இன்றைய கிரிக்கெட் உலகில் ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் கோலி எடுத்து வரும் ஒவ்வொரு ரன்னுமே ‘சாதனை மேல் சாதனை’யாக அமைந்து வருகிறது.  இன்றைய தேதிக்கு கிரிக்கெட் உலகில் பெரிய ஆட்டக்காரர் என்றால் அது கோலி தான். 

image

“அவசரக்காரர், கோபக்காரர், ஆக்ரோஷமானவர், பக்குவமில்லாதவர், ஜென்டில்மேன்களின் விளையாட்டான கிரிக்கெட்டை விளையாடவே தகுதியில்லாதவர்” என கோலியை பார்த்து வசைபாடி வந்த அதே கூட்டம் தான் ‘இளம் வயதில் இப்படியொரு சாதனையா’என இன்று வாழ்த்து சொல்ல வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் காத்துக் கிடக்கிறது. அந்த அளவிற்கு தன்னை நோக்கி வந்த அத்தனை விமர்சனங்களுக்கும் தனது பேட்டாலே பந்துகளை பஞ்சர் செய்து புத்தி சொன்னர் விராட் கோலி.

இன்று அவருக்கு பிறந்த நாள். 

image

கடந்த 1988ல் இதே நாளில்  இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தான் இந்திய கிரிக்கெட்டின் தலைமகனான கோலியும் பிறந்தார். பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட கோலியின் அப்பா பிரேம் கோலி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்து வந்ததால் குடும்பத்துடன் டெல்லியில் உள்ள உத்தம் நகரில் செட்டிலாகி இருந்தார். 

அண்ணன் விகாஷ், அக்கா பாவனாவுக்கு அடுத்தப்படியாக பிறந்த கடைக்குட்டி சிங்கமான கோலி தான் வீட்டில்  செல்லப்பிள்ளை. 

மூன்று வயதிருக்கும் போதே கையில் பேட்டை எடுத்து வாள் போல சுழற்றியுள்ளார். 

image

‘அவன் சிறு பிள்ளையாக இருக்கும் போது யாரை பார்த்தாலும் பந்தை போடும்படி சொல்லி பேட்டிங் செய்வான்’ என கோலியின் அண்ணன் விகாஷ் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். 

அப்படி கல்லி கிரிக்கெட்டில் கில்லியாக தனது நண்பர்களோடு சுற்றி வந்த கோலிக்கு “முறையான கிரிக்கெட் பயிற்சி கொடுத்தால் அவனது ஆட்டம் வேற லெவல்” என அக்கம்பக்கத்தினர் செல்லமாக வற்புறுத்த 1998 வாக்கில் டெல்லியில் இயங்கி வந்த கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்காக சேர்த்து விட்டுள்ளார் கோலியின் அப்பா. 

அன்று அவர்கள் மட்டும் கோலியை பயிற்சியில் சேர்த்து விடும்படி சிபாரிசு செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன் கிடைக்காமல் போயிருக்கலாம். 

‘கோலியை அடக்கவே முடியாது. எப்போதுமே துருதுவென வண்டு போல பறந்து கொண்டே இருப்பான். அதிலும் கிரிக்கெட் களம் என்று வந்துவிட்டால் ரீங்காரமிட்டு பறப்பது அவன் ஸ்டைல். டாப்-ஆர்டர், மிடில்-ஆர்டர் என எங்கு இறக்கி விட்டாலும் ரன்களை சேர்த்து அசத்துவான். படிப்பிலும் அவன் படு சுட்டி’ என சர்டிபிகேட் கொடுக்கிறார் கோலியின் ஆரம்ப கால பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா. 

image

வட்டம், மாவட்டம், மாநிலமென டெல்லி கிரிக்கெட்டில் படிப்படியாக கோலி முன்னேற காரணமே அவரது அப்பா கொடுத்த ஊக்கமும், உத்வேகமும் தான். அதன் மூலம் 2002ல் பதினைந்து வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியில் இடம்பிடித்தார். நான்கே ஆண்டுகளில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அசராமல் கோலி ஆடிய ரன் வேட்டையை பார்த்து அசந்து போன இந்திய கிரிக்கெட் தேர்வாணையம் கோலியை பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர்க்க இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளின் பந்து வீச்சை துவம்சம் செய்து விட்டு மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். 

அதுவரை இந்திய கிரிக்கெட் அணியில் ஆட வேண்டுமென கனவு மட்டுமே கொண்டிருந்த கோலிக்கு அந்த கனவை கட்டாயமாக செய்து மெய்ப்பிக்க வேண்டுமென்ற உந்துதல் வர காரணமே அவரது அப்பாவின் மரணம் தான். 

image

அந்த துயரமான சம்பவத்தின்போது கோலிக்கு 18 வயதிருக்கும். டெல்லி அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆடிக் கொண்டிருந்திருக்கிறார். கர்நாடகாவுக்கு எதிரான தொடரில் டெல்லி அணி தோல்வியின் விளிம்பில் தவித்து கொண்டிருக்க அப்பாவின் மரண செய்தியை தனக்குள் வைத்து கொண்டு 90 ரன்கள் அடித்து அணியை மீட்டெடுத்த பின்னர் தான் அப்பாவின் இறுதி சடங்கில் கோலி பங்கேற்றார். 

