புதுக்கோட்டை அருகே தாந்தாணியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முருகன். மனைவி மற்றும் இரு மகள்கள் என சின்னக் குடும்பம். தியேட்டரில் வாகனங்களுக்கு டோக்கன் போடும் வேலை முருகனுக்கு. கூன் விழுந்த முதுகோடு ஒரு காலை தன் கையால் தாங்கியவாறு வீட்டிலிருந்து 2 கி.மீ தூரம் உள்ள எரிச்சிக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் ஏறி அறந்தாங்கிக்குச் சென்று சிரமப்பட்டு தியேட்டர் வேலைபார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

வாசகர்களால் நெகிழும் மாற்றுத்திறனாளி குடும்பம்

லாக்டெளனால் தியேட்டர் வேலை இல்லாமல் போக, கிடைத்த சொற்ப வருமானமும் கிடைக்காமல் போய் சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலைக்கு வந்தது அந்தக் குடும்பம். ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே யாசகம் பெற்று சாப்பிடும் நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்த நாம், “யாசகம் பெற்று ஒரு வேளைச் சாப்பாடு…தவிக்கும் மாற்றுத்திறனாளி குடும்பம்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதைப் படித்த நம் விகடன் வாசகர்கள் பலரும் முருகன் குடும்பத்துக்கு உதவ முன் வந்தனர். ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன், ரஜினி மக்கள் மன்றம், சூர்யா ரசிகர் மன்றம், வள்ளலார் காப்பகம் மற்றும் சில தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முருகன் குடும்பத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்தனர். மளிகைப் பொருள்கள் மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளி முருகனுக்கு வாழ்வாதார உதவி செய்ய நினைத்த வாசகர்கள் முருகனின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பத் தொடங்கினர்.

உதவி செய்த விகடன் வாசகர்கள்

வாசகர்களின் மூலம் ரூ.1,82,000 பணம் கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு விகடன் வாசகர்கள் முருகனுக்கு சொந்தமாக ஒரு மளிகைக் கடை ஏற்படுத்திக் கொடுத்து முருகனின் குடும்பத்தை நெகிழ வைத்திருக்கின்றனர். முருகனின் குடும்பத்துக்கு ஆரம்பத்தில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்துவந்த ராதிகா டீச்சர், வாசகர்கள் சார்பில் மளிகைக் கடையைத் திறந்து வைத்தார். முருகனின் மனைவி புவனேஸ்வரியின் முகத்தில் சோகம் விலகி இப்போதுதான் சந்தோஷம் பூத்துக்கிடக்கிறது.

உதவி குறித்து நம்மிடம் பேசிய முருகனின் மனைவி புவனேஸ்வரி, ”கொரோனா பிரச்னைக்கு முன்னாடி வரைக்கும், வீட்டுக்காரருக்கு கொறஞ்ச வருமானம் கிடைச்சாலும், அத வெச்சு குடும்பத்தை ஓட்டிக்கிட்டு இருந்தேன். அவரு தினசரி வேலைக்குப் போனாதான் சாப்பிடவே முடியும். கொரோனாவால தொடர்ந்து வேலை இல்லாமப் போனதால ஒண்ணுமே செய்ய முடியாமப் போயிருச்சு. எனக்குக் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செஞ்சதுக்கு அப்புறம் என்னாலயும் பெருசா எந்த வேலையும் செஞ்சு உழைக்க முடியல. இடை, இடையில எனக்கு ஒடம்புக்கு முடியாம வந்திரும். அவருக்கும் சிறுநீரகப் பிரச்னை இருக்கு. இதோட, கொரோனாவால சாப்பாட்டுக்கே பெரும் பிரச்னைங்கிற நிலை வந்துடுச்சு.

ஆனந்த விகடன் வாசகர்களால் நெகிழும் முருகன் குடும்பம்..!

புதுக்கோட்டை அருகே தாந்தாணியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகன்…

Posted by Aval Vikatan on Wednesday, December 16, 2020

ரேஷன் அரிசிய வடிச்சிடுவோம். கொழம்புக்கு வழியில்லாமப் போயிடும். பக்கத்து வீடுகள்ல யாசகமா குழம்பு வாங்கிக்குவோம். நமக்கு இல்லையின்னாலும், பிள்ளைகளைப் பட்டினிபோட முடியாதுல? அதனால, கௌரவம் எல்லாம் பார்க்காம கேட்டு வாங்கிக்கிட்டு வந்திடுவோம். அதே நேரத்துல எங்களோட கஷ்டத்தைப் பார்த்துட்டு பக்கத்து வீட்டுக்காரங்களும் முகம் கோணாம கொடுத்திடுவாங்க. நாங்க ரொம்பக் கஷ்டப்படுகிற நேரத்துல எங்க மக பள்ளிக்கூடத்துல டீச்சரா இருக்குற ராதிகா டீச்சர் செஞ்சாங்க.

ஒடம்பு சரியில்லாமப் போன என் வீட்டுக்காரருக்கு வைத்தியம் பார்க்க உதவுனாங்க. கொஞ்ச நாளுக்கு முன்னாடிவரைக்கும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நிலை. இப்போ, முகம் தெரியாத சொந்தங்கள் உதவியால ரொம்ப நாள் சமைச்சு சாப்பிடுற அளவுக்குப் பொருள்கள் கிடைச்சிருக்கு. இப்பயெல்லாம் எங்க வீட்டுலயே குழம்புவெச்சு சாப்பிடுறோம். மூணு வேளையும் வயிறு நெறையுது.

சம்பாதிக்கிறத சேமிச்சு வெச்சு சொந்தமா ஒரு பெட்டிக்கடை வெச்சிப்புடணும்ங்கிறதுதான் வீட்டுக்காரரோட ரொம்ப நாள் ஆசை. எங்கேயோ முகம் தெரியாத சொந்தங்களால இப்போ எங்களுக்கு இந்த மளிகைக்கடை கிடைச்சிருக்கு. அதுவும் டீச்சரே கையால எங்க கடையைத் திறந்து வெச்சதுல எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

வாசகர்களால் நெகிழும் மாற்றுத்திறனாளி குடும்பம்

நாங்க மளிகைக்கடை வைப்போம்னு எல்லாம் கனவுலகூட நெனச்சுப் பார்க்கல. இன்னைக்கு கடையில வியாபாரம் பார்க்க ஆரம்பிச்சுட்டோம். எங்களுக்கு இத்தனை உதவிகளையும் செஞ்ச விகடன் வாசகர்களையும் விகடனையும் காலம் உள்ளவரைக்கும் மறக்க மாட்டோம். நன்றிக்கடன் பட்டிருப்போம். எங்களுக்கு எழுதப் படிக்க எல்லாம் தெரியும். இந்த உதவி போதும்… இதவெச்சு பொழச்சிக்கிடுவோம். எங்க பிள்ளைகளையும் நல்லபடியா கரை சேர்த்திடுவோம். இந்த மளிகைக்கடையை பெருசாக்கி நல்லா வாழ்ந்துகாட்டுவோம்” என்கிறார் நம்பிக்கை துளிர்க்க.

அன்று சமைப்பதற்கு மளிகைப் பொருள்கள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த குடும்பம், விகடன் வாசகர்களின் உதவிக் கரங்களால் இன்று மளிகைக் கடையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். உதவும் நெஞ்சங்களுக்கு நன்றி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.