சட்டசபைத் தேர்தலுக்காக, தங்களது திட்டங்களைக் கூர்தீட்டிவருகிறது தி.மு.க. கடந்த முறை கோட்டைவிட்ட இடங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து சரிக்கட்டி கொண்டிருக்கின்றனர். முக்கியமாக, தி.மு.க-வின் கொங்கு ஜுரத்துக்கு அதிகமாகவே மெனக்கெடுகின்றனர். ஏற்கெனவே, அதிருப்தியில் இருந்த கொங்கு சீனியர்களுக்குப் புதிய பொறுப்புகள் போடப்பட்டிருக்கின்றன. மேலும், காங்கேயம் காளைகள், நாட்டு மாடுகள் ஆராய்ச்சி என்று வலம்வந்துகொண்டிருந்த கார்த்திகேய சிவசேனாபதியை களமிறக்கியிருக்கிறது தி.மு.க. குறுகியகாலகட்டத்திலேயே தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட முதற்கட்ட பரப்புரைக் குழுவில் சிவசேனாபதி பெயர் இடம்பெற்றது.

கார்த்திகேய சிவசேனாபதி

மேலும், தி.மு.க-வில் புதிதாக சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராகவும் கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். கொங்கு மண்டலத்தில் சிவசேனாபதியின் வருகை, தி.மு.க-வுக்கு பலம் சேர்க்கும் என்று உடன்பிறப்புகள் நம்புகின்றனர். சில கேள்விகளுடன் கார்த்திகேய சிவசேனாபதியிடம் பேசினோம்.

“காங்கேயம் காளைகள் டு தி.மு.க பயணம் எப்படி நடந்தது?”

“1949-ம் ஆண்டு தி.மு.க ஆரம்பிக்கப்பட்டபோது, அண்ணா, கலைஞருடன் என் தாத்தா குட்டபாளையம் சாமிநாதனும் இருந்தார். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவன் நான். சுற்றுச்சூழல், காங்கேயம் காளை, மழைநீர் சேகரிப்பு என்றிருந்தேன். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். குட்டபாளையத்திலுள்ள காங்கேயம் கால்நடைகள் ஆராய்ச்சி மையத்தில் 71 நாடுகளைச் சேர்ந்தவர்களை அழைத்துச் சுற்றுச்சூழல் குறித்து ஆலோசனை நடத்தினோம். இப்போதைய சூழ்நிலைக்கு திராவிடக் கருத்துகளை, தளபதியின் கரங்களை வலுப்படுத்த வேண்டியது நமது கடமை. இனியும் வெளியில் இருந்து பேச வேண்டாம் என்றுதான் தி.மு.க-வில் இணைந்துவிட்டேன்.’’

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

“தீவிர அரசியலில் இறங்க வேறு காரணங்கள் இருக்கின்றனவா?”

“கேடுகெட்ட எடப்பாடியின் ஆட்சி இருக்கக் கூடாது. தமிழகத்தில் அனைத்து நலன்களையும் டெல்லியில் அடமானம் வைத்துவிட்டனர். பக்தவத்சலம் ஆட்சிக்குப் பிறகு, இப்படி ஒரு கேவலம் நடந்தது இப்போதுதான். `என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஜெயலலிதா தமிழ்நாட்டின் நலனை டெல்லிக்கு அடகுவைத்ததில்லை’ என்று தளபதி பேசியிருக்கிறார். நீட், புதிய கல்விக் கொள்கை பிரச்னைகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலிலும் நிறைய பிரச்னைகள் உள்ளன. வேலைவாய்ப்பிலும், தமிழகத்தின் உரிமைகளை வட இந்தியாவுக்குத் தாரைவார்க்கின்றனர். இந்தியாவில் அதிக வரிப்பணம் கட்டுவது தமிழ்நாடுதான். நமது பூமி வேண்டும், பணம் வேண்டும். அதேநேரத்தில், நம் கலாசாரம், மொழி, வரலாறு எதையும் மத்திய அரசு புரிந்துகொள்வதில்லை. அதை எடப்பாடி அரசு தட்டிக்கேட்பதில்லை. அந்த இடத்தில் எடப்பாடியை நீக்கிவிட்டு, தளபதி அமர வேண்டும்.’’

“தி.மு.க-வில் இணைந்ததற்குக் காரணம்?”

