7.5% உள் ஒதுக்கீட்டால் பல்வேறு ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க கல்லூரிகள் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் தனியார் கல்லூரியில் பயில உள்ள மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அறிவிப்பிற்கு முன்பாகவே தங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றதால் பணம் செலுத்த முடியாத சூழலில் கல்லுரியை தேர்வு செய்ய முடியாமல் வீடு திரும்பியுள்ளனர் பல ஏழை மாணவர்கள். இதனால் தகுதி இருந்தும், அரசு கட்டணத்தை ஏற்கும் என தெரிவித்த போதிலும் மருத்துவ சீட் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் கலங்குகிறார்கள்.

நீட் தேர்வு

இந்நிலையில் சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகமது ஜமீன் என்ற மாணவன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வீரசிகாமணி கிராமத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் எங்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். என் தந்தை கூலி வேலைகள் செய்து எங்களை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் நான் அரசுப் பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பு மற்றும் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டேன்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டு பல் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்புகள் இருந்தன. அதற்கான கட்டணத்தை செலுத்த இயலாது என்பதை அறிந்ததாலும், அன்றைய தினமே சுமார் ரூ.11,000 செலுத்துமாறு கோரியதன் அடிப்படையிலும், அதை செலுத்த இயலாததன் காரணமாக நான் கலந்தாய்வில் எந்த இடத்தையும் தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தமிழக முதல்வர் அரசுப் பள்ளிகளில் பயின்று மருத்துவப் படிப்பிற்கு தேர்வான மாணவர்களின் ஒட்டுமொத்த கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார். இந்த தகவல் முன்பே தெரிந்திருந்தால் பல் மருத்துவப் படிப்பிற்கான இடத்தைத் தேர்வு செய்திருப்பேன். குடும்ப வறுமையின் காரணமாக தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டணத்தைச் செலுத்த இயலாது என்பதன் காரணமாக அன்றைய தினம் தேர்வு செய்யவில்லை. இதுபோல மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பல் மருத்துவத்திற்கான இடத்தினை எனக்கு ஒதுக்கி வைக்கவும், இடத்தை தேர்வை செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

நீட் தேர்வில் தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

“மருத்துவ கலந்தாய்வில் விடுபட்ட மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும், 2 நாட்கள் கால அவகாசம் தேவை. நல்ல அறிவிப்பு வரும்” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் வரும் காலங்களில் அரசு பள்ளியில் பயின்று மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் மட்டுமல்லாது உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் கட்டணத்தையும் அரசே ஏற்கலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் இதுகுறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.