தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘நிவர்’ புயல், தீவிரப் புயலாக மாறியது. இது, அதிதீவிரப் புயலாக மாறி இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பான லைவ் அப்டேட்ஸ்…

நவ.25,2020 | மாலை 05.12 மணி: நிவர் புயலின் காரணமாக நாளை 27 ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் 6 ரயில்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ.25,2020 | மாலை 04.46 மணி: நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியதைத்தொடர்ந்து புயலின் வெளிச்சுற்று கடலூர் மாவட்டத்தில் கரையை தொட்டது. வெளிச்சுற்று கரையை தொட்டதால் கடலூர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. புயலின் மையப்பகுதி கரையை தொட 5 லிருந்து 6 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையை கடக்க 2 மணிநேரத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

நவ.25,2020 | மாலை 04.46 மணி: தீவிர புயலாக இருந்த நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. 16 கி.மீ வேகத்தில் நகரும் நிவர் புயல் கடலூரில் இருந்து 90 கி.மீ தொலைவில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது.

நவ.25,2020 | மாலை 04.46 மணி: நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பிரதான சாலைகள் மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சாலைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்கள் பத்திரமாக வீடுகளில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நவ.25,2020 | மாலை 04.37 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் 1500 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விநாடிக்கு 3000 கன அடி நீராக திறக்கப்பட்டுள்ளது. முழு விவரம்:செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரிப்பு

நவ.25,2020 | மாலை 04.32 மணி: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் நமது மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக ஈடுபட்டு வருவதாகவும் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் அயராது நமக்காக பாடுபடும் அவர்களின் ஈடுபாட்டை கண்டு தலை வணங்குகிறேன் எனவும் முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். 


நவ.25,2020 | மாலை 04.29 மணி: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக பொழிச்சநல்லூர், பம்மல், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

image

நவ.25,2020 | மாலை 04.23 மணி: புயல் கரையை கடக்கும் வரை அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், “இன்று இரவை கடந்துவிட்டால் உயிரிழப்பை தவிர்க்கலாம். மரம், கம்பங்கள், பேனர்கள் ஆகிய விழுந்து உயிரிழந்துவிட்டார் என ஏதாவது செய்தி வந்தால் நமக்கு கவலையளிக்கிறது. அதனால் நேரம் நெருங்கிவிட்டதால் நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம் இது” எனத் தெரிவித்துள்ளார்.

image

நவ.25,2020 | மாலை 04.12 மணி: சென்னை விவேகானந்தா இல்லம் அருகே மரம் சாய்ந்து சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்துள்ளார். மரம் சாய்ந்து படுகாயமடைந்த முதியவர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

நவ.25,2020 | மாலை 04.12 மணி: நிவர் புயலால் காற்று வீசும்போது மின்சாரம் துண்டிக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி தெரிவித்துள்ளார். மேலும், மெழுகுவர்த்தி, டார்ச்லைட்டுகள், உணவுப்பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவ.25,2020 | மாலை 04.04 மணி: நிவர் புயல் காரணமாக சென்னையில் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. புயலின் தாக்கத்தை பொறுத்து திரையரங்குளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என திரையங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

நவ.25,2020 | பிற்பகல் 03.59 மணி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் கடலூருக்கு அருகே நெருங்கி விட்டது. சென்னையில் இருந்து 214 கி.மீ தூரத்திலும் கடலூரில் இருந்து 110 கி.மீ தூரத்திலும் நிவர் புயல் நெருங்கியுள்ளது. அதேபோல் புதுச்சேரிக்கு 120 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

