து கட்சியுடன் நேரடி தொடர்பு கொண்டு பணியாற்றி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலசங்கத்தின் தலைவராகவும் பதவியேற்றார் ஆர்யா. இதில் ஆர்யாவின் செயல்பாடு பேசப்படவே, இந்திய மாணவர் கூட்டமைப்பு (சிபிஎம் மாணவர் பிரிவு) உறுப்பினரானர்.

இப்போது இந்த கூட்டமைப்பின் அலுவலக பொறுப்பாளராக பதவியில் இருக்கும் ஆர்யா, சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் முடவன்முகல் வார்டு கவுன்சிலராக வெற்றிக்கனியை பறித்தார். இந்த முறை கேரளாவின் உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் பாதி இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திருவனந்தபுரம் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஆர்யாவுடன் சேர்ந்து மேலும் இரண்டு பெண் உறுப்பினர்கள் சிபிஎம் சார்பில் தேர்தலில் நின்றனர். இவர்கள் இருவருமே ஆர்யாவுக்கு சீனியர்கள். இவர்கள் இருவருமே தேர்தலில் தோல்வியை தழுவ, ஆர்யாவுக்கு அதிர்ஷ்ட காற்று வீசியது. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஒரே வாய்ப்பாக ஆர்யா இருக்க, அவருக்கு மேயர் பதவியை ஒதுக்கியது கம்யூனிஸ்ட் தலைமை. இந்த வாய்ப்பு வரும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என ஆர்யாவே சந்தோசஷதை பகிர்ந்துள்ளார்.

சிபிஎம் திருவனந்தபுரம் தலைவரும் அமைச்சருமான கடகம்பள்ளி சுரேந்திரன், ஆர்யாவை சிறு வயதிலிருந்தே பார்த்து வருவதாக கூறுகிறார். “இளைஞர்களும் புதிய தலைமுறையினரும்தான் நாட்டின் எதிர்காலம். வெளிப்படையான அரசியல் அமைப்புகளின் தேவை குறித்து அவர்களுக்கு தெளிவு இருக்கிறது, அவர்களுக்கு பெரிய கனவுகளும் பார்வையும் உள்ளன. ஆர்யாவுக்கு அனுபவம் உண்டு, அவள் மிகவும் நல்லவர். இளம் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மாவட்ட சேகரிப்பாளர்களாக அற்புதமான பணிகளை வழங்கியதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருப்பதால் அவளுடைய வயது கவலைக்கு ஒரு காரணம் அல்ல” என்று கூறி பாராட்டு தெரிவித்துள்ளார்.

image

தனது வெற்றி குறித்து பேசியுள்ள ஆர்யா, “இளம் வயதிலேயே அரசியலுக்குள் வந்துவிட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலசங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தேன். பாலசங்கத்தில் எனது சுறுசுறுப்பான பங்கு காரணமாக, நான் இந்திய மாணவர் கூட்டமைப்புக்கு (சிபிஎம் மாணவர் பிரிவு) அழைத்துச் செல்லப்பட்டேன், நான் அதன் மாநிலக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கிறேன். கட்சி எனக்கு எந்த பொறுப்பை கொடுத்தாலும், அதை மகிழ்ச்சியுடன் செய்வேன். பாலசங்கத்தில் இருந்து என அரசியல் பயணம் ஆரம்பித்து. இதனால் மேயர் ஆன பின்பு குழந்தைகளின் கல்விக்கு முக்கியவதும் கொடுத்து செயல்படுவேன்” எனக் கூறும் ஆர்யா தனது இன்ஸ்பிரேஷனாக குறிப்பிடுவது கேரள சுகாதார மந்திரி கே.கே ஷைலாஜாவை.

சிபிஎம் கட்சியில் இருந்தாலும் ஆர்யா மதத்திற்கு எதிராக ஒரு கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை, கட்சி சித்தாந்தம் இருந்தபோதிலும், எப்போதாவது தனது தாயுடன் கோயில்களுக்கும், தேவாலயத்திற்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். “நான் நேர்மறை ஆற்றலை நம்புகிறேன், அதுவே எனக்கு கடவுள். ஆனால் நான் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நிற்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.

எதிர்பாராத வாய்ப்பாக மேயர் பதவி கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்யா இருந்தாலும், ஒரு கவலையும் உள்ளதாக கூறுகிறார். அது தனது கல்வி வாழ்க்கையை ஒதுக்கி வைக்கவேண்டும் என்பதே. ஆர்யா தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டவுடன் தொடர்ந்து வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாது என்று வருத்தப்படுகிறார். எனினும் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் மிகவும் உதவியாக இருப்பதால் எனது படிப்பைத் தொடர ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன் என்று கூறியுள்ளார்.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.