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் எதை பற்றியுமே சிந்திக்காமல் கிரிக்கெட் களமே கதி என கிடந்து தனது பேட்டை பட்டை தீட்டியுள்ளார் கோலி. அதன் மூலமாக 2008 வாக்கில் மீண்டும் பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்தார். 

image

அதற்கடுத்த சில மாதங்களில் பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தி செல்லும் கேப்டன் பொறுப்பும் கோலிக்கு வழங்கப்பட்டது. அணியை துடிப்போடு வழிநடத்திய கோலி இந்திய அணியை உலக சாம்பியனாக ஜொலிக்க செய்தார். 

அதன் மூலம் இந்திய தேர்வாணையத்தின் கவனத்தை தன்பக்கமாக ஈர்த்து இந்திய அணிக்குள் அதே ஆண்டில் இடம் பிடித்தார். 

துவக்கத்தில் இந்திய அணியில் மாற்று வீரராக களம் இறங்கினாலும் நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார் கோலி. 

ஒவ்வொரு ஆட்டத்திற்கும் சராசரியாக 50 ரன்களை குவித்து 1,500 ரன்களை மூன்றே ஆண்டுகளில் எடுத்து ‘சேசிங் மன்னன்’, ‘50 ஓவர் ஸ்பெஷலிஸ்ட்’ என கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெயரை பெற்றார் கோலி. 

image

2009ல் இலங்கைக்கு எதிரான தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் கோலி. அவரது பேட்டிங்கை பார்த்து அசந்து நின்ற சீனியர் வீரர்களான சச்சினும், சேவாக்கும் இந்தியாவில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை தொடரில் கோலியை அணியில் நிச்சயம் சேர்க்க வேண்டுமென தேர்வாணையத்திற்கு கட்டளையிட அதன்படியே கோலியும் அணியில் சேர்த்து கொள்ளப்பட்டார். ஒரு டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக தன் பங்கிற்கு கோலி ரன்களை சேர்க்க இந்தியா உலகக் கோப்பையை வென்றது. 

அதன் பின்னர் 2012ல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற 329 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய நிலையில் சச்சின், தோனி என சீனியர்களோடு கைகோர்த்து தனி ஒருவராக அணியின் ரன்களை உயர்த்தியதோடு 183 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் இட்டதோடு ‘சேஸிங் புலி’ என்ற பெயரை பெற்றார்.

image

அந்த ஒரு ஆட்டம் உலகளவில் கோலியை அடையாளம் காட்டியது. இன்று வரை கோலியின் சிறந்த ஸ்கோரும் அது தான். 

அதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் கோலி. 

‘கோலி டெஸ்ட் போட்டிகளுக்கு சரிபட்டு வர மாட்டார்’ என விமர்சனங்கள் எழ அதற்கும் டேட்டாலே பதில் சொன்னார் கோலி. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என கிரிக்கெட் ஆடி வரும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் வெவ்வேறு கண்டங்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 70 சதங்களை அடித்துள்ளார். 

image

அதில் கோலியின் பேவரைட் லிஸ்டில் இருப்பது ஆஸ்திரேலியாவின் அடிலைட் மைதானத்தில் 2014ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அடித்த சதம் தான்.

 அந்த தொடரின போது தான் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். 

ஆண்டிற்கு சராசரியாக ஆயிரம் ரன்கள் வீதம் இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே 7 முறை ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார் கோலி. ‘நாம் எது செய்ய நினைத்தாலும் அதை அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். அதற்காக நேரம் காலம் பார்க்காமல் தீவிரமாக உழைக்க வேண்டும். ஒரு சிலர் நாம் நமது இலக்கை அடைய கூடாது என நமது கவனத்தை திசை திருப்பினாலும் அதை கண்டுகொள்ளாமல் நமது முயற்சியை தன்னம்பிக்கையோடு மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் நம் பக்கம் தான். நான் எனது கிரிக்கெட் கெரியரில் ஜொலிக்க இது தான் காரணம்’ என தனது சக்சஸுக்கான ரகசியத்தை கோலி அசால்டாக சொன்னாலும் தன்னம்பிக்கையும், மனோபலமும் தான் அவரது வெற்றிக்கு காரணம். 

சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் தன்னம்பிக்கையின் மறுஉருவம் தான் கோலி. 

image

ரோபோ போல ரன் மெஷினாக களத்தில் அசராமல் ஓடி வரும் கோலியின் மூளையில் ரன் எடுப்பதற்காக மட்டுமே புரோகிராம் செய்யப்பட்டிருக்கலாம் என விராத் கோலி ரன் குவிப்பில் ஈடுபடும் போது ரசிகர்கள் பேசிக்கொள்வதுண்டு.

அதிலும் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டெஸ்ட், டி20 போட்டிகளில் கோலி முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டதும் அவரது ஆட்டமே மாறிவிட்டது. அதுவரை இந்திய அணியின் வீரனாக மட்டுமே வெற்றிக்காக போராடி வந்த கோலி ஒரு கேப்டனாக அதை செய்து வருகிறார். 

‘கிரிக்கெட் களத்தில் என்னை அப்படியே பிரதிபலிக்கிறார்’ என கிரிக்கெட்டின் காட்பாதரான விவியன் ரிச்சர்ட்ஸ் புகழ்ந்துள்ளதன் மூலம் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக இருக்கிறார் கிங் கோலி. 

ஆள் தி பெஸ்ட் கோலி… 

ஹேப்பி பர்த் டே…

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.