கிராமங்களில் வார சந்தை கூடுவது போல பிரெஞ்சு தேசமான புதுச்சேரி நகரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சன்டே மார்க்கெட் கூடுகிறது. ஒரு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்துமே இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

image

புதுச்சேரி நகரின் மிக  முக்கிய வீதியான காந்தி வீதி மற்றும் நேரு வீதியின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஒருநாள் மட்டும் வியாபாரம் செய்யப்படுகிறது. 

தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகை நேரங்களில் வார நாட்களிலும் சன்டே மார்க்கெட் கூடுவது இதன் ஸ்பெஷல்

image

“குறைந்த விலையில்  தரமான பொருட்கள் கிடைப்பதால் உள்ளூர்  மக்களும், வெளியூர் மக்களும் சன்டே மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக கடைபிடிக்கின்றனர். 

கண்ணாடி வளையல், ஸ்டிக்கர் பொட்டு மாதிரியான பேன்சி ஐட்டங்கள் தொடங்கி அனைத்துமே இங்கு கிடைக்கிறதுசுருக்கமாகச் சொல்லணும்னா சன்டே மார்க்கெட்ட புதுச்சேரியோட OLXன்னு சொல்லலாம்

image

இங்க என்ன கிடைக்கும்னு? கேக்குறத விட உங்களுக்கு தேவையானதா சொன்ன சட்டுன்னு கற்பூரமா புரிஞ்சுகிட்டு பொருள எடுத்து கொடுத்திடுவாங்க. சுமார் நூத்துக்கும் மேற்பட்ட கடைகளும், அதை வாழ்வாதாரமா நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்களும் இங்க வியாபாரம் பாத்துகிட்டு வர்றாங்க” என சன்டே மார்கெட்டிற்கு அறிமுகம் கொடுக்கிறார் புதுச்சேரியை சேர்ந்த ஜெகன்நாதன்.

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள அஜந்தா சிக்னல் முதல் சின்ன மணிக்கூண்டு – புஸ்ஸி வீதி சந்திப்பு வரை சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு சன்டே மார்க்கெட் அமைந்திருக்கும். 

image

“டி-ஷர்ட், ஷர்ட், பேண்ட், ஷார்ட்ஸ், ஷூ, பெல்ட் மற்றும் உள்ளாடை வர எல்லாமே இங்க கிடைக்கும். விலையும் மலிவா தான் இருக்கும். திருப்பூர் மாதிரியான ஊர்கள்ல இருந்து மொத்த விலைக்கு வாங்கி வந்து சில்லறை விற்பனையா கொடுத்துடுவோம். பெரும்பாலான கடைகள்ல முதலாளி, தொழிலாளி எல்லாமே ஒரே ஆளு தான். கூட்டம் அதிகமா கூடுனா வேலைக்கு ஆள் வைக்கிறது வழக்கம். 

ஞாயிற்றுக்கிழமை விடிஞ்சுதும் இங்க கடைய போட்டுடுவோம். அந்த நாள் முழுக்க வியாபாரத்த கவனிப்போம். 

நிறைய பேர் பல வருஷமா இங்க வியாபாரம் பார்த்துகிட்டு வர்றாங்க. சில பேர் சீசன் டையத்துல கடைய விரிப்பாங்க. மழை பெஞ்சா மட்டும் தான் சிரமம். மழையோட எங்க வியாபாரமும் கரஞ்சிடும்” என்கிறார் இந்த மார்கெட்டில் கடை வைத்துள்ள சங்கர்.

image

பழைய பொருட்களை மறு சுழற்சி செய்து விற்பனை செய்வது, எலக்ட்ரானிக் ஐட்டங்கள், செல்போன் அக்சஸரிஸ், பிளாஸ்டிக் பொருட்கள், ரெடிமேட் ஆடைகள், பழைய புத்தகங்கள் என இங்கு கிடைக்காததே இல்லை. புதுச்சேரியில் மக்கள் அதிகம் குழுமுகின்ற இடங்களில் ஒன்று எனவும் சன்டே மார்க்கெட்டை சொல்லலாம். 

கொரோனா பொது முடக்கத்தினால் முழுவதுமாக முடங்கிய சன்டே மார்க்கெட் இப்போது தான் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்த சமயத்தில் எங்களை மாற்று இடத்தில் வியாபாரம் செய்ய சொல்லி உத்தரவு போடப்பட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் இதே இடத்தில் எங்களை வியாபாரம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் ஒருமித்த குரலில் கோரிக்கை வைக்கின்றனர் இங்கு வியாபாரம் செய்கின்ற வியாபாரிகள். 

image

உள்ளூர் வியாபாரிகளிடம் மட்டுமே பொருளை வாங்கி அவர்களை ஆதரிப்போம் என VOCAL4LOCAL என குரல் கொடுத்து வரும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தினால் சன்டே மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு நல்ல காலம் பிறக்கும். 

– எல்லுச்சாமி கார்த்திக்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.