பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையில் இப்படித்தான் காதல் உருவாகும். ஒரு சிறிய முட்டலில் அவர்கள் அறிமுகம் நிகழ்ந்து சண்டை வளர்ந்து பெரிதாகும். நாயகன் அவளை விதம் விதமாக வெறுப்பேற்றுவான். ‘யூ… யூ… யூ…’ என்று நாயகி முற்றுப்புள்ளியில்லாமல் திட்ட முயல்வாள். எண்பதுகளில் வெளிவந்த திரைப்படங்களில் இந்தப் பாணியை சலித்துப் போகும் அளவில் உபயோகித்தார்கள்.

பிக்பாஸ் வீட்டில் சனத்திற்கும் பாலாவிற்கும் இடையில் இதுதான் நிகழ்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது. சனத்திற்கு அதிக கிரெடிட்களை பாலா இன்று தர ‘அவுஹ வந்திருக்காஹ!” என்கிற மாதிரியே சனம் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்.

மறுபடியும் அதேதான்… என்னவே நடக்குது இங்க?!

பிக்பாஸ் – நாள் 19

‘ஆலுமா டோலுமா’ என்கிற பாட்டுடன் பத்தொன்பதாவது நாள் விடிந்தது. நடனத்தின் போது ‘என் வழி தனி வழி’ என்று மறுபடியும் தனி ஆவர்த்தனத்திற்குள் சென்று விட்டார் ஷிவானி.

“டேய் உனக்கு ஜோசியமெல்லாம் தெரியுமாமே. சாம் சொன்னாங்க. போன வாரம் ரேகா போவாங்கன்னு கரெக்ட்டா சொல்லிட்டியாமே.. இந்த வாரம் யாரு போவா… சொல்லு… சொல்லு…” என்று ஆஜித்தை நச்சரித்துக் கொண்டிருந்தார் சுரேஷ். ஆஜித் சற்று யோசித்து ‘நீங்கதான்… அது முன்னாடியே சொல்லிட்டேன்” என்றார். ‘கொடு. கொடு…’ என்று கேட்டு வாங்கிக் கொண்டாலும் சுரேஷினால் இதை மனதார ஏற்க முடியவில்லை. என்றாலும் மறைத்துக் கொண்டு ‘அப்படியா? சந்தோஷம்’ என்றபடி எழுந்து சென்றார்.

ஆனால் ஆஜித்திற்கு இந்தச் சக்தி இருக்குமோ என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அன்று மாலை நடந்த தகுதி வரிசை டாஸ்க்கில் சுரேஷ் 16வது இடத்திற்கு வந்தார். (கன்டென்ட் அதிகம் தருகிற போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷை பிக்பாஸ் அப்படியெல்லாம் கை விட்டு விட மாட்டார். இது என் ஜோசியம்).

‘நாடா இல்லை காடா’ டாஸ்க்கில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இருவரை தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டுமாம். இரண்டு அணிகளில் இருந்து தலா ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். இது சரியா என்று தெரியவில்லை. (ஒரே அணியில் இருந்த இருவர் கூட சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்.. இல்லையா?!)

சுரேஷின் பெயர் முதலில் பலமாக பரிசீலிக்கப்பட்டு பிறகு அர்ச்சனாவை தேர்ந்தெடுத்தார்கள். (ஆஜித் ஜோசியம் வொர்க்அவுட் ஆவுது போலிருக்கே?!) இன்னொரு அணியில் சனத்தின் பெயர் அதிகம் அடிபட்டாலும் ஒரு பாவனையாக அந்த அங்கீகாரத்தை ஏற்க பலரும் மறுத்துக் கொண்டிருந்தார்கள். “எனக்கு கொடுங்கப்பா… நான்தான் ஓப்பனா கேட்கறேன்ல…” என்று கேட்டு வாங்கி தேர்வானார் பாலா. (வாயுள்ள பிள்ளை பிழைக்கும்).