“நான் பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவன். புதிதாக இணைவதுபோல எல்லாம் இல்லை. எங்களது வீட்டுக்குள் மீண்டும் நுழைந்ததுபோலத்தான். சுயமரியாதை இயக்கம் என்பது தி.மு.கதான். மேலும், தமிழ்நாட்டுக்கு சமூகநீதி தொடங்கி அதிக நலன்களைச் செய்தது தி.மு.கதான். கொங்கு வேளாளருக்கு பிற்படுத்தப்பட்டோர் சமுதாய அந்தஸ்து கொடுத்தது, அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவிகிதம் உள் ஒதுக்கீடு கொடுத்தது தி.மு.கதான். கீழ் பவானி நீருக்கு `தண்ட தீர்வு’ என்ற பெயரில் வரி வசூல் செய்துகொண்டிருந்தனர் அதை நீக்கியதும் தி.மு.கதான். ரூ.7,000 கோடி மதிப்பிலான விவசாயக் கடனை ரத்து செய்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது என்று அடுக்கிக்கொண்டேபோகலாம். அது தொடர வேண்டும் என்பதற்காகத்தான் தி.மு.க-வில் இணைந்தேன்.”

ஸ்டாலினுடன் சேனாபதி

“அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படுவதை எப்படி உணர்கிறீர்கள்?”

“அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் சுற்றுச்சூழல் பிரிவை அமைத்திருக்கும் முதல் கட்சி தி.மு.கதான். சமூகநீதி குறித்து, திராவிட இயக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பே பேசியது. வட இந்தியாவில் இப்போதுதான் சமூகநீதி குறித்துப் பேசுகின்றனர். இப்படிப் பல விஷயங்களில் திராவிட இயக்கங்கள் முன்னோடியாக இருக்கும். கொரோனா வைரஸ் உருவாக புவி வெப்பமயமாதல் பிரச்னையும் ஒரு காரணம் என்று சொல்கின்றனர். எனவே, சுற்றுசூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தலைவரின் தொலைநோக்குப் பார்வை. எனக்கு இது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. என் மேல் தளபதி வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன்.’’

“தமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்னைகள் எப்படியிருக்கின்றன?”

“நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்னை அதிகரித்திருக்கிறது. எட்டுவழிச் சாலை என்ற பெயரில் கிழக்குத் தொடர்ச்சி மலையை அழிக்க முயல்கின்றனர். மேற்கு மண்டலங்களில், விளைநிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் கொண்டு செல்கின்றனர். அதானி போன்ற தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்ட திட்டம்தான் அது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களைச் சுட்டுக் கொல்கின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டம் மொத்த விவசாயிகளையும் அழித்துவிடும். எண்ணூர், மணலி பகுதிகளில் காற்றை மாசுபடுத்தும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க முடிவு செய்துள்ளனர். சதுப்பு நிலங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தைக் கொடுத்திருக்கிறார்கள். டெல்டாவைப் பாலைவனமாக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவில், இப்போது அதிகாரிகள் மட்டும்தான் கருத்து தெரிவிக்க முடியும் என்கின்றனர். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் சூழலுக்கு எதிரான வேலை நடந்துகொண்டிருக்கிறது.’’

கார்த்திகேய சிவசேனாபதி

“உங்களது முதற்கட்டப் பணி என்னவாக இருக்கும்?”

“மரங்கள் நடுவதை மக்கள் இயக்கமாக உருவாக்குவோம். மழை நீர் சேகரிப்புக் குட்டைகளை உருவாக்குவது என்று நிறைய திட்டங்கள் இருக்கின்றன. தளபதியைச் சந்தித்து ஆலோசித்துவிட்டு படிப்படியாகப் பணிகளில் இறங்குவோம்.”

“உங்களது வருகை கட்சிக்குள் சில சீனியர்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது என்கின்றனரே..?”

“அப்படி இருக்காது. தலைவர் தலைமையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தி.மு.க-வில் அனைவரின் எண்ணமாக இருக்கிறது. ஒருவேளை அப்படி யாராவது அதிருப்தியில் இருந்தால்கூட, நானே அவர்களை சந்தித்துப் பேசி, அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன்.’’

உதயநிதியுடன் சேனாபதி

“கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை என்றுதானே இப்போதும் சொல்கின்றனர்?”

