ஆஸ்திரேலிய அணியை, ஆஸ்திரேலிய மண்ணில் தோற்கடிக்கக்கூடிய ஒரே அணி என்கிற புகழாரங்களோடு, படைப்பரிவாரங்களோடு கிளம்பிப்போன கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என ஒருநாள் தொடரை தோல்வியோடு முடித்திருக்கிறது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் டாஸை இழந்து சேஸ் செய்த கோலி அண்ட் கோ, இந்த முறை டாஸை வென்றதால் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலியா, இந்தியா என இரண்டு அணிகளிலுமே ஏகப்பட்ட மாற்றங்கள். வார்னர், ஸ்டார்க் ஆகியோர் காயமடைந்திருந்தால் அவர்களுக்குப் பதிலாக கேமரூன் கிரீன் மற்றும் அஷ்டன் அகார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்கள். பேட் கம்மின்ஸுக்கு பதிலாக ஷான் அபாட் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்தியாவுக்காக நடராஜன்!

இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. முகமது ஷமிக்குப் பதிலாக தமிழக வீரர் தங்கராசு நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்தார். மயாங்க் அகர்வாலுக்கு பதிலாக ஷுப்மான் கில்லும், நவ்தீப் சைனிக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரும், யுவேந்திர சஹாலுக்குப் பதில் குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளும் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமான சிட்னி மைதானத்தில் நடைபெற்றிருந்தன. இன்றைய போட்டி நடைபெற்ற கான்பெரா மைதானம் பெளலிங்கிற்கும் ஓரளவுக்கு ஒத்துழைத்தது. எப்படியும் 350 ப்ளஸ் ஸ்கோர்தான் வெற்றிக்கான ஸ்கோர் என்கிற நிலையில் பெரிய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்கவேண்டும் என்கிற நெருக்கடியில் தவானும், ஷுப்மான் கில்லும் களமிறங்கினார்கள்.

#AUSvIND

ஏமாற்றிய தவான்!

ஒருபக்கம் ஹேசல்வுட், இன்னொரு பக்கம் மேக்ஸ்வெல் என வேகப்பந்துவீச்சாளரையும், ஸ்பின்னரையும் மாற்றி மாற்றி பயன்படுத்தினார் கேப்டன் ஆரோன் ஃபின்ச். முதல் பெளலிங் சேஞ்சாக ஐந்தாவது ஓவரில் ஷான் அபாட்டிடம் ஃபின்ச் பந்தைக்கொடுக்க, முதல் ஓவரிலேயே தவானின் விக்கெட்டை கழற்றினார் அபாட். தவான் அடித்தது 27 பந்துகளில் 16 ரன்கள். கேப்டன் கோலி உள்ளே வந்தார். உள்ளே வந்ததுமே தன்னுடைய ஸ்டைலில் டிரைவ், புல் என ஆஸ்திரேலிய பெளலிங்கை அட்டாக் செய்து ஆட ஆரம்பித்தார் கோலி. ஷுப்மான் கில்லும் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில் இரண்டாவது விக்கெட் விழுந்தது. அஷ்டன் அகாரின் பெளலிங்கில் வீழ்ந்தார் ஷுப்மான் கில். 39 பந்துகளில் ஒரு சிக்ஸர் உள்பட 33 ரன்கள் அடித்திருந்தார் கில்.

இந்தத் தொடர் முழுக்கவே அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ், இன்றும் சொதப்பினார். ஆடம் ஸாம்பாவின் பெளலிங்கில் 19 ரன்களில் ஆட்டம் இழந்தார் ஷ்ரேயாஸ் ஐயர். அடுத்து வந்த கே.எல்.ராகுலும் 5 ரன்களில் அகாரின் பெளலிங்கில் அவுட். இந்தக் களேபரங்களுக்கு இடையில் விராட் கோலி தன்னுடைய 60-வது ஒருநாள் அரைசதத்தை நிறைவுசெய்தார். 64 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருந்தார் கோலி.

