2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் சசிகலா விடுதலைக்கும் இன்னும் உறுதியான தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த இரண்டு செய்திகளை முன்வைத்து தமிழக அரசியல் களம் தடதடத்துக்கொண்டே இருக்கிறது. வருகிற ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாகிறார் என்று வெளியான செய்தியைத் தொடர்ந்து, `தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக, அ.தி.மு.க-வில் சசிகலாவின் ஆதிக்கம் ஆரம்பமாகும்’ என்ற பரபர செய்திகள் பரவின. இதற்கிடையே `நன்னடத்தையின் அடிப்படையில் சசிகலா முன்னதாகவே விடுதலையாகிவிடுவார்’, `வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவின் விடுதலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றெல்லாம் செய்திகள் அலையடித்தன.

சசிகலா

இந்தநிலையில்,“அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமைகளில் அண்மைக்காலமாக அதிருப்தி நிலவிவருகிறது. ஓ.பி.எஸ் திரும்பவும் சசிகலா பக்கம் சாய்ந்துவருவதாக எழும் சந்தேகங்களே இதற்குக் காரணம்’’ என்கின்றனர் ஆளுங்கட்சியின் உள்விவகாரம் அறிந்தவர்கள். அண்மையில், பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும்” என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். `ஆட்சி அதிகாரத்துக்குள் சசிகலா வருகிறார்’ என்ற தங்களது சந்தேகத்துக்கு ஆதாரமாக இந்தப் பேச்சைக் குறிப்பிடும் இவர்கள், தொடர்ந்து பேசும்போது,

Also Read: ராமநாதபுரம்: நடுக்கடலில் சிக்கிய ரூ.5 கோடி கடத்தல் தங்கம்! – அதிர்ச்சித் தகவல்

“ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஸின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து முதல்வருக்குச் சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே, எப்படியான மாற்றத்தையும் எதிர்கொள்ளும்விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டே வருகிறார்

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்

கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவோடு கைகோத்துவிட்டால், கட்சியிலுள்ள 20 எம்.எல்.ஏ-க்களிலிருந்து ஐந்து அமைச்சர்கள் வரையிலும் எடப்பாடி தலைமையை உதறிவிட்டு எதிர்ப்பக்கம் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. சமுதாயரீதியாக அ.தி.மு.க தலைமைகள் இவ்வாறு ஒன்றிணையும்பட்சத்தில், வாக்கு அரசியலிலும் இது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான், அரசியல்ரீதியாக சசிகலாவை எதிர்கொள்ள எடப்பாடியும் தயாராகிவருகிறார். முதற்கட்டமாக, சசிகலாவின் விடுதலையை தள்ளிப்போடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சி நம்பிக்கையளிக்காமல் போகவே, இப்போது சசிகலாவை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

Also Read: `கனவு காணலாம்; ஆசைப்படலாம்!’ – ரஜினி குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து தி.மு.க முன்வைத்த காரசார சவாலுக்குப் பதில் அளித்துப் பேசிய விவகாரத்தில், `ஜெயலலிதாவின் இறப்புச் சான்றிதழை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாத சசிகலாவால், இப்போது ஜெயலலிதாவின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருக்கிறது’ என்று நேரடியாக குற்றம்சாட்டப்பட்டது. தி.மு.க-வுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய சூழலில், சசிகலா பக்கமே தாக்குதலைத் தொடுத்திருப்பது பேசுபொருளானது.

இதன் பின்னணியில் சில விஷயங்கள் இருக்கின்றன. அதாவது, அ.தி.மு.க-வில் பொறுப்பு வழங்கப்பட்ட சீனியர் தலைவர் – முன்னாள் அமைச்சரோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில், தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, ஓ.பி.எஸ்., சசிகலா ஆதரவாளராக மாறுவதற்கு 99% வாய்ப்பு இருப்பதாகத் தனது பயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் முதல்வர்.

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்

அதன் பின்னரே, சசிகலா வருகையை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து இருவரும் சேர்ந்து விவாதித்திருக்கின்றனர். இதன் முதல்படியாகத்தான், `ஜெ. இறப்புச் சான்றிதழ்’ தொடர்பாக சசிகலா மீது அட்டாக் ஆரம்பமாகியிருக்கிறது. விரைவில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட பொறுப்புகளில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழும். அரசியல்ரீதியாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளை எதிர்கொள்வதற்கென்றே பிரகாசமான வழக்கறிஞரையும் தயார்படுத்திவருகிறார்கள். எனவே, அந்த பிரகாச வழக்கறிஞரும் விரைவில் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிடுவார்” என்கின்றனர்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா, `எனது விடுதலைக்கு எதிரான அரசியல் சதி நடைபெறுகிறது’ என்று சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இன்னும் என்னென்ன அதிரடி மாற்றங்கள் நிகழக் காத்திருக்கின்றனவோ!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.