பிக்பாஸ் – நாள் 19

அடுத்ததாக, இந்த வாரம் முழுவதும் முழு ஈடுபாட்டோடு செயல்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சனத்தின் பெயரை மிக அழுத்தமாக பரிந்துரை செய்தார் பாலாஜி. (அவங்க ஈடுபாட்டோடு வேலை செஞ்சது இருக்கட்டும்… நீ காட்டற ஈடுபாடு ஒரு மார்க்கமா இருக்கேப்பா… பாலா)

இதற்கு சனம் வெட்கப்பட்டு தலை குனிந்து ‘தாங்க்ஸ்’ என்றார். (பாவம்! ரெண்டு பேரும் சேர்ந்து தாத்தாவை டீல்ல விட்டுருவாங்க போல). பாலாவின் பரிந்துரையைப் பார்த்த கேப்ரியல்லா ‘இதயம் துடிக்கும் சின்னத்தை’ கையில் செய்து காட்டி குறும்பு செய்தார். பரிந்துரைப் பட்டியலில் சனம், ஆரி, அனிதா ஆகியோர் வந்தாலும் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று சனம் வென்றார்.

பிக்பாஸ் – நாள் 19

ஆக… அடுத்த வாரத்திற்கான தலைவர் போட்டியில் அர்ச்சனா, பாலா மற்றும் சனம் இருப்பார்கள்.

அடுத்ததாக, சலிப்பாக செயல்பட்ட இரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து ‘ஓய்வெடுக்கும் அறை’க்கு அனுப்ப வேண்டும். இது சங்கடமான தேர்வு என்பதால் ஒவ்வொருமே எழுந்து சென்று தங்களின் கருத்துக்களைக் கூற வேண்டும்.

ஆரியின் பெயரை ‘ஆரி பிரதர்’ என்று மாற்றி விடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிற்கு பெரும்பாலோனோர் அப்படியே குறிப்பிடுகிறார்கள். (ரொம்ப நல்லவனா இருந்தாலே இந்தப் பிரச்னைதான். பொண்ணுங்க கூட ‘அண்ணா’ன்னு கூப்பிட்டுடும். பாலா போன்ற பசங்களுக்குத்தான் மச்சம்!)

சலிப்பாக செயல்பட்டவரின் தேர்வில் ‘ஆரி பிரதரின்’ பெயர் அதிகம் அடிபட்டது. ‘அரக்கர் அணிக்கு மாறியும் அவர் ஈடுபாட்டோடு செயல்படவில்லை’ என்கிற காரணம் அதிகமாக சொல்லப்பட்டது. இது உண்மைதான்.

பிக்பாஸ் – நாள் 19

‘எப்போதும் அட்வைஸ் செய்வது மாதிரி பேசிக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் ஆரியிடம் சுவாரஸ்யமாக இல்லை’ என்றும் சொன்னார்கள். இன்னொரு தேர்வு ஆஜித். “தனக்கு நெருக்கமானவர்களைத் தவிர மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டேன்கிறானாம்.” ஆக. கண்ணாடி அறைக்குள் அனுப்பப்பட தேர்வானார்கள் ஆரியும் ஆஜித்தும்.

இந்தச் சம்பவத்தின் போது, சிக்கனமான உடையில் இருந்த ஷிவானி தன் அபிப்ராயத்தையும் அதே போல் சிக்கனமாக சொல்லி விட்டுப் போக ‘காரணம் சொல்லுங்க’ என்று இடைமறித்தார் பிக்பாஸ். காரணம் சொன்ன பிறகு. ‘யாரை நாமினேட் பண்ணீங்க… அதையும் சொல்லுங்க” என்றார். “அதான் சொன்னேனே. பிக்பாஸ்’ என்று சிணுங்கியது குழந்தை. (நான் மட்டுமல்ல… ஷிவானியின் ‘அற்புதமான’ குரலை எப்படியாவது கேட்டு விட மாட்டோமா என்று பிக்பாஸூம் தவிக்கிறார் போல).

