கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மற்றும் மேல முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ததேயுஸ், ஸ்டீபன், அல்டோ, ஜோசப் எட்வின், பிரான்சிஸ் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ரஜிப் உடின் ஆகியோர் 14 மாதங்களுக்கு முன்பு ஓமன் நாட்டுக்கு மீன்பிடித் தொழில் செய்யச் சென்றுள்ளனர். ஓமன் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா கமீஷ் என்பவரது விசைப் படகில் இவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக படகு உரிமையாளர் பேசிய சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஓமனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த ஆறு மீனவர்களும் கடந்த 8 நாள்களுக்கு முன்பு அவர்களது முதலாளியின் `ஷட்டப் மரைன்’ என்ற விசைப் படகையும் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டு வந்துள்ளனர். நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் தனியார் மீன்பிடித்துறைமுகத்தை அடைந்துள்ளனர்.

படகுடன் மீனவர்கள்

இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் ஆறு மீனவர்களையும் மீட்டு, தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மீனவர்கள் கூறுகையில், “நாங்கள் 14 மாதங்களுக்கு முன்பு ஓமன் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா கமீஷ் என்பவரின் படகில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றோம். ஆரம்பத்தில் நன்றாகத்தான் போனது. கடந்த நான்கு மாதங்களாக எங்களுக்கு பேசிய சம்பளம் தரவில்லை.

Also Read: பாம்பன்: தீவில் சிக்கிய மீனவர்கள் மீட்பு; படகுகள், வீடுகள் சேதம்! – வலுவிழந்த புரெவி

சம்பளம் பற்றி நாங்கள் முறையிட்டும், படகு உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை. குடிநீரும், உணவும்கூட தரவில்லை. இதைப்பற்றி கேட்டால் அடித்து கொடுமைப்படுத்தினர். இதனால் உயிருக்குப் பயந்து இந்தியத் தூதரகத்தில் முறையிட்டோம். ஆனால், இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவ மறுத்ததோடு, படகு உரிமையாளரான அரபி அப்துல்லா கமீஷிடம் தகவல் அளித்தனர். எங்களையும் அரபியிடம் சென்று சரணடையும்படி சொன்னார்கள். அதன்படி அரபியிடம் சரணடைந்தோம். அதன் பிறகு எங்களை அரபி கடுமையாகத் தாக்கினார்.

ஓமனில் இருந்து படகுடன் தப்பி வந்த மீனவர்கள்

இதற்கு மேல் இருந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, அரபிக்குச் சொந்தமான விசைப்படகில் அங்கிருந்து உயிர்தப்பினோம். கடல் வழியாக எட்டு நாள்கள் பயணித்து முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகம் வந்தடைந்தோம். பிழைப்புத் தேடி சென்ற இடத்தில் எங்களுக்கு நடந்த கொடுமையை இந்தியத் தூதரக அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் உயிர் தப்பி வந்தது ஆச்சர்யம்தான்” என்று கூறியிருக்கிறார்கள்.

ஆறு மீனவர்களிடமும் கடலோரப் பாதுகாப்புப் குழும போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். படகைக் கடத்தியதற்காக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாகக் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.