மதுரை ‘எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் புறக்கணித்துவிட்டு, பெண்ணினத்தையே அவமதித்த சுப்பையா சண்முகம் என்ற நபரை நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மதுரை “எய்ம்ஸ்” மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது. பா.ஜ.க. எனும் அரசியல் கட்சியின் சொந்தப் பணத்தில் அல்ல. அப்படியிருக்கும் போது – ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த – அதுவும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமாக – அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம்!

பெண்களின் கண்ணியம் குறித்தோ, அவர்களுக்குக் கவுரவம் அளிக்க வேண்டும் என்பது பற்றியோ, எந்தக் காலத்திலும் பா.ஜ.க. கவலைப்படுவதில்லை என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாக அமைந்து விட்டது. பெண்ணினத்திடம் பா.ஜ.க.விற்கு இருக்கும் வெறுப்புணர்வை இந்த நியமனம் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. இதுதான் பா.ஜ.க. “பிராண்ட்” கலாச்சாரமா? பெண்ணை அவமானப்படுத்திய மருத்துவர் சுப்பையா சண்முகம் இடம்பெற்றுள்ள குழுவிற்கு, எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியின் துணை வேந்தராக இருக்கும் மரியாதைக்குரிய டாக்டர் சுதா  சேசையன் அவர்களையும் உறுப்பினராக நியமித்து அவரையும் மத்திய பா.ஜ.க. அரசு அவமானப்படுத்தியிருக்கிறது.

பெண்களின் பெருமை குறித்த உயர்ந்த சிந்தனை கொண்ட சுதா சேசையன் அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகி விடுவதுதான் அவருக்கும்  கண்ணியம்; அவர் இதுவரை கட்டிக்காத்து வந்த நேர்மைக்கும் அடையாளமாக இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவினை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர்  சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் இடமளித்து – ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்கி விட்டு – தமிழக எம்.பி.க்களுக்கு நிர்வாகக்குழுவில் இடமளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கத்தில் உருப்படியான நடவடிக்கை எதையும் கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக முன்னெடுக்காத மத்திய பா.ஜ.க. அரசு, இப்படிப்பட்ட கோணல் புத்தியுள்ள ஒருவரை நிர்வாகக் குழுவில் இணைத்து, பெண்ணினத்தை அவமானப்படுத்திடும் வகையில் அமைத்திருப்பது,  தமிழர் பண்பாட்டு அடையாளமாம் கற்புக்கரசி கண்ணகி நீதி கேட்ட மூதூர் மதுரை மாநகரத்தையே அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.