சோழிங்கநல்லூரில் சிதிலமடைந்த குழந்தைகள் காப்பகத்தை புனரமைத்து, வண்ணமயமாக மாற்றிய LGBTQ தன்னார்வலர்களின் செயல் கவனம் பெற்றுள்ளது.

நாகரிக உலகம் அசுர வளர்ச்சி கண்டபோதிலும், மனிதனுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் என்னவோ இன்னும் குறைந்தபாடில்லை . அதன் பிரதிபலிப்புதான் சமூகத்தில் அன்றாடம் நிகழும் சாதிய ஏற்றத்தாழ்வு சம்பந்தமான பிரச்னைகளும், பால் புதுமையினருக்கு (LGBTQ )எதிரான துன்புறுத்தல்களும்.

நாம் வாழும் ஒரு சாமானிய வாழ்கையை, அவர்களும் சகஜமாக வாழ இந்தச் சமூகம் ஏனோ இன்று வரை இடம் கொடுக்க மறுத்து வருகிறது. அதற்கு எதிராக அவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம்தான் ஒற்றுமை. இந்தச் சமூகம் அவர்களை ஓரமாக ஒதுக்கி வைத்தாலும், அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை இன்று பலருக்கும் உதவிக்கரங்களை நீட்டி வருகிறது. அப்படி இவர்கள் நீட்டிய ஒரு உதவிக்கரத்தால் சோழிங்கநல்லூரில் சிதலமடைந்த குழந்தைகள் காப்பகம் இன்று வண்ண ஓவியங்களால் மிளிர்கிறது

மகிழ்வன் ஃபவுண்டேஷன் என்கிற தன்னார்வ நிறுவனம், அதன் ‘மகிழ்வன் உங்களுக்காக’(MAgizhvan For You)திட்டத்தின் ஒரு பகுதியாக, ஓவியத் திட்டதை (MAFY Art Project)தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம், தற்போது சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு சிதிலமடைந்த குழந்தைகள் காப்பகத்தை புனரமைத்துள்ளனர். கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 19 வரை இதற்காக உழைத்த இவர்கள், அந்த காப்பகத்தின் தரை, சுவர்கள், கதவுகள் போன்றவற்றை சரிசெய்தது மட்டுமல்லாமல் குழந்தைகளை கவரும் வண்ணம் சுவர்களில் வண்ண ஓவியங்களை தீட்டியுள்ளனர். இதன் மூலம், காப்பகத்தையும், அதில் வாழும் சிறுவர்களின் வாழ்வையும் புத்துணர்வு அடையச் செய்துள்ளனர். இதைப்போல, இன்னும் பல திட்டங்களையும் MAFY ஓவியத் திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் செயல்படுத்தவுள்ளனர்.

image
 

மகிழ்வன் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த LGBTQ செயற்பாட்டாளர் இயேசு ராஜா என்பவரால்  தொடங்கப்பட்ட சமூக தன்னார்வத் தொண்டு நிறுவனம். இது பால்புதுமையினர் என்று அழைக்கப்படும் LGBTQ சமூகத்தினருக்கான வேலைவாய்ப்பு, கல்வி, மனநல ஆலோசனை மற்றும் அவர்களின் உரிமை மீட்புக்காக தொடங்கப்பட்ட நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

image

இந்நிறுவனம், ‘மகிழ்வன் உங்களுக்காக’ (MAgizhvan For You)எனப்படும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது கோவிட் தொற்றாலும், இதர துன்பங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள LGBTQ நபர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது.

பால்புதுமையினரும், ஆதரவாளர்களும் இணைந்து செயல்படுவதன் மூலம், பால்புதுமையினருக்கான ஆதரவும், சமஉரிமையும், அன்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இத்திட்டம் உதவியுள்ளது.

– கல்யாணி பாண்டியன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.