பீகார் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக இருந்துவரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சிக் காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதன் காரணமாக புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. கொரோனா காரணமாகத் தேர்தலைத் தள்ளிவைக்க எதிர்க்கட்சிகள் வலுவான கோரிக்கைகளை முன்வைத்தன. இருந்த போதிலும், உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணைய அறிக்கை

இதையடுத்து, மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் 27-ம் தேதி மற்றும் நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. 243 தொகுதிகளில், 38 தொகுதிகள் எஸ்.சி பிரிவினருக்கும். இரண்டு தொகுதி எஸ்.டி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

1990-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. பின்னர், அங்கு 2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளமும் ஒரே கூட்டணியில் பாஜக-வை எதிர்த்து வெற்றிபெற்று நிதிஷ்குமார் முதலமைச்சராகவும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சார்பில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

தேஜஸ்வி யாதவ்

இதனிடையே இரண்டு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் விலகி பா.ஜ.கவுடன் புதிய கூட்டணியமைத்து முதலமைச்சரானார். இந்த பரபரப்பான அரசியல் சூழல் வருகின்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.கவுடனும் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸுடனும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன.

ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி!

இந்த கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க இடையே 50:50 என்ற விகிதத்தில் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில், 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 122 தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு 121 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ‘இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா’ கட்சிக்கான தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து வழங்கவேண்டும் என்றும் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கூட்டணியில் இடம்பெற்றால் பா.ஜ.க தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து வழங்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் இருப்பார் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வ முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

நிதிஷ்குமார்

லோக் ஜனசக்தி!

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இருதய அறுவை சிகிச்சையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரின் மகன் சிராஜ் பஸ்வான் தேர்தல் பணிகளைத் தலைமையேற்று நடத்திவருகிறார். அதோடு இவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது. தாங்கள் கேட்ட இடங்களை ஐக்கிய ஜனதா தளம் ஒதுக்கவில்லை என்பதாலும் வெறும் 27 இடங்களை மட்டும் வழங்கியதாகவும் தெரிகிறது. ஆனால், வரும் தேர்தலில் அவர்கள் கட்சி சார்பில் 143 இடங்களுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டதால், இந்த தேர்தலில், லோக் ஜனசக்தி தனித்துக் களம் காண முடிவு செய்துள்ளது. இருந்த போதிலும், பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து, மற்ற 143 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் தெரியவருகிறது.

ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணி இட ஒதுக்கீடு:

இந்தக் கூட்டணியில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 144 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 70 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) 19, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்ட 144 தொகுதிகளிலிருந்து “விகாஸ்ஷீல் இன்ஸான் பார்ட்டி” என்ற புதிய கட்சிக்குத் தொகுதிகள் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி யாதவ்

பீகாரில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழலில், தற்போது அங்கு கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு, பிரசாரம் என்று தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனிடையே, இந்தத் தேர்தலுக்கு பா.ஜ.கவின் பொறுப்பாளராக மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களாகப் பீகாரில் பலமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முன்னேற்பாடு:

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியத் தேர்தல் ஆணையம், முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக மீதமிருக்கும் 78 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வழக்கத்தைவிட ஒருமணி நேரம் அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது. கடைசி ஒருமணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் வாக்களிக்க வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வீடு வீடாக வாக்கு சேகரிக்க ஐந்து நபர்கள் மட்டுமே செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, வாக்காளர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 46 லட்சம் முகக்கவசங்கள், ஏழு லட்சம் ஹேண்ட் சானிட்டைசர்கள், ஆறு லட்சம் பி.பி.இ கிட்டுகள் மற்றும் 23 லட்சம் கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு, வாக்காளர்களுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய 7.2 கோடி கையுறைகள் தயார் செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முன்னாள் தலித் தலைவர் சக்தி மாலிக் (37) நேற்று பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவரான தேஜஸ்வி பிரசாத் யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், அனில்குமார் சாது, பாஸ்வான் ஆகியோரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

FIR

சுட்டுக்கொல்லப்பட்ட சக்தி மாலிக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராணிகஞ்ச் தொகுதியில் தன்னைப் போட்டியிட அனுமதிக்க, தன்னிடம் தேஜஷ்வி யாதவ் ரூபாய் 50 லட்சம் கோரியதாகவும், தன்னை அவர் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளைங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நேற்று சக்தி மாலிக், மூன்று மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் அரசியல் பின்னணி இருப்பதாகவும், அவர் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்திருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அவர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

மேலும், அக்டோபர் 01-ம் தேதி பாட்னாவில் பா.ஜ.க.தலைவர் ராஜேஷ், காலை நடைப்பயிற்சி செல்லும் போது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது பீகாரில் கடுமையான கொரோனா பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், கனமழை எனப் பல்வேறு நெருக்கடியான சூழல் நிலவும் வேலையில். வருகின்ற தேர்தலில் வெற்றிபெற இரண்டு கூட்டணிக் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவு வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.