இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதலே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சில உணவுப் பொருள்கள் முன்னிறுத்தப்பட்டன. அதில் மிக முக்கியமானது மஞ்சள்.

கொரோனா காலத்தில் கிருமி நாசினியான மஞ்சள் தேவை அதிகரித்து, அதனால் விற்பனையில் சூடு பிடிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த மஞ்சள் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் ஏமாற்றம் தரும் விதமாக, கடந்த சில நாள்களாக மஞ்சள் விலை மேலும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. உற்பத்தி அதிகரிப்பு, தேவை குறைவு எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இலங்கை அரசாங்கம் மஞ்சள் இறக்குமதிக்கு வித்தித்த தடையே மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மஞ்சள்

இதுகுறித்து ஈரோட்டில் உள்ள எஸ்.ஆர்.டி ஶ்ரீ ராகவேந்திரா மஞ்சள் கிடங்கு உரிமையாளர் ஜி.ஜீவானந்தம், “இந்திய மஞ்சளுக்கு மருத்துவத் தன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பதால், அதற்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற மஞ்சள் சந்தையாக ஈரோடு திகழ்வதால், தமிழகத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மஞ்சள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம் ஆகும்.

Also Read: மலைக்கவைக்கும் மஞ்சள் மாஃபியா!

ஆனால், கொரோனா காலத்தில் வெளிநாட்டில் தேவை இருந்தும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை, உள்நாட்டுத் தேவை குறைவு போன்ற காரணங்களால் ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மஞ்சள் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் ஏற்றுமதிக்குப் புத்துயிரூட்டி, விவசாயிகளின் கவலையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தேவை அதிகரித்ததன் காரணமாக ஈரோடு மஞ்சள் சில ஆண்டுகளுக்கு முன் குவிண்டால் ரூ.17,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இப்போது ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.6,000-க்கும் குறைவாகவே ஏலத்தில் எடுக்கப்படுகிறது. அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை வரும்போது விற்கலாம் என ஸ்டாக் வைத்திருந்த பழைய மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.4,000-லிருந்து ரூ.5,000 வரைதான் போகிறது.

ராமநாதபுரம்- சிக்கிய மஞ்சள் மூட்டைகள்

கொரோனா பாதிப்பு காரணமாக மந்தமான ஏற்றுமதி, மஞ்சள் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றாலும்கூட, இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைதான் விற்பனைக் குறைவுக்கும் விலை வீழ்ச்சிக்கும் முதன்மைக் காரணம். ஈரோடு பகுதியில் விளைவிக்கப்படும் மஞ்சளின் பெரும்பகுதி இலங்கைக்குதான் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது” என்றார் அவர்.

மஞ்சள் மண்டியின் விலை நிலவரம் பற்றியும், தமிழகத்தில் மஞ்சள் உற்பத்தி எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சத்தியமூர்த்தியிடம் பேசினோம்.

“கடந்த நான்கு வருடங்களாகவே மஞ்சள் விலையில் வீழ்ச்சி நீடித்து வருகிறது. இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை விளைக்கும் விஷயமாகும். விலைச் சரிவைப் போலவே, தமிழகத்தில் உற்பத்தியும் தொடர்ந்து குறைந்துவருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மகராஷ்ட்ரா மற்றும் தெலங்கான மாநிலங்களில் தொடர்ந்து உற்பத்தி அதிகரித்து வருகிறது.

வெளிநாட்டுத் தேவை அதிகமாக இருந்தாலும், உள்நாட்டுத் தேவை மிகவும் குறைந்திருக்கும் நிலையில், உற்பத்தி அதிக அளவில் இருப்பது விலை வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகும். மேலும், இலங்கை அரசு இந்திய மஞ்சளுக்கு முற்றிலுமாக இறக்குமதி தடை விதித்திருப்பதும் விலை வீழ்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் மஞ்சளுக்கான உற்பத்திச் செலவு அதிகம் என்பதால், ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,000 முதல் ரூ.9,000 வரையில் விலை கிடைத்தால்தான், விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். ஆனால், ரூ.5,500 – ரூ.6,500 வரையில் மட்டுமே கிடைக்கிறது. இது ஏற்புடைய விலை அல்ல. அதனாலேயே தமிழக விவசாயிகள் விலை வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

