‘உங்க பிள்ளைகள் உங்களை ஒதுக்கி வெச்சா என்ன? நாங்க இருக்கோம் உங்க பிள்ளைங்க மாதிரி. இனி ஒவ்வொரு விழாவையும் உங்களோடுதான் கொண்டாடுவோம்’ என்று கூறி, ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த 41 முதியோர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி, அவர்களை நெகிழவைத்திருக்கிறார், காவல் ஆய்வாளர் ரமாதேவி.

முதியோர்களுடன் ரமாதேவி

கரூர் மாவட்டத்தில் இருக்கும் க.பரமத்தியில் சர்க்கிள் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் ரமாதேவி. கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் அறிவுரைப்படி, ஆதரவற்ற முதியோர்கள் வசித்துவரும் புன்னம்சத்திரம் சித்தார்த் முதியோர் இல்லத்தில், ரமாதேவி தலைமையில் க.பரமத்தி போலீஸார் தீபாவளி பண்டிகையை மனிதநேயத்துடன் கொண்டாடியிருக்கிறார்கள்.

இதுகுறித்து, ஆய்வாளர் ரமாதேவியிடம் பேசினோம்.

Also Read: “என்னைத் துரத்தின கணவர் முன்னால வாழ்ந்து காட்டணும்!” – தன்னம்பிக்கை மனுஷி பிரியா

“விழாக் காலங்களில் காவல்துறையில் இருப்பவர்களுக்கு தொடர்பணிகள் இருப்பதால், எந்த வருடமும் எங்களால் குடும்பத்தோடு பண்டிகையைக் கொண்டாட முடியாத சூழல். பலருக்கும் இது ஏக்கமாக இருக்கும். அப்போதுதான், எங்கள் மாவட்ட எஸ்.பி பகலவன் சார், ‘விழாக் காலங்களில் காவலர்களாகிய நாம், இயலாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம், நம் குடும்பமும் சிறப்பாக இருக்கும்’ என்று அடிக்கடி அறிவுரை சொல்வார்.

இனிப்பு வழங்கும் ரமாதேவி

அதையொட்டியே, இந்த வருட தீபாவளியை ஆதரவற்ற முதியோர்களுடன் சேர்ந்து கொண்டாட நினைத்தோம். புன்னம்சத்திரத்தில் இருக்கும் ‘சித்தார்த்தா’ முதியோர் இல்லத்தில் உள்ள 41 முதியோர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினோம். அவர்களுக்கு உடை, இனிப்பு, அரிசி, கோதுமை மாவு, நாலு ட்ரே முட்டை, பிரெட், பிஸ்கட் பாக்கெட்டுகள், மரக்கன்றுகள் என்று பலவற்றையும் வாங்கிக் கொண்டுபோய் கொடுத்து, அவர்களோடு சேர்ந்து கொண்டாடினோம்.

அவர்களில் சிலருக்கு என் கையால் இனிப்பு ஊட்டிவிட்டேன். நெகிழ்ந்துபோன அவர்கள் என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘எங்க பிள்ளைங்க எங்களை பாரமா நெனச்சு ஒதுக்கி வெச்சுட்டாங்க. விதியை நொந்துக்கிட்டு இங்கே காலத்தை கழிக்கிறோம். ஆனா, இங்க வந்து எங்ககூட தீபாவளியைக் கொண்டாடிய உங்களை எங்க ஆயுசுக்கும் மறக்கமாட்டோம்’ என்று உள்ளம் உருகிப்போய் சொன்னார்கள். எங்கள் மனசுக்கு பெரிய திருப்தி கிடைத்தது.

உடனே நாங்கள் அவர்களிடம், ”உங்க பிள்ளைகளா நாங்க இருக்கோம். இனி, எங்க குடும்பங்கள்ல நடக்கும் எல்லா விழாக்களையும் உங்களோடும் வந்து கொண்டாடுவோம். எங்களை பிள்ளைகளா நெனச்சு, எப்போ வேண்டுமானாலும் என்ன உதவிகள் வேண்டுமானாலும் கேளுங்க” என்றோம். அதைக் கேட்டு, பல முதியவர்கள் அழுதுட்டாங்க.

முதியோர்களுடன் ரமாதேவி

அந்த நேரம் மழை தூற ஆரம்பிக்க, அங்குள்ள முதியவர்களையும் எங்களையும் இயற்கையே ஆசீர்வதிப்பதா நினைச்சுக்கிட்டோம். ஏதோ சாதித்த மனநிறைவு ஏற்பட்டிருக்கு. தொடர்ந்து, அந்த முதியவர்களை மகிழ்விச்சுக்கிட்டே இருப்போம். வயதான அவர்கள் எதிர்பார்ப்பது, அரவணைக்க ஒரு தோளையும் அனுசரணை காட்ட சில உள்ளங்களையும்தானே? அவர்களின் அந்த ஆசையைப் பூர்த்தி செய்வோம்” என்றார் நெகிழ்ச்சியுடன்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.