“கொங்கு மண்டலம் அவர்களின் கோட்டை எல்லாம் இல்லை. எடப்பாடி நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் கொண்டாடவில்லை. எடப்பாடியின் ஆட்சியை நினைத்து மக்கள் வருப்படுகின்றனர். ஒட்டுமொத்த தமிழகமும் இந்த ஆட்சி இனியும் வேண்டாம் என்ற மனநிலையில்தான் இருக்கின்றனர். வீரபாண்டிய கட்டபொம்மன் இருந்த, அதே மண்ணில்தான் எட்டப்பனும் இருந்தார். தீரன் சின்னமலை தொடங்கி கொங்கு மண்டலத்தில் நிறைய ரியல் ஹீரோக்கள் இருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு மோசமான முன்னுதாரணம்தான் எடப்பாடி.”

“கொங்கு மண்டலத்துக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்திருப்பதாக முதல்வர், அமைச்சர்கள் சொல்கிறார்களே?”

“தொடர்ந்து ஒரே பொய்யைச் சொல்வதில் அவர்கள் கில்லாடிகள். இவர்கள் சாலை மற்றும் பாலங்களைத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். அவை இரண்டுமே எடப்பாடியின் துறைக்குக் கீழ் செய்த பணிகள்தாம். எதிலெல்லாம் 30 சதவிகிதம் கமிஷன் கிடைக்குமோ, அதை மட்டுமே செய்திருக்கின்றனர். இதனால், எடப்பாடி பழனிசாமியும், அவருடைய சம்பந்தியும்தான் கோடிஸ்வரர்கள் ஆகியிருக்கிறார்கள். 20,000 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி வர வேண்டியிருக்கிறது, `நீட்’டுக்கு விலக்கு வாங்க முடியவில்லை. நீட் தேர்வில், 10,450 சீட் இழந்துவிட்டோம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் கிட்டத்தட்ட 9,000 சீட்களை இழந்தது கொங்கு வேளாளர் மற்றும் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். முதல்வரும் துணை முதல்வரும் அவர்களது சமுதாயங்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். கான்ட்ராக்டர்கள் முன்னேறுவது மட்டுமே வளர்ச்சி இல்லை. இவர்களால் கொங்கு மண்டலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.”

கார்த்திகேய சிவசேனாபதி

“மு.க. ஸ்டாலின் என்ன சொன்னார்?”

“கட்சியில் இணைந்த பிறகு இரண்டு முறை அவரைச் சந்தித்தேன். `உங்கள் தாய், தந்தையுடன் பிறந்தவராக நினைத்து, இயல்பாகப் பேசுங்கள்’ என்றார். தாத்தா குறித்துப் பெருமையாகப் பேசினார். விவசாயம் குறித்து அதிகம் பேசினார். தொழில்துறை குறித்துக் கேட்டார். கொங்கு மண்டலம் குறித்து அவருக்கு நல்ல பார்வை இருக்கிறது. கோவை, திருப்பூர், கரூர் என்று எந்தப் பகுதியை பற்றிப் பேசினாலும், அங்கிருக்கும் செக்டார் குறித்தும் அக்கறையோடு பேசுகிறார். இங்கிருக்கும் அனைத்துச் சங்கங்களையும் தெரிந்துவைத்திருக்கிறார்.”

Also Read: விவசாயி முதல் ஸ்டெர்லைட் விவகாரம் வரை ; எடப்பாடி Vs ஸ்டாலின்…யாருடைய வாதம் மக்களிடம் எடுபடுகிறது?

கார்த்திகேய சிவசேனாபதி

“கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வின் திட்டம் என்ன?”

“எங்களது பெருந்தன்மை காரணமாக, கொங்கு மண்டலத்துக்கு செய்த பல விஷயங்களை தலைமை திரும்பத் திரும்பச் சொல்லவில்லை. எனவே, தி.மு.க செய்த நலன்களையும், அதனால் கிடைத்த பலன்களையும் வலுவாகச் சொல்லப்போகிறோம். கொங்கு மண்டலத்தை `அ.தி.மு.க கோட்டை’ என்கின்றனர். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஓரிடத்தில்கூட அ.தி.மு.க வெற்ற பெறவில்லை. தி.மு.க அனைத்துச் சமுதாயங்களுக்கும் சமூகநீதியுடன், முன்னேற்றத்தைக் கொடுக்கும் கட்சியாக இருக்கும்.’’

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.