ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 ஆம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக ஐ.நா சபையால் கடைபிடிக்கப்படுகிறது. இன்று அணுசரிக்கப்படும் இந்த சிறப்பு தினத்தையொட்டிய பார்வை…

image

சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்கும் நோக்கத்திற்காக 2003-ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி ஐ.நா. சபையால் டிசம்பர் 9ம் நாள் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஆண்டுதோறும் இந்த நாள் ஐநாவால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊழல் ஒழிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன், ஊழல்பற்றிய  விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம், உலகின் 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் 2016ல் 79-வது இடத்திலும், 2017ல் 81-வது இடத்தையும், 2018-ல் 78வது இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.

ஊழலால் ஒரு நாட்டினுடைய அமைப்பின் அடிமட்டத்திலிருந்து, தலைமை வரை நிர்வாக சீர்கேடும், ஒழுங்கீனமும் புற்றுநோய்போல பரவும். ஊழல் காரணமாக சாமானிய மனிதர்களின் வரிப்பணம் விரயமாவதுடன், பல அத்தியாவசிய மக்கள் பணிகள் பாதிக்கப்படும். ஊழலால் தரமற்ற பணிகள், நேர விரயமாதல், பொதுச் சொத்து விரயமாதல் ஆகியவை நிகழும். முக்கியமாக ஊழல் காரணமாக சில மனிதர்கள் மட்டுமே செழிப்புறவும், பெரும்பான்மையான மக்கள் வறுமையில் துன்புறுவதும் நடக்கிறது. இதனால் நாட்டின் பொருளாதாரமும், ஆட்சி நிர்வாகமும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் அதிகமாகின்றன.

ஊழல் ஒழிப்பில் இந்தியாவும் தமிழகமும்:

சுதந்திரத்துக்குப் பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஊழலை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதைப்போலவே பல்வேறு காலகட்டங்களில் பல தலைவர்கள் ஊழல் ஒழிப்பினை முன்வைத்து மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இருந்தாலும் நாட்டின் ஊழல் இப்போதும் புரையோடிப்போய் இருக்கிறது என்பதே உண்மை. தகவல் அறியும் உரிமை போன்ற சட்டங்கள், பல ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர உதவி செய்தாலும், ஊழல் ஒழிப்பிற்கான பயணத்தில் இந்தியா செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.

image

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுதந்திரமடைந்த காலம் தொட்டு இப்போதுவரை ஊழலுக்கு எதிரான முழக்கம் அதிகம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, இருந்தபோதும் தமிழகத்திலும் நாளுக்கொரு ஊழல் குற்றச்சாட்டினை எதிர்க்கட்சிகள் இப்போதும் எழுப்பி வருகின்றனர். முத்தாய்ப்பாக, கடந்த சில நாட்களாக யார் ஊழல்வாதி? என்று தமிழக ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக இரண்டு தரப்பிலும் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகள் என தொடங்கிய வார்த்தைப்போர் அரசியல் நாகரீக வார்த்தைகளையும் கடந்து ஒலிக்க தொடங்கியுள்ளது. இன்றும் கூட ‘யார் ஊழல்வாதி’ என்ற விவாதம் இரு தரப்பினராலும் எழுப்பப்பட்டது கவனத்துக்குரியது.

எப்படி பார்த்தாலும் ஓர் ஒழுக்கமான, நேர்மையாக சமச்சீர் சமூகத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரிய நோயாக உள்ளது ஊழல்தான். ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்குவதுதான் உண்மையான மக்களாட்சி என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

வீரமணி சுந்தரசோழன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.