பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளியின் கணித ஆசிரியை பைரவி, தன் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 16 பேருக்கு, தனது சொந்தச் செலவில் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்த செய்தியை விகடனில் பதிவு செய்திருந்தோம். குடும்பத்தின் பொருளாதார நிலையால் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காமல் தவித்த மாணவர்களுக்கு இந்தப் பரிசுடன், ஊரடங்கு முடிந்து மீண்டும் பள்ளி திறக்கும்வரை ரீசார்ஜ் செலவை அவர் ஏற்றுக்கொண்டிருந்ததையும் நமது செய்தியில் எழுதியிருந்தோம்.

மாணவர்களுடன் ஆசிரியர் பைரவி

விகடன் இணையதளத்தில் இந்தச் செய்தியைப் படித்த, சென்னையில் சலூன் கடை வைத்திருக்கும் தர்மராஜ், “அந்த மாணவர்களுக்கு ஒரு மாசம் ரீசார்ஜ் செலவை நான் ஏத்துக்கிறேன்” என்று கோரி விகடனை தொடர்புகொண்டிருந்தார். நாம் அவரிடம் ஆசிரியை பைரவியின் தொடர்பு எண்ணை அளித்தோம். அவரிடம் பேசி, 16 மாணவ, மாணவிகளுக்கு ரீசார்ஜ் செலவை செய்திருக்கிறார் தர்மராஜ்.

பல்லாயிரங்கள், லட்சங்கள் என சம்பளம் வாங்குபவர்கள்கூட, ‘உதவி தேவை’ என்ற செய்திகளைக் கண்டும் காணாமலும் கடந்துபோகும்போது, சலூன் கடை வைத்திருக்கும் தர்மராஜ், ‘ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்விக்கு என்னாலான உதவியைச் செய்கிறேன்’ என்று முன்வந்ததும் அதைச் செய்து முடித்திருப்பதும் மகத்துவமானது.

தர்மராஜிடம் பேசினோம். “கவர்ன்மென்ட் வேலையில இருக்குறவுங்க எல்லாரும் வாங்குற சம்பளத்துக்கு உருப்படியா வேலை செய்றாங்களானு நாம பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். ஆனா, பெரம்பலூர் பைரவி டீச்சர், அவங்க பொண்ணுக்கு நகை வாங்க சேமிச்சு வெச்சிருந்த பணத்தை எடுத்து, 16 பள்ளிக்கூடப் புள்ளைங்களுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறது எவ்ளோ பெரிய விஷயம்..!

தர்மராஜ்

அந்தச் செய்தியை விகடன்ல படிச்சப்போ, நானும் என்னாலான உதவியை அந்தப் புள்ளைங்களுக்கு செய்யணும்னு எண்ணம் வந்துச்சு. விகடனைத் தொடர்புகொண்டு, ‘அந்த மாணவ, மாணவிகளுக்கு ரீசார்ஜ் செலவை நான் ஏத்துக்கிறேன்’னு சொன்னேன். அவங்க, பைரவி டீச்சரோட தொடர்பு எண்ணைக் கொடுத்தாங்க.

டீச்சர்கிட்ட பேசினப்போ, ‘சார், நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்க, உங்களால முடிஞ்சா இதைச் செய்யுங்க.

இல்லைன்னா பரவாயில்ல, நானே இந்தப் பசங்களுக்கு நெட் ரீசார்ஜ் பண்ணிக்கொடுக்கிறேன்’னு சொன்னாங்க. ‘இல்ல மேடம்… கிராமப்புற மாணவர்களோட வீட்டின் நிலைமை என்னன்னு எனக்கு நல்லா தெரியும். என்னால முடிஞ்ச சின்ன உதவியை அவங்களுக்கு நான் செய்றேன்’னு சொல்லி, ஒரு மாசத்துக்கு அவங்களுக்கு எல்லா நெட் ரீசார்ஜ்ஜும் செய்துவிட்டேன். 249 பேக், 14 மாணவர்களுக்கு 3,486 ரூபாய் ஆனது.

கடைசியாக, பைரவி டீச்சர்கிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கிட்டேன்.

ஆசிரியர் பைரவி

‘மாணவர்களைப் படிக்கச் சொல்லி ரொம்ப நெருக்கடி கொடுக்காதீங்க மேடம். அப்படி நான் நெருக்கடி கொடுத்ததாலதான் என் மகனை இழந்து நிக்கிறேன்’னு சொன்னேன்” என்றவர், தழுதழுத்தார். இடைவெளிக்குப் பின் தொடர்ந்தார்.

”நல்லா படிக்கணும்ங்கிற ஆசையை என் மகன்மேல திணிச்சேன். அவன் படிச்ச பள்ளியிலும் கடும் நெருக்கடி கொடுத்திருக்கிறாங்க.

எந்தப் பக்கமும் வேதனையைச் சொல்ல முடியாத என் மகன், வீட்ல தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கிட்டான். அந்த ஆற்றாமையிலதான், மேடம்கிட்ட அப்படிச் சொன்னேன்.

என் மகன் உயிரோட இருந்தா அவனுக்குச் செலவு பண்ணுவேன்ல. அப்படித்தான் அவங்களை எல்லாம் என் பிள்ளையா நினைச்சு இந்த உதவியைச் செய்தேன்.”

உருக்கமாக முடித்தார் தர்மராஜ்.

ஆசிரியர் பைரவி

பைரவி டீச்சரிடம் பேசினோம். ”சலூன் கடை வெச்சிருக்கும் ஒரு மாமனிதர் செஞ்சிருக்கிற கல்வி உதவி இது.

நாம வரும்போது எதையும் எடுத்துக்கிட்டு வரலை, போகும்போது எதையும் கொண்டு போறதில்லை. இடைப்பட்ட வாழ்க்கையில முடிஞ்சளவு மத்தவங்களுக்கு உதவலாம்ங்கிறதுக்கு தர்மராஜ் சாரைவிட ஒரு நல்ல உதாரணம் இல்ல” என்றார் நெகிழ்ச்சியோடு.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.