இங்கிலாந்தில் தற்போது பரவிவரும் உருமாற்றமடைந்த புதிய வகை வைரஸ் கவலைக்குரியதா, அதன் வீரியம் எத்தகையது என்பது குறித்த ஆராய்ச்சியாளர்களின் பார்வையை உள்ளடக்கிய கட்டுரை இது…

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் எளிதாக பரவுவதற்கான அதிக காரணிகளைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி வைரஸ் நிபுணர்கள் கூறுகையில், “எளிதாகவும் விரைவாகவும் பரவுவதற்கான காரணம் இதுவரை தெளிவாகக் கண்டறியப்படவில்லை. அவை தடுப்பூசிகளின் பலன்களை பாதிக்குமா அல்லது நோய்த்தொற்றைப் பரப்புமா என்பது அடுத்தடுத்த ஆய்வு முடிவுகளில்தான் தெரியவரும்.

பொதுவாக, வைரஸ்களைப் பொறுத்தவரை, அவை பரவப் பரவ பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். அதனால்தான் வருடந்தோறும் புதிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கடந்த ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே அது உருமாற்றம் அடைந்துகொண்டேதான் இருக்கிறது” என்கின்றனர்.

புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கத்தால் இங்கிலாந்தில் புதியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன். மேலும், வைரஸ் பரவலைத் தடுக்க பல ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் இங்கிலாந்துக்குச் செல்லும் விமான சேவையை நிறுத்தி இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. சில நாடுகள் சேவையைக் கட்டுப்படுத்தி இருக்கின்றன.

image

சமீபத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள தொற்றின் தாக்கம் என்ன?

தற்போது பரிணாம மாற்றமடைந்துள்ள புதிய வைரஸானது மற்ற வைரஸ்களைவிட எளிதில் பரவக்கூடிய வகையில் இருப்பதாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இவை மிகவும் ஆபத்தானவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கின்றனர். மேலும், இந்த வைரஸானது பரவுவதில் அதிக வீரியம் காட்டுகிறது என்றும், டிசம்பர் மாதத்துக்குள் லண்டனில் 60% பேருக்கு நோய்த்தொற்று ஏற்படும் என்றும் பிரிட்டிஷ் அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் பாட்ரிக் வால்லன்ஸ் கூறியிருக்கிறார்.

இந்தப் புதிய வகை பரிணாமத்தில் பல பிறழ்வுகள் இருக்கின்றன. அதில் பலவற்றில் வைரஸ்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளக் கூடியதும், செல்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுமான ’ஸ்பைக்கி புரதங்கள்’ இருக்கின்றன. அந்த ஸ்பைக்குகள்தான் தற்போதைய தடுப்பூசிகளை குறிவைத்துள்ளது.

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் டாக்டர் ரவி குப்தா, இதுகுறித்து கவலைப்படுவதாகக் கூறியிருக்கிறார். மேலும், அவரும் பல ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இதுகுறித்து தங்களுடைய வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டதாகவும், ஆனால் அது முறையாக மதிப்பாய்வு செய்யப்படாமல், மற்ற பத்திரிகைகளில் வெளியிடப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

image

இந்தப் பரிணாம மாற்றங்கள் எவ்வாறு உருவாகின்றன?

பொதுவாகவே வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி அடையும்போது தங்கள் மரபணுவில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது நாடுகளில் புதிதாக பரவும்போது பொதுவாகக் காணப்படக்கூடிய மாற்றம்தான்.

இதுதான் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள கொரோனா வைரஸிலும் நடக்கலாம் என்று சமீபத்திய சான்றுகள் எடுத்துரைப்பதாக சியாட்டிலைச் சேர்ந்த உயிரியல் நிபுணரும், மரபணு வல்லுநருமான ட்ரெவர் பெட்ஃபோர்டு கூறியிருக்கிறார். மேலும், தற்போது பலவகை தோற்றங்கள் மற்றும் வகைகளைக் கொண்ட வைரஸ் பரவலைப் பார்க்கமுடிகிறது. இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு எதிர்ப்பைக் காட்டுவதாக இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

image

வேறு என்னென்ன மாற்றங்கள் உருவாகி இருக்கின்றன?

ஏப்ரல் மாதத்தில் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மரபணு மாற்றங்களைக்கொண்ட ஒரு வைரஸைக் கண்டறிந்தனர். இது சுமார் இரண்டு மடங்கு தொற்றுநோயைப் பரப்பக்கூடிய வீரியம் கொண்டதாக இருப்பதாக அவர்கள் கூறினர். இந்த வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட 6000 பேருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. அதில், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் டென்மார்க்கில் அதிக பாதிப்புகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் மற்றும் தென்னாப்பிரிக்காவில் அந்த வைரஸின் பரிணாம வளர்ச்சியில் தற்போது மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் ஒரு வைரஸ் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மாற்றங்களை உருவாக்கியுள்ளதாக டாக்டர் குப்தா கூறுகிறார். இதை ‘’variant under investigation’’ என்று அழைக்கின்றனர். இதனுடைய தாக்கங்கள் குறித்து இன்னும் தெரியவில்லை.

image

ஏற்கெனவே பழைய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் புதிய வைரஸ் பாதிக்குமா? அது தடுப்பூசியின் வீரியத்தை குறைத்துவிடுமா?

அநேகமாக தடுப்பூசி வீரியம் குறையாது என்கிறார் அமெரிக்க உணவு மற்று மருந்து ஆணையர் ஸ்காட் காட்டிலேப். டாக்டர் குப்தாவும் அதற்கு சாத்தியமில்லை என்கிறார்.

அமெரிக்கத் தேர்தலில் ஜோ பைடனின் பொது சுகாதாரத் துறையில் தேர்வாகியுள்ள விவேக் மூர்த்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “தற்போது உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி வீரியமானதாக இருக்காது என்ற கருத்தை நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்றார். ஸ்பைக் புரதமுள்ள வைரஸ் தாக்கம் உள்ளவர்களுக்கும் இந்தத் தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது என்றார்.

அதேசமயம், தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு புதிய உருமாற்றம் அடைந்துள்ள வைரஸ்களின் வீரியத்தைக் குறைக்கும் வாய்ப்பு குறைவாகத்தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதுள்ள வைரஸுகள் தடுப்பூசியின் நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து தப்பிக்கக் கூடியதாக இருப்பதாக அமெரிக்க தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர் மோன்செஃப் ஸ்லௌவி கூறியிருக்கிறார்.

பெட்ஃபோர்டு கூறுகையில், வைரஸுகளின் மரபணுவில் பிறழ்வுகள் அதிக அளவில் இருக்கும்போது தடுப்பூசிகள் குறை மதிப்பிற்கு உட்படுத்தப்படும். எனவே, காலத்திற்கு ஏற்றவாறு தடுப்பூசிகளை மேம்படுத்த வேண்டும். இந்த மாற்றங்களை உன்னிப்பாக கவனிப்பது அவசியம் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆக, இந்தப் புதிய வகை கொரோனா வைரஸைப் பொறுத்தவரையில், கவலைகொள்வதைக் காட்டிலும், அரசுகளும் ஆராய்ச்சியாளர்களும் கவனத்துடன் அணுக வேண்டியதே இப்போதைய நிலையாக இருக்கிறது.

தகவல் உறுதுணை: TOI

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.