2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னையிலுள்ள வேளச்சேரி தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது மக்கள் நீதி மய்யம். இப்போதே தேர்தல் பணியில் இறங்கிவிட்டார் கமல்ஹாசன். மதுரையில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி, பரப்புரை மேற்கொண்டு வருகிறார். வரும் தேர்தலில் நிச்சயம் தான் போட்டியிடுவேன் என்றும் கமல் தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்தல் களத்தில் கமல் இறங்கும்பட்சத்தில் எந்தப்பகுதியில் களம் காண்பார் என பலரும் யூகிக்கத் தொடங்கியுள்ளனர். அதன்படி, சென்னையின் வேளச்சேரியில் கமல் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெக்கன் கெரால்ட் வெளியிட்ட செய்தியின்படி, 3 லட்சம் வாக்காளர்களுக்கும் மேல் அதிகமுள்ள வேளச்சேரி பகுதிதான் கமல்ஹாசனின் தேர்வாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

image

ஏன் வேளச்சேரி?

2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. ஆனால் அவரின் கட்சியான மக்கள் நீதி மய்யம் களம் கண்டது. குறிப்பாக சென்னை வடக்கு, சென்னை தெற்கு, ஸ்ரீபெரும்புதூர், கோவை ஆகிய இடங்களில் தலா ஒரு லட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றது மநீம. தற்போது கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக கூறப்படும் வேளச்சேரி சென்னை தெற்குபகுதிக்குள் வருகிறது. தென் சென்னை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆர். ரங்கராஜன் மொத்தமாக 1,35,465 வாக்குகள் வெற்று மூன்றாவது இடம்பிடித்தார். மொத்தமாக 2019 தேர்தலில் மநீம 15.76 லட்சம் ஓட்டுகள் பெற்றது. இது 3.72% ஆகும். இந்த வாக்குகள் அனைத்தும் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்களின் வாக்குகள். அதனை முன்னெடுத்தே கமல்ஹாசனின் தேர்வும் வேளச்சேரியாக உள்ளது என குறிப்பிடுகிறது டெக்கன் கெரால்ட் செய்தி.

image

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் பிரமுகர் ஒருவர் தெரிவித்த கருத்தின்படி, கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்கள் அதிகம் உள்ள பகுதியாக வேளச்சேரி உள்ளது. அங்குள்ளவர்களில் கணிசமானவர்கள் ஐடி வேலை பார்ப்பவர்கள். ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள். மேம்பட்ட நடுத்தர வர்க்கத்தினர். அவர்கள் கமல்ஹாசன் மீது நம்பிக்கை வைப்பார்கள். எனவே அங்கு கமல் போட்டியிட்டால் சரியாக இருக்கும் என மநீம நிர்வாகிகள் கணிக்கின்றனர். ஆனால் முடிவு கமல்ஹாசன் கையில்தான் உள்ளது எனத் தெரிவித்தார்.

image

திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய வேளச்சேரி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக திமுகவின் வாகை சந்திரசேகர் உள்ளார். மழைநீர் தேக்கம், வடிகால் பிரச்னை என தொடர் பிரச்னைகளை சந்தித்து வரும் வேளச்சேரியில் கமல் களம் கண்டால், மக்களின் ஆதரவு கிடைக்குமா? கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்களின் வாக்குகளை குறி வைக்கும் மநீம கணிப்பு எடுபடுமா? போன்ற பல கேள்விகளுக்கு வரும் காலங்களில் விடை கிடைக்குமென நம்பலாம்.

Source: https://bit.ly/2KcFWLQ 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.