புதுக்கோட்டையில் உள்ள இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி பலகாரங்கள் தயாரிக்கும் தொழிலைப் பல ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்து வருகிறது. இங்குத் தயாராகும் சிறுதானிய பலகாரங்களுக்கு வெளி மாநிலங்களிலும் சுட்டி அதிகம் என்பதால், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடாகா என்று வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பப்பட்டு வருகிறது. இங்குள்ள விவசாயிகள் இணைந்து இயற்கை முறையில் விளைவித்த சிறுதானியப் பயிர்களைக் கொண்டு இந்த தின்பண்டங்களைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றனர்.

சிறுதானிய பலகாரங்கள்

தீபாவளிப் பண்டிகைக்காக, ஏராளமான ஆர்டர்கள் குவிந்திருக்கின்றன. கவுனி, தினை, வரகு முறுக்கு, கம்பு, ராகி, தினை லட்டுகள், தூயமல்லி ஓலப்பக்கோடா, கவுனி அதிரசம், மாப்பிள்ளைச் சம்பா சீடை என்று சிறுதானியப் பலகாரங்கள் தயாரிப்பு தொடர்ந்து மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுபற்றி இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதப்பன் கூறியதாவது, “ரோஸ் தொண்டு நிறுவனம் தான் இந்த உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக அடித்தளம். பாரம்பர்ய நெல் ரகம் மற்றும் சிறுதானியங்களைப் பாதுகாப்பதையும் விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய ஊக்குவிப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு தான் செயல்பட்டோம்.

ஆரம்பத்தில் ஊர், ஊராகப் பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடி அழஞ்சோம். மீட்டெடுத்த ஒரு சில ரகங்களை விவசாயிகள்கிட்ட அறிமுகப்படுத்தினோம். புதுக்கோட்டை விவசாயிகள் பலரும் ஆர்வமாகப் பயிர் செஞ்சிட்டாங்க. வழக்கத்தை விட அதிகளவு சிறுதானியங்களும் சாகுபடி செஞ்சிட்டாங்க. ஆரம்பிச்ச போதே விவசாயிகள்கிட்ட இருந்து 256 மூட்டை நெல் வந்திருச்சு. ஆனா,விவசாயிகளால் அன்னைக்கு சந்தைப் படுத்துறதுக்கு ரொம்பவே கஷ்டமா போச்சு. வியாபாரிகளோ, அடிமாட்டு விலைக்கு கேக்குறாங்க. நம்ம எடுத்த முயற்சி எல்லாம் வீணாகிப் போயிருச்சுங்கிற மாதிரி ஆகிருச்சு.

விவசாயம்

விவசாயிகளோ வேதனையில் இருக்காங்க. அந்த நேரத்தில் இதுபத்தி ஐயா நம்மாழ்வார்கிட்ட சொன்னோம். உடனே, அவர் விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கி நெல்லை அரிசியாக்கி வித்துறுங்கன்னு சொல்லிட்டாரு. வியாபாரிகள் ரூ.600க்கு கேட்ட நெல்லை ரூ.1500க்கு வாங்கி அரிசியாக மாத்தினோம். அரிசியாக்கல் அந்த நேரத்துல ரொம்பவே சிரமம். சிரமப்பட்டு மாத்தினோம். கொஞ்ச நாள்ல எல்லாம் வித்திருச்சு. போகப்போக, ரூ.1500க்கு வாங்கி அரிசியாக்கி ரூ.2400க்கு வித்தோம். எங்க பாரம்பர்ய ரகங்களை விதைக்காமல் போயிடுவாங்களோங்கிற நெருக்கடியில தான் விவசாயிகள்கிட்ட நெல்லை வாங்கினோம்.

அதற்கப்புறம், அரிசி, மாவு தயாரிக்க ஆரம்பிச்சோம். அதற்கப்புறம் நபார்டு ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க. மதிப்புக்கூட்டப் பொருட்களைச் செய்ய பயிற்சிகள் கொடுத்தாங்க. அந்த நேரத்துல தான் அடுத்தகட்டமாக விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு சங்கமாக ஆரம்பிக்கலாம்னு நெனச்சோம். அப்போ, வேளாண்மைத்துறை நடத்திய ஒரு கூட்டத்தில் விவசாயிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தலாம்னு சொன்னாங்க. அதற்கப்புறம் தான் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போ, நிறுவனத்தோட பெயரில் ஒரு யூனிட்டே இருக்கு.

சிறுதானிய பலகாரங்கள்

அரிசி மாவு ஆக்கிய பின்பு மதிப்புக்கூட்டலில் இரட்டிப்பு லாபம் இருக்குதுன்னு தெரிஞ்சதும் அதைச் செயல்படுத்த ஆரம்பிச்சோம். நபார்டு பயிற்சி உதவியோடு, பெண்கள் சிறுதானியங்களைக் கொண்டு அதிரசம், லட்டு, ஓலப்பக்கோடா, முறுக்கு, சீடை, மண ஓலம், புட்டு மாவு, இடியப்ப மாவு, அடை மாவுன்னு தயாரிச்சு விற்பனை செஞ்சோம். தொடர்ச்சியா இதில் நல்ல வருமானம் இருக்கு. இப்போ, பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது” என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.