பல லட்சக்கணக்கானவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் ‘ஒரு யோகியின் சுயசரிதம்.’ பரமஹம்ஸ் யோகானந்தரின் இந்த நூல் மகான்கள் பலரின் மகிமைகளையும் இந்திய யோகக் கலை மரபு பற்றிய ஒரு பெரிய வெளிச்சத்தையும் தந்தது. இந்த நூலின் மூலம் க்ரியா யோகா பற்றியும் மகா அவதார் பாபாஜி பற்றியும் அறிந்துகொண்டவர்கள் பலர்.

பரமஹம்ஸ் யோகானந்தர்

மகா அவதார் பாபாஜி லாஹிரி மஹாசாயருக்கு க்ரியா யோகம் கற்றுக்கொடுத்தார். லாஹிரி மகராஜ் பல்வேறு மகான்களுக்கு அதைப் பயிற்றுவித்தார். அவர்களில் ஒருவர் யுக்தேஸ்வர். ஸ்ரீ யுக்தேஸ்வரின் சீடர்தான் பரமஹம்ஸ யோகானந்தர். யுக்தேஸ்வரின் மூலம் மகாஅவதார் பாபாஜி முதலிய க்ரியா யோகா குருமார்கள் பற்றி அறிந்துகொள்கிறார் பரமஹம்ஸர். அந்த நூலில் அவர் பாபாஜியைப் பற்றிக்குறிப்பிடும்போது, “பாபாஜி கிறிஸ்துவுடன் தொடர்புள்ளவர். அவர்களிருவரும் சேர்ந்து மீட்பளிக்கும் எண்ண அதிர்வுகளை அனுப்பியவண்ணம் உள்ளனர்” என்று குறிப்பிடுகிறார். இத்தகைய சிறப்புகள் உடைய பாபாஜி யார் என்று பலரும் தேட ஆரம்பித்தனர்.

நாகராஜ் என்கிற பாபாஜி

பாபாஜியின் சிறப்புகளை அறிந்து தேடத்தொடங்கியவர்களுக்கு பதிலாகக் கிடைத்தது அவரின் பூர்விகம். பாபாஜி தமிழகத்தின் ஒரு கடலோர கிராமத்தில் பிறந்தார். கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் அவரின் ஜனனம் நிகழ்ந்தது. பெற்றோர் அவருக்கு நாகராஜ் என்று பெயர் சூட்டினர். நாகராஜ் சிறுவயது முதலே இறைச் சிந்தனையோடு வாழ்ந்துவந்தார். ஒரு கட்டத்தில் சாதுக்களின் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு யோகம் பயில ஆரம்பித்தார். தமிழக சித்தர் மரபின் ஆதி குருவான அகஸ்தியரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அவரை தரிசிக்க இலங்கை கதிர்காமத்துக்குச் சென்று தவம் செய்தார். அங்கே அவருக்கு அகஸ்தியரின் சீடரான போகநாதரின் தரிசனம் கிடைத்தது.

யோகா

போகரிடம் யோகம் பயின்று அங்கேயே தவம் செய்து கதிர்காம முருகனைக் கண்ணாறக் கண்டார் பாபா என்கிறார்கள் ஞானிகள். பின்பு அகஸ்தியரை தரிசனம் செய்யும் தன் ஆவலை போகரிடம் தெரிவிக்க அவர் பொதிகை மலைக்குச் சென்று தவம் செய்யச் சொன்னார். அவ்வாறே பாபாஜியும் செய்ய அகத்தியர் மனம் மகிழ்ந்து பாபாஜிக்குக் காட்சி கொடுத்து க்ரியாயோகாவினை உபதேசம் செய்தார். அதன்பின் பாபாஜி இமயமலை சென்று கடும் யோகப் பயிற்சிகள் செய்து சிரஞ்சிவி ஆகும் வல்லமை பெற்றார். தாம் கற்ற யோகம் இந்த உலக நன்மைக்குப் பயன்பட வேண்டும் என்று காலம்தோறும் ஞானிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதைக் கற்றுக்கொடுத்து வருகிறார் பாபாஜி என்கின்றனர் க்ரியா யோகா பயிலும் யோகிகள்.

பாபாஜி உபதேசித்த க்ரியா யோகாவின் 5 கிளைகள்

க்ரியா யோகம் என்பது முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல் என்கிறார்கள். இது நம்மை அறியும் வழி. ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், மற்றும் மந்திரம் என மொத்தம் 144 வகைப் பயிற்சியின் கலவையே பாபாஜியின் க்ரியா யோகம். இந்தப் பயிற்சிகளை முழு விழிப்புணர்வுடன் செய்யும்போது அனைத்தும் ஒருங்கிணைக்கப் படுகின்றன. முறையான இந்தப் பயிற்சியின் மூலம் மனிதர்கள் விழிப்படைந்த அதாவது தம்மை உணர்ந்த விழிப்படைந்த மனிதர்களாக மாறிவிடுவர். க்ரியா யோகாவின் 5 விதமான பயிற்சிகளை பாபாஜி தன் சீடர்களுக்கு உபதேசித்தார். இவை உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த பயிற்சிகளை க்ரியா ஹத யோகம், க்ரியா குண்டலினி பிராணாயாமம், க்ரியா தியான யோகம், க்ரியா மந்திர யோகம், க்ரியா பக்தி யோகம் என 5 கிளைகளாகப் பிரித்துப் போதிக்கிறார்கள் யோகாசிரியர்கள்.

பாபாஜி

குருவின் மகாமந்திரம்

க்ரியாபாபாஜியின் பக்தர்கள், ‘ஓம் க்ரியா பாபாஜி நம ஔம்’ என்னும் அவரின் மகாமந்திரத்தைச் சொல்லி தியானிக்கிறார்கள். இதில் ஓம் – பிரணவம். க்ரியா என்றால் முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல். பாபாஜி என்பது குருவின் திருநாமம், நம என்றால் வணங்குதல். ஔம் என்பது நம் அகத்தினுள் ஒத்ததிரும் பிரணவ ஒலி.

இம்மந்திரத்தைத் தொடர்ந்து ஜபிப்பதன் மூலம் நமது சஹஸ்ர சக்கரத்தில் அமைந்துள்ள பேரறிவாற்றலைத் தொடர்பு கொள்ளலாம். ஆற்றல் வாய்ந்த இம்மந்திரத்தினை குரு மூலம் பெரும் சீடன் அந்த சக்தியைப் பெறுகிறான்.

மகா அவதார் பாபாஜியின் அவதார தினமான இன்று அவரின் மகாமந்திரத்தை உச்சரித்து தியானம் செய்து குருவருளும் திருவருளும் பெறுவோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.