ஆரி தன் கருத்தைச் சொன்ன போது ‘டாஸ்க்கில் ஷிவானியின் ஈடுபாடு அதிகம் இல்லை’ என்று சொன்னது சரியான விஷயம். ஆனால், இது போன்ற விஷயங்களில் தன்னை அதிகம் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் என்பது ஷிவானிக்கு உறைத்ததோ. என்னவோ… இன்றுதான் வாயைத் திறந்து தனக்காக வாதாடினார். ஆனால் அது சுமாரான வாதம். “நானும் ஒரு யோசனை சொன்னேன்… யாரும் அதை எடுத்துக்கலை” என்றார். “ஆனா அதை டீம்ல உக்காந்து டிஸ்கஸ் பண்ணீங்களா?” என்று ஆரி மடக்கிய போது ஷிவானியால் பதில் சொல்ல முடியவில்லை.

“ஒரு நல்லவனா ஜெயிலுக்குப் போறதுல பிரச்னையில்ல. ஆனா திரும்பி வரும் போதும் நான் நல்லவனாத்தான் இருப்பேன்” என்பது போல் ஆரி பிரதர் பஞ்ச் டயலாக் பேசினார். (யப்பா. சாமி.. இப்படி ஓயாம பேசறேன்னுதானே.. உன்னை ஜெயிலுக்கு அனுப்பிச்சிருக்காங்க?!). “உன்கிட்ட இருக்கற பாட்டுத்திறமையை வெச்சு மத்தவங்களை கவர் பண்ணு” என்பது போல் செல்லத் தம்பி ஆஜித்திற்கு டிப்ஸ் தந்து கொண்டிருந்தார் ரம்யா.

பிக்பாஸ் – நாள் 19

“ரியோவை முன்வரிசையில் நிற்க வைக்க வேண்டும்’ என்கிற உத்தியோடு அர்ச்சனா செயல்படுகிறார்” என்று ஆரி சொல்ல, “அடப்பாவிங்களா… இதையே இப்பத்தான் கண்டுபிடிக்கறீங்களா?” என்பது போல் பதில் சொன்னார் பாலாஜி.

“வெளிப்படையாகப் பேசி விடுகிறவர்கள், மற்றவர்களின் பழிவாங்குதலுக்கு எளிதில் இலக்காவார்கள். தகுதியிருந்தாலும் அவர்கள் வெளியேற அதிக வாய்ப்புண்டு. ஆனால் நட்பின் மூலம் காப்பாற்றப்படுபவர்கள், தகுதியில்லாத போட்டியாளர்களாக கூட இருப்பார்கள்” என்று ஜெயில் வாசலில் அனிதா உதிர்த்தது திருவாசகம். அம்மணி இன்றுதான் தெளிவாக ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

‘ஒன்று… இரண்டு… என்று என்னை வரிசைப்படுத்திப் பாடு” என்று முருகப்பெருமான் ஒளவைப்பாட்டியிடம் கேட்டாராம். அது போல போட்டியாளர்கள் தங்களுக்குள்ளே கலந்துரையாடல் செய்து ஒன்று முதல் பதினாறு வரிசையை தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டுமாம். அதாவது ஒவ்வொருவரைப் பற்றியும் மற்ற அனைவரும் பரிசீலனை செய்து காரணங்களைக் கூறி வரிசைப்படுத்த வேண்டும்.

பிக்பாஸ் – நாள் 19

இந்த வாக்குமுறை சற்று குழப்பமாக இருந்தது. இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இருப்பவர்களை முதலில் வைத்துக் கொள்வோம் என்றார்கள். வரிசையின் கடைசியில் (எண்.16) சென்று நிற்பதற்கு துடியாகத் துடித்தார் சுரேஷ். (ஆஜித் ஜோசியம் வேலை செய்யுது!) மிகவும் ஆசைப்பட்ட அவரை ‘சரி… போங்க’ என்று அந்த எண்ணிற்கு அனுப்பி வைத்தார்கள்.

தேர்வு முறையில் குழப்பம் ஏற்பட்ட போது சம்யுக்தா ஒரு யோசனையைக் கூறினார். Top 8, Bottom 8 என்று முதலில் இரண்டாகப் பிரித்து விட்டு பிறகு அதிலிருந்து உள்வரிசையை தேர்ந்தெடுக்கலாம் என்று அவர் சொன்னதைப் பின்பற்றினார்கள்.

