சென்னைக்கு சப்ளை செய்ய டன் கணக்கிலான குட்கா கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னரை வேலூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை பின்தொடர்ந்து துரத்தி பிடித்த தனிப்படை போலீஸ். எப்படி என்பதை பார்க்கலாம்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு கண்டெய்னர் மூலம் கடத்தி வரப்பட்ட 5.5 டன் குட்கா போதைப் பொருளை 6 பேர் கொண்ட சென்னை தனிப்படை போலீசார் சேஸிங் செய்து பிடித்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில் மாதம் சராசரியாக 75 டன் வரை இந்த கும்பல் சென்னைக்கு குட்கா கடத்தி வருவது அம்பலமாகியுள்ளது.

image

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு 2014 முதல் தடை நீடிக்கிறது. இதற்கிடையில் 2016 -ம் ஆண்டு சென்னை அருகே முறைகேடாக குட்கா குடோன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அதில் நடந்த ஊழல் வழக்காக இன்றளவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் குட்கா விற்பனை தொடர்பாக காவல் துறையினர் விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் கோட்டூபுரத்தில் கடைகளுக்கு குட்காவை சப்ளை செய்த புருசோத்தமன் என்பவரை 250 கிலோ குட்காவுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரிகள் மூலமாக குட்கா கடத்தப்படுவது தெரியவந்தது. இந்த குட்கா கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்க மயிலாப்பூர் துணை ஆணையர் சசாங் சாய் தலைமையில் தனிப்படை அமைத்து தமிழக – கர்நாடக எல்லையில் முகாமிட்டனர்.

image

குட்கா கொண்டு வரப்படும் கண்டெய்னர் லாரியின் பதிவெண் கையில் இருந்ததால் அந்த சரக்கு லாரியை பின்தொடர்ந்தனர். சென்னையில் எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க பின் தொடர்ந்த போது, ஸ்ரீபெரும்புதூர் அருகே சரக்கு ஆட்டோ எனும் சிறிய சரக்கு வாகனங்களில் மாற்றி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல முயன்ற போது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். லாரிக்குள் 5.5 டன் எடை கொண்ட சுமார் 45 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

கண்டெய்னரில் குட்கா கொண்டு வந்த விருதுநகர் மாவட்டம் காளையார் குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் முத்துராஜ், விழுப்புரம் மாவட்டம் கண்ணன்காடு பகுதியைச் சேர்ந்த சிவராஜ், திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

image

இதற்கு மூளையாக செயல்பட்ட நபர் கனகலிங்கம் என்கிற செந்தில் தலைமறைவாக உள்ளார். இதே போன்ற மூன்று கண்டெய்னர்கள் மூலம் வாரத்திற்கு சராசரியாக 75 டன் சென்னைக்கு சப்ளை செய்து வந்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கும்பலால் ஒரு மாதத்திற்கு மட்டும் பல கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுகிறது. குட்காவிற்கு பெயரளவில் தடை நீடித்தாலும், சென்னையில் பெட்டி கடை வரை சகஜமாக குட்கா புழங்குவதற்கு இந்த கும்பலால் தான் முக்கிய காரணம் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.

பெங்களூரில் இருந்து மொத்தமாக குட்கா பொருட்களை வாங்கி வந்து சென்னையில் விநியோகம் செய்து வந்த தலைமறைவாக உள்ள கனகலிங்கம் என்ற செந்திலையும் அவரது கூட்டாளி முனியப்பன் என்பவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குட்கா பறிமுதல் செய்த, தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா, தலைமை காவலர்கள் ராம மூர்த்தி, சுகுமார், ராம்குமார், மற்றும் தியாகராஜன், திருநாவுக்கரசு, சங்கர் தினேஷ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட தனிப்படை போலீசாரை மயிலாப்பூர் துணை ஆணையர் சசாங் சாய் பாராட்டியுள்ளார். இந்நிலையில் மயிலாப்பூர் துணை ஆணையர் சசாங் சாய் ட்விட்டர் பக்கத்தில் ரெஸ்ட்லிங் வீடியோவை பதிவிட்டு, “குட்கா கும்பலை பறந்து பறந்து அடிப்போம்” என பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.