சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் 397 ஆண்டுகளுக்கு பின், மிக நெருக்கமாக வரும் அரிய வானியல் நிகழ்வு இன்று நிகழ்கிறது.

1623 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு அதிசயம் சரியாக 397 ஆண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் நிகழவுள்ளது. இன்று மாலைப் பொழுதில் மேற்கு திசையை உற்று நோக்கினால் நட்சத்திரங்கள் போல பெரும் ஒளி புள்ளிகள் வானில் தென்படும். இரு கிரகங்கள் ஒரு பாகைக்கும் குறைவான தூரத்தில் மிக நெருக்கமாக வருவதே இந்த வானியல் அதிசயத்திற்கு காரணம். அந்த இரு கிரகங்களும் மக்களால் மிகவும் அறியபட்டவைதான். ஒன்று வியாழன், மற்றொன்று சனி.

இன்று வியாழனும், சனியும் நெருக்கமாக வரும் நிகழ்வு மட்டுமல்ல, எரி நட்சத்திரங்கள் பூமியை நோக்கி விழும் வானியல் ஜாலத்தையும் காணமுடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டின் நீண்ட இரவு கொண்ட நாளாகவும் இன்றைய நாள் அமையவுள்ளது. அதே நேரம் கிரகங்கள் நெருக்கமாக வருவதாலும், எரி நட்சத்திரங்கள் மழையாக பொழிவதாலும், பூமியின் வளி மண்டலத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது என்கின்றனர் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.

image

இது குறித்து பேசிய பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் செளந்தரராஜ பெருமாள், “வரும் 21ஆம் தேதி இரு கோள்களும் நெருங்கி வருகின்றன. வியாழன் பூமியில் இருந்து 88.6 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. சனி கோள் 162 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. இரு கோள்களுக்கும் இடைப்பட்ட தூரம் 73 கோடி கி.மீ. ஒரு டிகிரிக்கும் குறைவான தூரத்தில் இரு கோள்களும் வருகின்றன. பார்வை தூரத்தில் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல தெரியும்.

20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இரு கோள்களும் நெருங்கும். 397 ஆண்டுகளுக்குப் பின் ஒரு டிகிரிக்கும் குறைவாக நெருங்குகின்றன. அடுத்தாக வரும்2080 ஆம் ஆண்டு இந்த வானியல் அதிசயம் நிகழும். தொலைநோக்கி மூலம் காணும்போது இரு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல காணமுடியும். வெறும் கண்களால் காணும்போது அவை பெரும் ஒளிப் புள்ளிகளாக தென்படும்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.