“முடிந்தால் எனது ஆட்சியைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திப் பாருங்கள். என்ன நடக்கிறது என நான் பார்க்கிறேன்” என்று பாஜகவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்தார்.

கொல்கத்தாவில் பேரணி ஒன்றிய பேசிய மம்தாவின் இந்தப் பேச்சு, பாஜக – திரிணாமுல் மோதலில் எரிகிற தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவதுபோல் அமைந்துள்ளது.

கொல்கத்தாவில் சமீபத்தில் டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக பொதுக் கூட்டத்துக்கு வந்த பாஜக தேசிய தலைவர் நட்டாவின் கான்வாய் கற்களால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் முகுல் ராய் உள்ளிட்டோருக்கு சிறு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இருந்து மேற்கு வங்க அரசியல் களம் அனல் தகித்து வருகிறது. பாஜக தலைவர்கள், திரிணாமுல் தலைவர் என மாறி, மாறி ஒருவருக்கொருவர் வசைபாடி வருகின்றனர். அனுதினமும் ஆளும் டி.எம்.சி அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் நிகழ்ந்து வருகிறது.

image

ஆளும் டி.எம்.சி அரசுக்கு, மத்திய பாஜக அரசு குடைச்சல்கள் கொடுக்கத் தொடங்கியுள்ளது. நட்டா கார் தாக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரை நேரில் விசாரணைக்கு அழைத்தது. இதோடு நிற்காமல், நட்டா விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மம்தா அரசின் அனுமதி பெறாமலே உள்துறை அமைச்சக பணியில் அமர்த்தியது. மத்திய அரசின் இந்தக் குடைச்சல்களுக்கு மத்தியில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் “இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பது எனது பொறுப்பு. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது.

வங்காளத்தில் அரசியலமைப்பு வரம்புகள் மீறப்படுகின்றன. மம்தா அரசியலமைப்பு பாதையில் இருந்து விலகியதால் எனது பொறுப்பு தொடங்குகிறது. அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக செயல்படுகிறார்கள். அத்தகைய 21 நபர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. விரைவில் இதன் விவரங்களை முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பகிர்ந்து கொள்வேன்” என்று பேசினார். வெறும் பேச்சோடு நில்லாமல், மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார் ஆளுநர்.

ஆளுநரின் அறிக்கையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசாங்கத்திடம் அறிக்கை கோரியுள்ளது. இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று பேச்சுக்கள் எழுந்தன.

image

இதற்கு மத்தியில் ஜல்பைகுரியில் நடந்த பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, “பாஜக, என்னைப் பயமுறுத்த முயற்சிக்கும்போது நான் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். முடிந்தால் எனது ஆட்சியைக் கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி பாருங்கள். என்ன நடக்கிறது என நான் பார்க்கிறேன். அப்படி நடந்தால் எனக்கு அது நல்ல விஷயம்தான். எனது பணிச்சுமை குறையும், நான் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தி உங்கள் எல்லா வாக்குகளையும் என்னால் கவர முடியும்” என்று சவால் விடுத்தார்.

தொடர்ந்து பேசியவர், “நாடாளுமன்றத் தேர்தலில், டி.எம்.சி வடக்கு பெங்காலிலிருந்து ஒரு இடத்தையும் வெல்லவில்லை. நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? நாங்கள் என்ன அநீதி செய்தோம்? அனைத்து இடங்களையும் பாஜக வென்றது? மக்களவைத் தேர்தலில் எனக்கு எந்த இடமும் கிடைக்காமல் போகலாம், ஆனால் சட்டமன்றத் தேர்தலில் மக்களின் எல்லா ஆசீர்வாதங்களையும் விரும்புகிறேன்” என்றவர், “பாஜகவுக்கு உதவ இங்கே ஒரு கட்சி உள்ளது” என்று ஓவைசியின் AIMIM-ஐ விமர்சித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.