கடந்த 21-ம் தேதி முதலே டெல்டா பரபரக்கத் தொடங்கியது. ‘வருகிறது புயல்’ என ஆயத்தமானார்கள் டெல்டா மக்கள். கஜா புயலால் பாதிப்புகளை சந்தித்த டெல்டா மக்களுக்கு புதிய புயல் பயம் கொள்ளச் செய்தது. வங்கக் கடலில் கடந்த 21ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலான வலுப்பெறும் என 22ஆம் தேதி வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கிடையே தனியார் வானிலை ஆய்வாளர்கள் சிலரும் தங்களது கணிப்பின படி புயலின் பாதையை சொல்லத் தொடங்கினர். ஆனால் அனைவரையுமே குழப்பத்திலேயே வைத்திருந்தது இந்த நிவர்.

image

ஆரம்பம் முதலே இந்தப் புயல் குறித்த மிகச் சரியான தகவல்கள் வெளியாகவில்லை. முதலில் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பாகவே அது உருவானது. கரையை கடக்கும் இடமும் மாறிமாறி காட்டப்பட்டது. ஒரு சீரான நேர்கோட்டிலேயோ அல்லது பாதையிலேயோ நிவர் ஆரம்பம் முதலே பயணிக்கவில்லை. வடக்கு, தெற்கு என மாறி மாறி நிலைகொண்டது காற்றழுத்த தாழ்வு பகுதி. அதே நேரத்தில் மிகவும் வலிமையானதாக மாறிக்கொண்டே வந்தது.

வானிலை ஆய்வு மையம் மட்டுமன்றி தனியார் வானிலை ஆய்வாளர்களும், நிவர் அதிதீவிரப் புயலாக கரையை கடக்கும் என கணித்திருந்தனர். அப்படியானால் பாதிப்புகளும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்ற அச்சம் நிலவியது. குறிப்பாக டெல்டாவில் கடுமையான அச்சம் நிலவியது.

மரக்கிளைகளை வெட்டுவது, ஓடுகளை பிரித்து வைப்பது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கூட டெல்டா மக்கள் எடுத்து வைத்தனர். டெல்டாவின் பல இடங்களில் டிடிஎச் ஆண்டனாக்கள், தண்ணீர் தொட்டி வரை கழட்டப்பட்டது. அதற்கு ஏற்ப குழப்பத்திலேயே இருந்த நிவர், கரையை கடக்கும் இடமும் மாறிமாறி காட்டப்பட்டது. கரையை கடக்கும் நேரமும் பிற்பகல், மாலை, இரவு என மாறி மாறி சொல்லப்பட்டது. வேகமாக மாறி மாறி நகர்ந்து வந்த நிவர், அரபிக்கடலில் ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டு மேலும் குழப்பியது.

image

ஒருக்கட்டத்தில் நாகைக்கும் நேர் கிழக்கே நிவர் நின்றது. நேராக வந்தால் மீண்டும் ஒரு கஜா மாதிரியான விளைவை டெல்டா சந்திக்கும் என்ற நிலை. ஆனால் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து போக்குகாட்டியது நிகர். அப்போதே பாதையைக் கணித்து காரைக்காலுக்கும், மகாபலிபுரத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வலுவாகவே புயல் வருவதால் எங்கு கரையைக் கடந்தாலும் பெரும் விளைவை ஏற்படுத்தும் என அனைவரும் அச்சம் கொண்டிருந்தனர். ஆனால் புயல் கரையை கடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக ஒரு வேகத் தடை போன்று உருவானது காற்று முறிவு. புயல் கடக்கும் பாதையில் ஏற்பட்ட காற்று முறிவால், நிவர் வலுவிழந்தது.‌காற்றின் திசை அல்லது வேகத்தில் ஏற்படும் மாறுபாடே காற்று முறிவு என அழைக்கப்படுகிறது.

காற்று முறிவால் புயலின் மையப்பகுதியைச் சுற்றியிருந்த மேலடுக்கு மேகங்கள் தனியாக நகர்ந்து, புயலுக்கு முன்னதாகவே நிலப்பரப்பை சென்றடைந்தது. அதி தீவிர புயலான நிவர், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதற்கு இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

image

நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதற்கும் காற்று முறிவே காரணம் என்கிறனர் ஆய்வாளர்கள். கடந்த காலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய வர்தா, கஜா புயல்கள் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் சென்றன. ஆனால் நிவர் புயலோ, தென்கிழக்கில் இருந்து வடமேற்கு நோக்கிச் சென்றதும், அதன் தாக்கம் குறைய காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 2011ஆம் ஆண்டு நீலம் புயலும் வடமேற்கு நகர்ந்து வலுவிழந்து கரையை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என அச்சத்தை உருவாக்கிய நிவர், பெரும் மழையை கொடுத்து பாதிப்புகளையும் குறைவாக கொடுத்தே சென்றுள்ளது. தனது பாதையில் அடுத்தடுத்து ட்விஸ்ட் வைத்து மாற்றங்களை காட்டினாலும், சரியாக பாதையைக் கணித்த வானிலை ஆய்வு மையத்திற்கும், முன்னெச்சரிக்கைகளை சரியாக கையாண்ட அரசுக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.