பேராவூரணி அருகே காட்டாற்று தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே போல் தொடர் மழையின் போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பட்டுக்கோட்டையில் காட்டாற்று தரைப்பாலத்தில் தனியார் பேருந்து விபத்திற்குள்ளாகிய பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது மாறாத வடுவாக இருக்கிறது. ஆனாலும், இந்த இடத்தில் புதிய உயர்மட்ட பாலம் அமைத்து கொடுக்க அரசு முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

தரைப்பாலத்தில் வெள்ளம்

புரெவி புயல் காரணமாக டெல்டா மாவடங்களில் கடந்த மூன்று தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

Also Read: பாம்பன்: தீவில் சிக்கிய மீனவர்கள் மீட்பு; படகுகள், வீடுகள் சேதம்! – வலுவிழந்த புரெவி

பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆறு மற்றும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால், வயல்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பது விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேராவூரணி அருகே காட்டாற்று தரைப்பாலத்திலன் மேல் வெள்ள நீர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சாலையைக் கடந்து செல்லும் மழை நீர்

இந்த சாலையின் வழியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆபத்தை உணராமல் அத்தியாவசியத் தேவைக்காக செல்ல வேண்டிய சூல்நிலை உள்ளது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் எந்தவித அச்சமும் இல்லாமல் கடந்து செல்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க வெள்ளநீர் செல்லும் வரை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். “பேராவூரணியிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சித்தாத்திக்காடு கிராமம். பேராவூரணி டு அறந்தாங்கி செல்வதற்கான பிரதான சாலை இந்த ஊரைக் கடந்தே செல்கிறது. இந்த சாலையை அம்புலி என்ற காட்டாறு கடந்து செல்கிறது.

புரெவி புயல் பாதிப்பில் ஏற்பட்ட வெள்ளம்

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் கனமழையால் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்று சித்தாத்திகாடு காட்டாற்றுத் தலைப்பாலத்தின் மேல் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பேராவூரணி டு அறந்தாங்கி மற்றும் அந்த சாலையில் வழியாகச் செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இருபுறத்திலிருந்தும் மக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அத்தியாவசியத் தேவைக்காக செல்லகூடியவர்கள் வெள்ள நீரை பொருட்படுத்தாமல் அதைக் கடந்து செல்கின்றனர்.

Also Read: புரெவி புயல்: மூழ்கிய 50 ஏக்கர் நெற்பயிர்கள்… வேதனையில் தஞ்சை விவசாயிகள்!

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இதேபோல் பெய்த தொடர் மழையினால் பட்டுக்கோட்டை அருகே மஹாராஜா சமுத்திரம் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அந்தப் பாலத்தைக் கடந்து சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து, சுமார் 50 பேர் வரை உயிரிழந்தனர். அந்த சம்பவம் மாறாத வடுவாக எங்க பகுதியைச் சேர்ந்த மக்கள் மனதில் உள்ளது.

அந்த விபத்திற்கு பிறகே மஹாராஜா சமுத்திரம் கட்டாற்றில் தரைப்பாலத்துக்குப் பதிலாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. நாங்கள் முக்கிய பிரதான பகுதியான சித்தாத்திக்காடு காட்டாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். ஆனால் அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

மழை நீர்

இப்போது பாலத்தைக் கடந்து செல்லும் வெள்ள நீரில் வேறு வழியில்லாமல் உயிரைப் பணயம் வைத்து கடக்கின்றனர். இதனால், அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என அனைவரது மனமும் துடிக்கிறது. வெள்ள நீர் வடியும் வரை இந்த இடத்தில் தகுந்த பாதுகாப்பு அமைத்து, மக்கள் கடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

நாங்க கேட்டது போல் உயர் மட்டம் பாலம் அமைத்திருந்தால் இப்போது இவ்வளவு சிரமத்திற்கு நாங்க ஆளாகியிருக்க மாட்டோம். எனவே இனியாவது உரிய ஆவன செய்து ஏற்கெனவே நடைபெற்ற துயர சம்பவத்தை மனதில் வைத்து, அரசு இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் கட்டித் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.