நல்ல ஃபார்மில் இருந்த கோலியின் பேட்டில், ஹேசில்வுட்டின் பந்து எட்ஜாகி, மூன்றாவது நடுவரிடம் ரிவியூ கேட்கப்பட 63 ரன்களில் வெளியேறினார் கோலி. இந்தியாவின் கதை கிட்டத்தட்ட முடிந்தது என நினைத்த நேரத்தில் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார் ரவீந்திர ஜடேஜா. கோலி அவுட் ஆகும்போது 32 ஓவர்களில் இந்தியா 152 ரன்களை அடித்து 5 விக்கெட்களை இழந்திருந்து. ஆனால், அடுத்த 18 ஓவர்களுக்கு ஆஸ்திரேலிய பெளலர்களால் ஒரு விக்கெட்கூட எடுக்கமுடியவில்லை. ஹர்திக்கும், ஜடேஜாவும் மிகச்சிறப்பாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டே வந்து, மோசமான லைன் அண்ட் லென்த் பந்துகளை மட்டுமே பவுண்டரிகளுக்கு விரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்திக்கொண்டே வந்தார்கள். ஆட்டத்தின் 44-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா 55 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஹேசில்வுட் வீசிய 46-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி என இந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் அடித்தார் ஹேஸில்வுட். 48-வது ஓவரில் ஜடேஜாவிடம் ஷான் அபாட் சிக்கினார். இந்த ஓவரின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது எனத் தொடர்ந்து மூன்று பந்துகளிலும் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தவர், ஐந்தாவது பந்தை சிக்ஸர் ஆக்கினார். இந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள். 43 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இந்தியா 300 ரன்களையாவது தொடுமா என எல்லோரும் எதிர்பார்க்க, கடைசி ஒவரில் 13 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 302 ரன்களுக்கு உயர்த்தியது பாண்டியா – ஜடேஜா கூட்டணி.

#AUSvIND

ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 92 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்களையும் அடித்து கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக இருந்தார்கள். இவர்களின் பார்ட்னர்ஷிப் சரியாக 150 ரன்கள்.

300 ரன்களைத் தாண்டினாலும் இந்த மைதானத்தில் எளிதாக சேஸ் செய்யக்கூடிய ஸ்கோர் என்பதால் கொஞ்சம் உதறுலடனேயே பெளலிங்கைத் துவக்கினார் கோலி. கடந்த இரண்டு போட்டிகளாக பெளலிங் ரொட்டேஷனில் கொஞ்சம் சொதப்பிய கோலி இன்றும் சொதப்பினால் 3-0 தான் என்கிற விமர்சனங்களுக்கு இடையேதான் சேஸிங் தொடங்கியது.

கணக்கைத் தொடங்கிய நடராஜன்!

ஃபின்ச்சைப்போல ஒரு எண்டில் வேகப்பந்து, இன்னொரு எண்டில் ஸ்பின் என வித்தியாசங்கள் எதையும் கோலி செய்யவில்லை. பும்ரா முதல் ஓவரை வீச, இரண்டாவது ஓவரை நடராஜனிடம் கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் பந்தை, கேப்டன் ஆரோன் ஃபின்ச்சுக்கு ஆஃப் ஸ்டம்ப்பை நோக்கி பேக் ஆஃப் தி லென்த் பந்தாக வீசினார் நடராஜன். முதல் பந்தில் ரன்கள் ஏதும் இல்லை. ஆனால், நடராஜன் தனது மூன்றாவது பந்தை ஷார்ட்டாக வீச, ஸ்கொயர் லெக்கில் தூக்கி சிக்ஸர் அடித்தார் ஃபின்ச். முதல் போட்டியில் இரண்டு இரண்டு ஓவர்களோடு பெளலிங் ரொட்டேஷனை செய்ததைப்போல கோலி, இந்தப் போட்டியில் செய்யவில்லை. நடராஜனுக்கு தொடர்ந்து மூன்றாவது ஓவர் கொடுத்தார். மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே லாபுசேன் போல்ட். 7 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்த கடந்த இரண்டு போட்டிகளாக தொடர்ந்து அதிரடி சதங்கள் அடித்து மிரட்டிய ஸ்டீவன் ஸ்மித், ஷர்துல் தாக்கூரின் பெளலிங்கில் 7 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ஆரோன் ஃபின்ச்சோடு ஆட மோய்சஸ் ஹென்ரிக்ஸ் வந்தார். தொடர்ந்து ஸ்பின்னர்களைப் பந்துவீச வைத்த கோலி, மீண்டும் தாக்கூரை பெளலிங் வீச வைத்தார். 23வது ஓவரில் ஹென்ரிக்ஸ் 22 ரன்களில் தாக்கூரின் பெளலிங்கில் அவுட். அடுத்த இரண்டாவது ஓவரில் ஜடேஜாவின் பெளலிங்கில் ஃபின்ச் அவுட். 82 பந்துகளில் 75 ரன்கள் அடித்திருந்தார் ஃபின்ச். அடுத்துவந்த கேமரூன் கிரீனை குல்தீப் யாதவ் 21 ரன்களில் தூக்கினார். 31 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட இந்தியாவைப் போன்றே 159 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது. அடுத்துவந்த அலெக்ஸ் கேரியும் 38 ரன்கள் அடித்துவிட்டு ரன் அவுட் ஆனார்.