“நீ கையத் தூக்கினியா… நீ தூக்கலையா…” என்று குழப்பமாக நடைபெற்று முடிந்த இந்த வாக்கெடுப்பில், முடிவு பின்வருமாறு அமைந்தது. கீழிருந்து மேலான வரிசை.

பிக்பாஸ் – நாள் 19

ஒன்று என்கிற எண்ணிக்கையைப் பெறுவதென்பது ஏறத்தாழ பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெறுவதற்கு சமம். ரம்யா இதற்கு தகுதியானவர்தான். முதலில் பின்வரிசையில் இருந்தாலும் தன் கருத்துக்களை எப்போதும் புன்னகையுடன் சொல்வதாலும் சமயங்களில் அறிவுபூர்வமாக பேசுவதாலும் இதற்கு தகுதியானவர் ஆகிறார். (இப்போதைய நிலையில்…)

இரண்டாவதாக ஷிவானி தேர்வானது ஆச்சர்யம். ஒப்பனையைத் தாண்டி அவரின் தனித்தன்மை இதுவரை வெளிப்படவேயில்லை. ‘மற்றவர்களைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதாலேயே தகுதியில்லாதவர்களும் இங்கிருப்பார்கள்’ என்று அனிதா சொன்னது உண்மையாயிற்று.

பதினைந்தாவது இடத்திற்கு போகிறேன் என்று முதலில் வெறுப்பாக கூறிய பாலா, மூன்றாவது இடத்திற்கு வந்தது சிறப்பு. தன் அபிப்ராயங்களை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் கூறி விடுகிறார் பாலா. பதினாறாவது இடத்திற்கு சென்றே தீருவேன் என்று சுரேஷ் துவக்கத்தில் அடம்பிடிக்காமல் இருந்திருந்தால் அவரது வரிசை நிலையும் மாறியிருக்கலாம்.

காரணங்களைக் கூறும் போது பாலா சொன்னவை ஏறத்தாழ நியாயமாக இருந்தாலும் அதை அவர் சொன்ன முறையினால் சர்ச்சையாயிற்று. “வேல்முருகன் டிப்ளமட்டிக்காக எப்போதும் நடந்து கொள்கிறார். “‘Truth or dare’ டாஸ்க்கில் கூட அவர் யாரையும் குற்றம் சாட்ட விரும்பாமல் மழுப்பி விட்டு மீசை வரைந்து விட்டு சென்றார்” என்று பாலா கூறும் காரணம் சரியானதுதான்.

பிக்பாஸ் – நாள் 19

ஆனால் ‘நான் ஒரு கிராமத்தான்ங்க’ என்று வேல்முருகன் சொன்ன பிறகு “டிப்ளமஸின்னா மீனிங் தெரியுமா?” என்று பாலா கேட்டது ரசிக்கத்தக்கதாக இல்லை. ‘அதன் பொருள் அறிந்துதான் பேசுகிறீர்களா?” என்பதுதான் பாலா கேட்க விரும்பியது. ஆனால் ‘உனக்கெல்லாம் இங்கிலீஷ் தெரியுமா?’ என்பது போல் பொருள் வந்ததற்கு காரணம், அவர் கேட்ட சூழலும் தொனியும்.

நாம் கேட்கும் தொனியின் மூலம் ஒரு கேள்வியின் அர்த்தமே தலைகீழாக மாறி விடும். ‘உடம்பு எப்படி இருக்கு?’ என்று மென்மையாக கேட்டால் அக்கறை என்று பொருள். அதையே அழுத்திக் கேட்டால் மிரட்டலாகி விடும்.

உண்மையில் ‘Diplomacy’ என்பதற்கு ‘சாதுர்யம்’ என்பதுதான் பொருள். ஆனால் வேல்முருகனின் பிரச்னை, அவர் வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) இல்லாமல் இருப்பதுதான். யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாமல், விழுங்கி விடுகிறார். ‘நாம யாரு வம்புக்கும் போறதில்ல.. கமுக்கமாக இருந்துடுவோம்’ என்பதே அவர் பாலிஸியாக இருக்கிறது. எல்லாச் சமயங்களிலும் இப்படி இருப்பது மற்றவர்களுக்கு எரிச்சலைத் தரலாம்.