நவ.25,2020 | பிற்பகல் 03.52 மணி: கரையைக் கடந்த பின் செல்லக்கூடிய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் பேட்டியளித்தார். “இந்த மழை மற்றும் காற்றினால், குடிசை வீடுகள், விளம்பர பலகைகள், மின்சாரம் மற்றும் தொலை தொடர்புகள் பாதிக்கப்படலாம். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழும் நிலை ஏற்படும். வாழை, பப்பாளி போன்ற பயிர்கள் பாதிக்கப்படலாம். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். புயல் கரையை கடந்த பிறகு ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ வரையிலும் சமயங்களில் 85 கி.மீ வரையிலும் காற்று வீசக்கூடும். திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவ.25,2020 | பிற்பகல் 03.42மணி: “சென்னைக்கு 250 கி.மீ புதுவைக்கு 190 கி.மீ தொலைவிலும் கடலூருக்கு 180 கி.மீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் புதுவைக்கு அருகே கரையை கடக்கும். கரையை கடந்த பின்னரும் சுமார் 6 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் தாக்கம் இருக்கும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.25,2020 | பிற்பகல் 03.33மணி: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.94 அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் தற்போது நீர் இருப்பு 21.94 அடியாக உள்ளது. மேலும் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 3,105 மி.கன அடி நீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விநாடிக்கு 1,547 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நவ.25,2020 | பிற்பகல் 03.17 மணி: நிவர் புயல் தொடர்பான அவசர உதவிக்கு சென்னை மக்கள் அழைக்க தற்காலிக கட்டுப்பாட்டறைக்கு 9498181239 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவியை மக்கள் பெற வசதியாக காவல் ஆணையரகத்தில் தற்காலிக கட்டுப்பாட்டறை உருவாக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த தற்காலிக கட்டுப்பாட்டறையை பொதுமக்கள் தொடர்புகொண்டு காவல்துறையின் உதவியைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நவ.25,2020 | பிற்பகல் 03.04 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் மேலும் 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 1,500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நவ.25,2020 | பிற்பகல் 02.50 மணி: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மதியம் 2 மணி நிலவரப்படி 167 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 167 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. 290 ஏரிகள் 75% தனது கொள்ளளவை எட்டியுள்ளது. 219 ஏரிகள் 50% கொள்ளளவை எட்டியுள்ளது. 202 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளது. 30 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக தனது கொள்ளளவை எட்டியுள்ளது.

நவ.25,2020 | பிற்பகல் 02.41 மணி: அடையாறு மாவட்ட காவலர்களின் துரித நடவடிக்கைகள் அடங்கிய புகைப்பட தொகுப்புகள்…!

Image

Image

Image

நவ.25,2020 | பிற்பகல் 02.35 மணி: தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவுறுத்தல்

image

நவ.25,2020 | பிற்பகல் 02.32 மணி: நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் சென்னை, திருச்சி வந்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 10 ராணுவ வீரர்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நவ.25,2020 | பிற்பகல் 02.25 மணி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் தற்போது கடலூருக்கு 180 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 190 கி.மீ தூரத்திலும், சென்னைக்கு 250 கி.மீ தூரத்திலும் புயம் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழக, புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவ.25,2020 | பிற்பகல் 02.00 மணி: வேளச்சேரி – தாம்பரம் சாலையில் நிவர்புயலால் விழுந்த மின்கம்பங்களை உடனடியாக மின்பணியாளர்கள் சீர் செய்து வருகின்றனர். இந்த கடினமான சூழலிலும், புயலையும் மழையையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி துரிதமாக செயலாற்றி வரும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

Image

Image

நவ.25,2020 | பிற்பகல் 02.00 மணி: நிவர் புயல் காரணமாக 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னையிலிருந்து செல்லும் மற்றும் சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பு – நேரடி தகவல்…

நவ.25,2020 | பிற்பகல் 01.58 மணி: நிவர் புயல் காரணமாக சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நவ.25,2020 | பிற்பகல் 01.52 மணி: நிவர் புயல் காரணமாக சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

நவ.25,2020 | பிற்பகல் 01.16 மணி: நிவர் புயல் வெள்ள முகாம்களில் மக்களை தங்க வைக்கும்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

image

நவ.25,2020 | பிற்பகல் 01.13 மணி: நிவர் புயல் காரணமாக நாளையும் 27 ரயில்கள் ரத்து செய்யபடுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – அடையாறு ஆற்றின் தற்போதைய நிலை…

நவ.25,2020 | பிற்பகல் 12.51 மணி: குளத்தூர் ஏரியிலிருந்து வரும் உபரிநீர் தணிகாசலம் நகர் கால்வாய் வழியாக B – கால்வாய்க்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.


நவ.25,2020 | பிற்பகல் 12.44 மணி: அடையாறு, வேளச்சேரி, மாம்பலம் உள்ளிட்ட கால்வாய் மற்றும் நீர்வழித்தட பகுதிகளில், கனமழையால் தேங்கும் நீரை உடனுக்குடன் வெளியேற்ற, அதிகத் திறன் கொண்ட இயந்திரங்கள் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Image

நவ.25,2020 | பிற்பகல் 12.40 மணி: திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.

image

image

image

image

நவ.25,2020 | பிற்பகல் 12.30 மணி: செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கொட்டும் மழையில் முதல்வர் பழனிசாமி பேட்டி…

நவ.25,2020 | பிற்பகல் 12.23 மணி: கடலூர் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 272 பகுதிகள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 92 இடங்களில் பாதிக்கப்படும் இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு ஆட்டோவில் சென்று ஒலிபெருக்கி மூலமாக நிவாரண முகாம்களில் தங்குவதற்கான அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முகாம்களிலும் ஐந்து பேர் கொண்ட மருத்துவ குழு 24 மணி நேரமும் பணிகள் உள்ளது. ஒவ்வொரு முகாம்களிலும் 15 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