Also Read: ஆடம் கில்கிறிஸ்ட்… ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டரின் அதிரடி பக்கங்கள்! – அண்டர் ஆர்ம்ஸ் – 21

இந்தியாவுக்கு பாண்டியா – ஜடேஜா கூட்டணிபோல, கிளென் மேக்ஸ்வெல் – அஷ்டன் அகார் கூட்டணி ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸைக் கட்டமைக்க ஆரம்பித்தது. 38 ஓவர்களின் முடிவில் 211 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்தது ஆஸ்திரேலியா. 72 பந்துகளில் 92 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற எளிதான டார்கெட்தான் என்றாலும் கோலி அண்ட் கோ போராட ஆரம்பித்தது. 40-வது ஓவரை நடராஜனிடம் கொடுத்தார் கோலி. இந்த ஓவரில் 14 ரன்கள் போனது. கிளென் மேக்ஸ்வெல் வெறித்தனமாக அடிக்க ஆரம்பித்தார். 42 பந்துகளுக்கு 57 ரன்கள் என டார்கெட் குறைந்தது. மீண்டும் நடராஜனிடம் பந்துவந்தது. மேக்ஸ்வெல் அடுத்தடுத்து ஒரு பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்க, அகாரும் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார். நடராஜனின் இந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள். கொஞ்சம் பதற்றமான நடராஜன் வைட் எல்லாம் போட்டார். ஆனால், கோலி நடராஜன் மீது நம்பிக்கை இழக்கவில்லை. இதற்கிடையே நடராஜனுக்கு அடுத்த ஓவரில் பும்ரா மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டாக்கினார்.

38 பந்துகளில் 59 ரன்கள் அடித்திருந்தார் மேக்ஸ்வெல். பும்ராவுக்கு அடுத்த ஓவரை மீண்டும் நடராஜனிடம் கொடுத்தார் கோலி. இந்த ஒவரில் தொடர்ந்து மூன்று டாட் பால்களை வீசிய நடராஜன், வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி நான்கு ஓவர்களில் அதாவது 24 பந்துகளில் 29 ரன்கள் தேவை என ஆட்டம் பரபரப்பான கட்டத்தை நெருங்கியது. செட் பேட்ஸ்மேனாக அஷ்டன் அகார் பயமுறுத்திக்கொண்டிருந்தார். 48வது ஓவரின் முதல் பந்தில் அகாரை அவுட் ஆக்கி இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினார் நடராஜன். இந்த ஓவரிலும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து விக்கெட்டையும் எடுத்திருந்தார். 10 ஓவர்களில் ஒரு மெய்டன் உள்பட 70 ரன்கள் கொடுத்து இரண்டு முக்கியமான விக்கெட்களையும் கைப்பற்றினார் நடராஜன்.

#AUSvIND

கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஷர்துல் தாக்கூர் 49-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலிய வீரர்களால் 6 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது. கடைசி ஓவர் வீச வந்தார் பும்ரா. கடைசி விக்கெட்டோடு ஆடிக்கொண்டிருந்தார் ஆடம் ஸாம்பா. 15 ரன்கள் அடிக்கவேண்டும். மூன்றாவது பந்தில் ஸாம்பா எல்பிடபிள்யூ ஆக 3-0 என முடிந்திருக்கவேண்டிய தொடரை 2-1 என கடைசிப்போட்டியில் ஆறுதல் வெற்றியோடு முடித்தது இந்தியா.

ஸ்டீவன் ஸ்மித் மேன் ஆஃப் தி சீரிஸ் வெல்ல, கோலி, “ஒருநாள் தொடரை இழந்தாலும், அடுத்து நடைபெற இருக்கும் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம்” என நம்பிக்கையோடு பேசினார். டி20 தொடரையும் கோலி இழந்தால் ரோஹித் ஷர்மாவைக் கேப்டனாக்க வேண்டும் என்கிற குரல்கள் இன்னும் ஓங்கி ஒலிக்க ஆரம்பிக்கும்!

தப்பிப்பாரா கோலி?!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.