Also Read: இலங்கை கடற்படையினரிடம் சிக்கிய 5 டன் மஞ்சள்! – கொரோனா அச்சத்தால் விடுவிக்கப்பட்ட கடத்தல்காரர்கள்

விலை சரியாகக் கிடைக்காததால், மண்டிக்கு மஞ்சள் வரத்தும் குறைந்தே காணப்படுகிறது. இதனால் நவம்பர் 17-ம் தேதி ஒரு குவிண்டால் மஞ்சளுக்கான விலை ரூ.5,300 – ரூ.5,400 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தளர்வுகள் அதிகரித்து, சுபகாரியங்கள் நடக்கும்போதும், வருகிற விழாக்காலங்களில் உள்நாட்டு மஞ்சள் தேவை அதிகரிக்கும்போதும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்றார் தெளிவாக.

மஞ்சள் மூட்டைகளைச் சோதனையிடும் போலீஸார்

மேலும், இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சிலரிடம் பேசினோம். “கொரோனாவுக்கு முன், மஞ்சளின் தேவை, விற்பனை அதிகமாக இருந்தது. தற்போது மஞ்சள் இருப்பு அதிகமாக இருந்தும், விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகளும், இருப்பு வைத்திருக்கும் வியாபாரிகளும், விற்பனைக்குக் கொண்டு வருவதில்லை. பள்ளி, கல்லூரி, விடுதி, பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், மஞ்சள், மஞ்சள் கலந்த பொடிகள், அதன் உப பொருள்களின் விற்பனை குறைந்துள்ளது.

ஈரோடு மஞ்சள் மண்டியில் இருந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆண்டுக்கு, 5,000 கிலோ வரை, மஞ்சள் வாங்கிச் செல்வார்கள். இரண்டு, மூன்று மாதங்களுக்குப் பின், 1,000 கிலோ வாங்கிச் சென்றுள்ளனர். இதேபோல், பல கோயில்களில், மஞ்சள் வாங்கிச் செல்வதும் குறைந்துள்ளது. இதனால், 25,000 மஞ்சள் மூட்டைகள், ஈரோட்டில் தேக்கமடைந்துள்ளன. கொரோனா தளர்வு மேலும் அதிகரிக்கும் நிலையில், வரும் நாள்களில் விற்பனை, விலை உயரும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

இலங்கைக்குக் கடத்தப்படும் மஞ்சள்!

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படும் மஞ்சளுக்கு குவிண்டாலுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவதாகவும், மஞ்சளுக்கு மாற்றாகத் தங்கம் வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக மஞ்சள் இறக்குமதிக்கு இலங்கை அரசு சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது. இதனால் அங்கு மஞ்சள் வியாபாரத்தில் ஏற்பட்ட தாக்கம் தட்டுப்பாட்டை அதிகரிக்கச் செய்தது. இந்தத் தட்டுப்பாடு விலையில் எதிரொலித்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ மஞ்சளின் விலை ரூ.150-க்கு விற்பனையானது. ஆனால், தற்போது ஒரு கிலோ மஞ்சளின் விலை ரூ.1800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெருமளவு மஞ்சள் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனாலேயே சட்ட விரோத மஞ்சள் கடத்தல் அதிகரித்துள்ளது.

கடத்தல் மஞ்சள்

இந்த வரிசையில் தங்கம் உள்ளிட்ட விலையுர்ந்த பொருள்களில் தற்போது மஞ்சளும் சேர்ந்துள்ளது. இதனால் மஞ்சளை கிலோ கணக்கில் சேமித்து வைத்துக்கொண்டு கடத்தல் திட்டம் தீட்டப்படுகிறது. ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் படகில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.60 கோடி மதிப்பிலான 2,000 கிலோ மஞ்சள் மூட்டைகளையும் நாட்டு படகையும் நவம்பர் மாதத் தொடக்கத்தில் போலீஸார் பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.