நவ.25,2020 | காலை 11.56 மணி: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. முழு விவரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டது ! 

image

நவ.25,2020 | காலை 11.150 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

நவ.25,2020 | காலை 11.14 மணி: தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயலின் வேகம் 11 கி.மீ ஆக நகர்ந்து வருகிறது. இன்று காலை 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. கடலூரில் இருந்து 240 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ, சென்னையில் இருந்து 300 கீ.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

image

நவ.25,2020 | காலை 11.12 மணி: செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய ஜல்சக்திதுறை தெரிவித்துள்ளது. முழு விவரம் : செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு 

நவ.25,2020 | காலை 11.10 மணி: புதுச்சேரியில் நாளை முதல் நவ.28 ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. முழுவிவரம்: நவ.28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை- புதுச்சேரி அரசு

நவ.25,2020 | காலை 11.10 மணி: தமிழக அரசு, இதுவரை 3,948 குழந்தைகள் உட்பட 24,166 பேரை தாழ்வான பகுதிகள் / பாதுகாப்பற்ற கட்டிடங்களில் இருந்து 987 நிவாரண மையங்களுக்கு மாற்றியுள்ளது.

நவ.25,2020 | காலை 11.03 மணி: செம்பரம்பாக்கம், அடையாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அறிவுத்தல்களை வழக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தின் ஓடுதளங்களை முறையாக கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நவ.25,2020 | காலை 10.50 மணி: செம்பரம்பாக்கத்தில் 34,500 கன அடி வரை நீர் திறக்க முடியும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். 

நவ.25,2020 | காலை 10.37 மணி: சென்னையில் அடையாற்றுக் கரையோர மக்கள், வெள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நவ.25,2020 | காலை 10.37 மணி: சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் இருந்தால் நீர் திறக்கப்பட்டால் முடிச்சூரில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நவ.25,2020 | காலை 10.31 மணி: நிவர் புயல் காரணமாக சென்னையில் பேனர் மற்றும் பெயர்பலகைகளை சம்பந்தப்பட்டவர்களை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்குள் அனைத்து பேனர் மற்றும் பெயர்பலகைகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

நவ.25,2020 | காலை 10.05 மணி: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்படுவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அடையாறு கரையோரங்கள் வசிப்பவர்களும், தாழ்வானப் பகுதிகளிலுள்ளவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாலும் அச்சம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 1000 கன அடி நீர் என்பது அஞ்சத்தக்க அளவு இல்லை என்றும், 2015 அளவுக்கு தேவையற்ற பீதி வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. > விரிவாக வாசிக்க > ‘செம்பரம்பாக்கம் திறந்தாலே வெள்ளம் என்ற பீதி வேண்டாம்’ – நிலவரம் இதுதான்! 

நவ.25,2020 | காலை 9.40 மணி: தற்போது 22 அடியை நெருங்குவதாலும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து நொடிக்கு 4027 கன அடியாக உள்ளதாலும் ஏரியிலிருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் 1000 கன அடி திறக்கப்படுகிறது. நீர்வரத்திற்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும். எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருமலை மற்றும அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக செம்பரம்பாக்கம் வெள்ளக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 வெள்ளத்தோடு ஒப்பிடும்போது, அந்த அளவுக்கு இல்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, மக்கள் 2015 அளவுக்கு பீதியடையத் தேவையில்லை என்றும், அதேவேளையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

image

image

நவ.25,2020 | காலை 9.11 மணி: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் இன்று நள்ளிரவிலிருந்து நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கடலூரில் இருந்து 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு நகரந்து வருகிறது. புதுச்சேரிக்கு 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 350 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 12 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களிலும் மிக கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

நவ.25,2020 | காலை 8.45 மணி: சென்னைக்கு 8 ராணுவக் குழுக்கள் வரவழைக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நவ.25,2020 | காலை 8.40 மணி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

image

நவ.25,2020 | காலை 8.30 மணி: தீவிரப் புயலாக மாறிய நிவர், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று இரவு 11:30 மணிக்கு, கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 310 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில், 320 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில், 380 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்தது. அடுத்த 2 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திடையில் நகரும் என்றும் அதன் பின்னர் வடமேற்கு திசையிலும் நகரும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த 8 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் அதீத கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை செய்தித் தளத்தின் செவ்வாய்க்கிழமை இரவு வரையிலான லைவ் அப்டேட்ஸுக்கு > https://bit.ly/3fmLsH9

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.