பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எழுத்தாளர் வண்ணதாசன் எழுதிய ‘அழைக்கிறவர்கள்’ சிறுகதை வாசித்துக்கொண்டிருந்தபோதே என் நினைவுகளின் பின்னிழுக்கப்பட்டேன். தன் வாழ்க்கையில் தவறவிட்ட ஏதோவொன்றைத் தேடி அல்ல, தவறவிட்ட தன் காதலியைப் பார்க்க விரும்பிய ஒருவரின் மனஉணர்வைப் பிரதிபலித்த கதை அது.

வண்ணதாசன் இதம் தரும் எழுத்தாளர். சிறுபுல்லின் உணர்நுனியையும் சீர் தூக்கும் கூர்நோக்காளர். அவர் கரங்களிலிருந்து பிரிவு, துயர், காதல், வலியெல்லாம் நமக்குள் கசிகிறது.

காதல்

உண்மையில் காதல் என்பது பரிச்சயம் இல்லாத விஷயம்… நான் அறிந்திராத வரைக்கும். அதை எனக்கும் ஒருவர் அறிமுகம் செய்தார். பல வருடக் காதல் அது. நடந்ததோ கறுப்பு வெள்ளைக் காலத்தில். 10 வருட காதலானதால் அது ஊர் அறிந்த ஒன்றானது. காலம்கூடிய வேளையில், காதலி மறுத்து, அவரின் காதல் கலைந்தது. முறிந்த காரணம் ஏதும் அறிய இயலவில்லை என்னால். ஏனெனில், அது நிகழ்ந்த காலத்தில் அந்தக் காதலானவரின் கருவில் இல்லை நான்.

ஆம்… காதல் தோல்வியுற்றது என் அப்பா. தன்னைத் தொலைத்த காதலியைவிட, தான் இழந்த காதலை, அவர் ரசித்தபடியேதான் இருக்கிறார் இன்றுவரை. மனதை வருடும் சில பாடல்களில், அவரின் சில ஓய்வுகளில், குடும்பத்தோடு இணைக்கமாக அமர்ந்து கதையாடும் சில தருணங்களில் நாங்கள் கேட்டிருக்கிறோம் அவரின் காதல் நிகழ்வுகளை. சிரித்தபடியே சொல்லிக் கொண்டிருப்பார். சில நேரங்கள் தனித்து, தன் இரு கரங்களை தலைக்கு அணையிட்டு கண்களை மூடி லயித்திருப்பார். மெல்லியதாக ஒரு பழைய பாடல் ஒலித்தபடி இருக்கும் அவர் அறையில். அறியாது, அருகே சென்றுவிட்டு நான் விலகி வந்து இருக்கிறேன்.

Father

நான் 12-ம் வகுப்பு தேர்வெழுதி முடித்த தருணம். ஒரு நெருங்கிய உறவின் இறப்புக்காக, என் அப்பாவின் அவள் வந்திருந்தாள். மன்னிக்கவும்… அவளுக்கு என் தாய் வயதுதான். இருப்பினும் இன்றுவரை இழந்த காதலை மனதோடு ரசித்தபடி வாழும் என் தந்தையைக் கடந்துவிட்ட அவள், எனக்கும் அவளே. அநேகக் கூட்டம். என் அம்மா காண்பித்தார் அவளை. இவர்தான் உன் அப்பாவின் காதலி என.

இருவரும் நேருக்கு நேர் நிற்கும் தருணம் ஒன்று அமைந்தது. நான் பரபரப்பானேன். இருவரின் முக உணர்வுகளைப் படிக்கும் ஆவலில். நான் பார்த்தேன். முதலில் அவள்தான் அப்பாவைப் பார்த்தாள். பின்பு அப்பா அவளைப் பார்த்தார். கண இடைவெளி மெளனம். எதையோ தேடினார் கூட்டத்துக்குள். அவரின் பார்வைக்குள் நான் சிக்கியதும் அருகழைத்து கைப்பிடித்து நகர்ந்துகொண்டார்.

Love

நான் தடுமாறிக்கொண்டிருந்தேன். அப்பா திடமாக என்னோடு நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைப்போல காதலை தன் கண்களால், வார்த்தைகளால், தனிமையால், சிரிப்பால், சில அழுத்தங்களால் ரசித்தவரை நான் இதுவரை கண்டதில்லை. காதல் அழகானது. அது முகம் பார்க்க ஏங்குவது இல்லை. ஏனெனில், அது முகங்களில் மட்டுமே இல்லை.

– சித்ரா சுப்பையா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.