“அர்ச்சனா ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார். ரியோவின் கோபத்தை நியாயப்படுத்தும் அவர், என்னுடைய கோபத்தை மட்டும் குறை கூறுகிறார். ‘என்னை குழந்தை’ன்னு சொன்னது. ‘ஒண்ணு வெச்சா சரியாப் போயிடும்’ன்னு சொன்னது போன்ற விஷயங்கள் எனக்கு கோபம் ஏற்படுத்தியது. கோபம் ஒன்றும் கெட்ட குணம் இல்லை” என்றெல்லாம் பாயிண்ட்டுகளை பாலாஜி தெறிக்க விட்டது சிறப்பு.

பிக்பாஸ் – நாள் 19

‘ஒவ்வொருவரின் பின்னணியை வைத்துதான் அவருடைய கோபத்தை தீர்மானிக்க முடியும்’ என்று ரியோவிற்கு சாதகமாக வெளிப்பட்ட அர்ச்சனாவின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை.

‘நான் எதற்கோ ஆர்டரை மாற்றிய போது அதை உத்தி என்று சந்தேகப்பட்ட பாலாவின் கமெண்ட் எனக்கு பிடிக்கவில்லை’ என்று பிறகு சம்யுக்தாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ‘நம் வயசு முதிர்ச்சி வேற’ என்று சொன்ன சம்யுக்தா, ‘நாம எங்கிருந்து வந்திருக்கோம்’ என்று இன்னொரு காரணத்தை இணைத்துக் கொண்டது ஆட்சேபகரமான கருத்து. ஒருவர் வளர்ந்து வந்த பின்னணியை வைத்து அவருடைய குணாதிசயங்களை மதிப்பிடுவது ஆபத்தான போக்கு.

“இப்பவும் பாலாஜியை குழந்தை-ன்னுதான் நெனக்கறேன். அவன் கடந்து வந்த பாதை அப்படி. அதனாலதான் டக்குன்னு கோபப்படறான்” என்றார் அர்ச்சனா. “நீங்க அவனை நல்லாப் பார்த்துக்கிட்டீங்க. ஆனா அவன் உங்களை வெச்சு செஞ்சுட்டான்” என்று சந்தானம் காமெடியையெல்லாம் அர்ச்சனாவிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் ரியோ. (ரியோ… பிக்பாஸ் வீட்ல குரூப்பிஸம் இருக்கா, இல்லையா?!).

“உன்கிட்ட நேர்மையான குணம்லாம் இருக்கு. ஆனா நீ அப்ப சொன்னது ரொம்பவும் அராஜகம்” என்று பாலாஜியின் வில்லங்கமான கமெண்ட்டை பிறகு அழுத்தமாக கண்டித்துக் கொண்டிருந்தார் சுரேஷ்.

சுரேஷ் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு இடையில் உள்ள நட்பை கவனிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. இருவரும் உள்ளார்ந்த பாசத்துடன் பழகினாலும் குறையென்று வந்தால் வெளிப்படையாக சுட்டிக் காட்டி விடுகிறார்கள். உண்மையான நட்பிற்கு மிக முக்கியமான குணம் இது.

‘டிப்ளமஸி’ விவகாரத்தையொட்டி சுரேஷூம் அர்ச்சனாவும் பிறகு வேல்முருகனிடம் பேசிக் கொண்டிருந்தனர். ‘அப்படின்னா என்ன… சபை நாகரிகமா…” என்று வெள்ளந்தியாக கேட்டுக் கொண்டிருந்தார் வேல். “அண்ணா… மத்தியானம்தானே விளக்கிச் சொன்னேன்” என்று சிணுங்கினார், பக்கத்திலிருந்த சனம். ‘மறந்து போச்சும்மா’ என்றார் வேல் இயல்பாக.

