அனைத்து கிராமங்களுக்கும் மருத்துவர்கள் நேரடியாகச் செல்வதை உறுதிப்படுத்தும் விதமாகவும், இதற்காக, ஒவ்வொரு மருத்துவருக்கும் சில கிராமங்களை ஒதுக்கீடு செய்தும் ‘ஃபேமிலி டாக்டர்’ கான்செப்ட்டில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜெகன் மோகன் அரசு புதிய மருத்துவ வசதித் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை அடுத்த ஏலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மர்ம நோய் பரவி நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நலம் குன்றினர். ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டே நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம் இருந்த நிலையில், ஆந்திர மக்களை இந்த மர்ம நோய் அச்சம் கொள்ள வைத்தது.

எனினும், இதன்பிறகு நடந்த ஆய்வில் கிராம மக்கள் பயன்படுத்திய தண்ணீரிலும் பாலிலும் ஈயம் போன்ற ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. முதல்கட்ட தகவலில் ஈயம் கலந்திருப்பது உறுதியான நிலையில், கலப்படம் எப்படி நடந்தது என்பது தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது.

image

இதற்கிடையே, எதிர்காலத்திலும் இதுபோன்று சம்பவம் நடந்துவிட கூடாது என்பதற்காக தற்போது ஆளும் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு, ‘பேமிலி டாக்டர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களின் வீடு தேடி சுகாதார வசதி சென்றடையும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, “கிராமப்புறங்களில் மருத்துவ வசதி இல்லாததை மக்கள் உணரக்கூடாது என்பதற்காக, மருத்துவர்கள் கிராமங்களுக்கு தவறாமல் வருவதை இந்தத் திட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்படும். ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு சில கிராமங்கள் ஒதுக்கப்படும், அவர் கட்டாயமாக இந்த ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை செல்லவேண்டும்.

இது கிராமவாசிகளுடன் பழகுவதற்கு மருத்துவருக்கு உதவும். மேலும், அவர் மக்களின் சுகாதாரத் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியும். அந்த கிராமவாசிகள் எந்த வகையான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் மருத்துவர் அறிந்திருப்பார். ஒரு மருத்துவர் ஒரு கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம், அவருடன் ஆரோக்யா மித்ரா மற்றும் ஆஷா திட்டம் போன்ற சுகாதார தொழிலாளர்கள் மற்றும் 104 ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை கண்டிப்பாக செல்லும்.

image

இப்படி செய்வதால் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரு குடும்ப மருத்துவரைப் போலவே கிராமங்களுக்குச் செல்லும் மருத்துவர்கள் இருப்பர். ஏனென்றால், ஒவ்வொரு கிராமத்திலும் நோயாளிகள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பற்றி மருத்துவருக்கு புரிதல் இருக்கும். ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலையையும் மருத்துவர்கள் அவ்வப்போது அவருக்கு வழங்கிய சுகாதார அட்டையில் பதிவு செய்ய வேண்டும். இது சிறந்த சிகிச்சைக்காக நோயாளியை ஒரு பெரிய மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும்போது இது உதவும்” எனக் கூறினார்.

அத்துடன், `பேமிலி டாக்டர்’ கான்செப்டுக்கு தேவையான உள்கட்டமைப்பை மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை வழங்க வேண்டும் என்றும், ஆம்புலன்ஸ், மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கு தேவையான பிற உபகரணங்கள் ஆகியவற்றைக் கூட்டவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 12 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்தவும், 2021 மார்ச் 31 ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் கிராம க்ளினிக்குகள் அமைக்கும் பணிகளை முடிக்கவும், 2021 ஜனவரி இறுதிக்குள் ஒய்.எஸ்.ஆர் நகர சுகாதார க்ளினிக்குகளைத் தொடங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.