தமிழக தேர்தலில் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, திமுக அல்லது மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கவனத்தில் வந்த ஒரு கட்சி, ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 14 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM – அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி) 5 இடங்களை வென்றது. கடந்த 2015-ம் ஆண்டு பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முதலாக ஓவைசியின் கட்சி களம் கண்டது. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் கூட கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி. இதோ 2020ல் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி. இந்த சீரான வெற்றிதான் ஒவைசி கட்சியை கவனிக்க வைத்தது.

image

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் 51 இடங்களில் போட்டியிட்டு 44 வார்டுகளை வென்றது ஏ.ஐ.எம்.ஐ.எம். தற்போது ஒவைசியின் பார்வை மேற்கு வங்கத்தின் மீதும், தமிழகத்தின் மீதும் பதிந்துள்ளது. தமிழகத்தில் எந்தக் கூட்டணியை ஒவைசி கையில் எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பான ஆலோசனையிலும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஈடுபட்டது.

அதன்படி, ஒவைசியின் பார்வை திமுக மீதே உள்ளது எனத் தகவல் வெளியாகியது. பாஜக-வுக்கான எதிர் அரசியல் என்பதை முன்வைக்கும் ஒவைசி, அதே நிலைப்பாட்டில் இருக்கும் திமுகவுடன் கைகோக்கவே முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிகிறது. அதேநேரத்தில் சிறிய அல்லது புதிய கட்சிகளுடனான கூட்டணிக்கும் வழியுண்டு என்கிறது ஒவைசி தரப்பு. அதாவது, தமிழகத்தில் 3-ம் அணிக்கும் விருப்பம் தெரிவிக்கிறது ஏ.ஐ.எம்.ஐ.எம்.

image

அந்த காய்நகர்த்தலாக, மக்கள் நீதி மய்யத்தையும் தன் திட்டத்தில் வைத்துள்ளது. வெளியான தகவலின்படி, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்க ஒவைசி விருப்பம் தெரிவிக்கிறார் என்பதுதான் தற்போது கவனிக்கத்தக்கது.

இந்த கூட்டணி தகவல்கள் குறித்து ‘தி இந்து’ நாளிதழுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர் வக்கீல் அகமது, ”எங்கள் தலைவர் கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை. எங்கள் தரப்பு மூலம் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். திமுகவுடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. கூட்டணி உறுதியாகிவிட்டால் நிச்சயம் அறிவிப்போம்” என கூறினார்.

image

ஒருவேளை திமுக கூட்டணி திட்டம் சொதப்பினால் ஓவைசியின் திட்டம் 3-ம் அணியை நோக்கி செல்லுமா என்ற கேள்விக்கு பதிலளித்த வக்கீல் அகமது, ”அப்படி நடந்தால், மூன்றாம் அணி குறித்து யோசிப்போம்” எனத் தெரிவித்தார். முக்கியமான ஒரு கருத்தை பதிவிட்ட அவர், ”இஸ்லாமியர்கள் ஓட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். அரசியலில் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதே நடைமுறையாக உள்ளது. அதனை மட்டும் மறுக்க முடியவில்லை” எனக் குறிப்பிட்டார். இந்தக் கருத்து மூலம் உரிமையை நோக்கி தாங்கள் பயணப்படுவதாகவும், அதற்கு ஏற்பவே கூட்டணி இருக்கும் என்றும் வக்கீல் அகமது குறிப்பிடுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இப்படியாக, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுடன் கூட்டணி சேருமா அல்லது மூன்றாம் அணியாக மக்கள் நீதி மய்யத்துடன் கைகோக்குமா என்பதற்கு வரும் காலங்களில் பதில் கிடைக்கும். அதேவேளையில் நாம் கவனிக்க வேண்டிய இன்னும் சில விஷயங்களும் உள்ளன.

image

பீகார் தேர்தலின் முடிவை வைத்து, காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகள் ஓவைசியை பாஜகவின் `பி’ டீம் என கூறினர். அதற்கு காரணம், மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், ஆர்ஜேடியின் வெற்றியை சில தொகுதிகளில் ஓவைசியின் கட்சி பிரித்தது. இதனால், தேர்தல் முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. இதையடுத்தே இப்படி குற்றச்சாட்டை சுமத்தினர். தேர்தல் முடிவுகள் வந்தபோது மட்டுமல்ல, மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கும்போதே இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் சொல்ல ஆரம்பித்தது.

image

வடக்கே அப்படி ஒரு குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைக்கும் நிலையில், தமிழகத்தில் திமுகவுடன் ஒவைசி இணைந்தால் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. அதேவேளையில், வடக்கே ஒவைசியை பாஜக பி டீம் என்கின்றனர். அப்படி இல்லை என்கிறார் ஒவைசி. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தை பாஜகவின் பி டீம் என்கின்றனர். அதற்கு கமல் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் ஒவைசியும், கமலும் இணைந்தால் அந்தக் கூட்டணியை திமுக கூட்டணி கட்சிகள் எப்படி வழிநடத்தும்? ஓட்டு பிரிப்புதான் ஒவைசியின் வேலை என சொல்லும் அவரது கட்சிக்கு எதிரானவர்களின் கருத்து தமிழகத்தில் எடுபடுமா? – பதில் வெகு தொலைவில் இல்லை. காத்திருப்போம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.