பிக்பாஸ் – நாள் 19

“‘சரி விடுங்கம்மா… படிப்பறிவு இல்லாதவன்” என்று வேல்முருகன் சொன்ன போது சட்டென்று மிக நெகிழ்வாக இருந்தது. ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். அறிவு அல்ல. ஆனால் ஆங்கிலம் தெரியாததை இங்கு தாழ்வு மனப்பான்மையாக உணரச் செய்து விடுகிறார்கள். அப்படியொரு சூழல். “நான் படிச்சிருக்கேன். அறிவு சுத்தமா கிடையாது” என்று சனம் சொன்னது ஒரு நல்ல வாக்குமூலம்.

“அண்ணே. உங்ககிட்ட மன்னிப்பு கேட்கறேன். நான் உங்க இயலாமையைப் பயன்படுத்திக்கல. அந்த வார்த்தைக்கு பொருள் தெரிஞ்சுதான் பேசறீங்களான்னுதான் கேட்டேன்” என்று பிறகு வேல்முருகனிடம் மன்னிப்பு தோரணையில் பேசினார் பாலாஜி. “டிப்ளமஸின்னா என்ன? இருக்கு… ஆனா இல்லை… அதானே?” என்று வேல்முருகன் மீண்டும் ரிவர்ஸ் கியர் போட்டது நல்ல நகைச்சுவை. பக்கத்திலிருந்த பேசாமடந்தை ஷிவானி நமட்டுச் சிரிப்புடன் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

Also Read: சைலன்ட் ரம்யாவின் வயலன்ட் ஐடியா… `காஞ்சனா’ சிக்ஸர் அடித்த சுரேஷ்! பிக்பாஸ்- நாள் 18

“அண்ணே… டிப்ளமஸின்னா…” என்று ஆரம்பித்த பாலாஜிக்கே அதை தமிழில் சரியாக பொருள் சொல்லத் தெரியாமல், “வெளி உலகத்துல அப்படி இருக்கறது ஓகேண்ணே… ரொம்ப நல்ல விஷயம். எனக்கு அது வரவே வராது. ஆனா பிக்பாஸ் வீட்ல அது ஒத்து வராது” என்று சரியான விஷயத்தைச் சொன்னார் பாலாஜி “என்னமோப்பா…” என்கிற மோடியிலேயே இருந்தார் வேல்.

ரமேஷின் பிறந்த நாள் என்பதால் கேக் வந்தது. சனம் சொல்லியும் அதை கீழே கூட வைக்காமல் ‘அவுஹ வந்துடுவாஹ’ என்று நிஷா சொன்னதில் இருந்து அவருக்கும் ரமேஷிற்குமான நட்பின் ஆழம் விளங்கிற்று. ரமேஷின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அவரது சகோதரர் ஜீவா, ‘திடீர்’ வீடியோவில் வந்து வாழ்த்து சொன்னது இனிய ஆச்சர்யம்.

பிக்பாஸ் – நாள் 19
பிக்பாஸ் – நாள் 19

இதே நாளில்தான் ஆஜித்தின் தாய்க்கும் பிறந்தநாளாம். எனவே அதே கேக்கை வைத்து அந்த விஷயத்தையும் கொண்டாடினார்கள். “நீயே… நீயே… நானே நீயே…” என்று ‘எம்.குமரன், S/o.மகாலஷ்மி’ படத்திலிருந்து ஒரு பாடலை மிக அருமையாகப் பாடினார் ஆஜித். தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு ஒரு மகன் மிக நெகிழ்ச்சியாக நன்றி சொல்லும் பாடலாக அது இருந்தது சிறப்பு. ரமேஷ் பிறந்த நாள் கொண்டாட்டத்தை விடவும் ஆஜித்தின் பாடலும் நன்றியும் முக்கியமானதாக அமைந்து விட்டது.

ஆக… வரிசை எண்.16-ல் கடைசியாக நிற்கிறார் சுரேஷ். ஆஜித்தின் யோசியம் பலிக்குமா? இந்த வாரக்கடைசியில் தெரிந்து விடும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.