தனியார் நிறுவனத்திடமிருந்து சிபிஐ-யால் பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்தில், 103 கிலோ தங்கம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதனால் வழக்கில் சம்பந்தப்பட்ட சிபிஐ அதிகாரிகளிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

image

சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து சிபிஐ வசம் ஒரு வழக்கு ஒப்படைக்கப்பட்டால், அந்த வழக்கின் முக்கியத்துவத்தைப் பொறுத்து பல செய்திகளில் ஒன்றாகவோ, அன்றைய முக்கியச் செய்தியாகவோ அதனைக் கடந்து செல்வோம். சிபிஐ வசம் இருந்த வழக்காக இருந்தால் கூட பரவாயில்லை, சிபிஐ அதிகாரிகளையே விசாரிக்க வேண்டிய வழக்கு ஒன்று சிபிசிஐடி-யிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாநில காவல்துறை மற்றும் புலனாய்வு நிறுவனங்களால் தீர்க்க முடியாத பல வழக்குகளை நேர்த்தியான, பாரபட்சமற்ற விசாரணை முறைகளால் தீர்த்துள்ளது சிபிஐ. அதனாலேயே சில முக்கிய நபர்கள் குறித்த வழக்குகளும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளும், நேரடியாக அரசாங்கத்தால் சிபிஐ-இடம் ஒப்படைக்கப்படுகின்றன. வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டால், அதில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, மக்களுக்கும் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய, மிக நம்பகமான புலனாய்வு நிறுவனமான சிபிஐ-யின் பாதுகாப்பில் இருந்து ஒரு பொருள் காணாமல் போயுள்ளது என்பதில் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் பொருள் 45 கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ தங்கம் என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.

image

2012 ஆம் ஆண்டு, தங்கம் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனமான சுரானா கார்பரேஷனின் சென்னை அலுவலகத்தில் சோதனை நடத்திய சிபிஐ, சுமார் 400 கிலோ தங்கத்தை கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்தது. திருட்டுப்பொருளை திருடனிடமே கொடுத்து பத்திரப்படுத்துவதுபோல, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சுரானா நிறுவனத்தின் லாக்கர்களிலேயே பத்திரப்படுத்தி சாவிகளை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டது சிபிஐ. சீல் வைக்கப்பட்ட 72 லாக்கர்களின் சாவிகளும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பட்டியல் ஆவணமும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 இதற்கிடையில், எஸ்பிஐ, ஐடிபிஐ, உள்ளிட்ட வங்கிகளிடம் சுரானா நிறுவனம் பெற்ற ஆயிரத்து 160 கோடி ரூபாய் கடனை ஈடுகட்டும் விதமாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சிறப்பு அதிகாரியிடம் வழங்குமாறு, சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடுத்து எடை பார்த்த போது 297 கிலோவுக்கும் குறைவாக இருந்துள்ளது. காணாமல் போன 103 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக்கோரி சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

image

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு சம்பவம் நடந்துள்ளதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது, சிபிஐ மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து, எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தி, ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை துறைசார்ந்தும் மேற்கொள்ளும் முடிவுக்கு சிபிஐ நிறுவனம் வந்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.