ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியல் ஒன்றை ஹுருன் இந்தியா ரிச் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து 9 வருடங்களாக முகேஷ் அம்பானி இடம் பெற்று வருகிறார்.

கொரோனா பரவுதலுக்குப் பிறகு, இந்த ஆண்டு தொடக்கத்தில் அனைத்து செல்வந்தர்களுக்கும் பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாகக் கடும் இழப்பு ஏற்பட்டது. இந்தக் கால கட்டத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் 28% வீழ்ந்து 3,30,000 கோடியாகக் குறைந்தது. அதன் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஃபேஸ்புக், கூகுள், சில்வர் லேக் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டால் மதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த நான்கு மாதங்களில் ரிலையன்ஸ் அதிபரின் சொத்துகளின் மதிப்பு 85% உயர்ந்தது. அதாவது, இந்தக் காலகட்டத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது 2,77,000 கோடி அதிகரித்து, 6,58,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Also Read: அடுத்த ரவுண்டுக்குத் தயாரான முகேஷ் அம்பானி… ₹5,550 கோடி முதலீட்டை ஈர்த்த ரிலையன்ஸ் ரீடெய்ல்!

கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்திலும் ரிலையன்ஸ் பங்குகளின் சந்தை மதிப்பு கணிசமாக உயர்ந்ததும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு சில நிறுவனப் பங்குகளின் மதிப்பு இந்தக் காலகட்டத்தில் இரு மடங்கு அதிகரித்ததும்கூட இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த லிஸ்ட்டின் மூலம் தெரிய வந்திருக்கும் மிக சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், லாக்டவுன் ஆரம்பத்திலிருந்து முகேஷ் அம்பானி மணிக்கு 90 கோடி ரூபாய் சம்பாதித்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

‘ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் ஹருண் இந்தியா ரிச் லிஸ்ட் 2020’ பட்டியலில் 1,000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்து மதிப்பு கொண்டவர்கள் 828 பேர். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும். அதோடு இந்த 828 பேரில், 627 பேரின் சொத்துகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக 75 பேர்கள், இம்முறை பட்டியலிலேயே இடம் பெறவில்லை. முந்தைய பட்டியலில் இடம் பிடித்திருந்தவர்களில் 6 பேர் இறந்துவிட்டனர்.

பெண்களைப் பொறுத்தவரை 32,400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், கோத்ரேஜ் குழுமத்தைச் சேர்ந்த ஸ்மிதா வி கிருஷ்ணா முதலிடம் பெற்றுள்ளார்.

இவரை அடுத்து, பயோகான் நிறுவனத்தைச் சேர்ந்த கிரண் மஜும்தார் ஷா 31,600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார். இந்த 828 பேர் பட்டியலில், 21 பேர் 40 வயதுக்குக் கீழே உள்ளவர்கள். இவர்களில், 17 பேர் சுயமாகச் சம்பாதித்து, முன்னுக்கு வந்தவர்கள். பட்டியலில் இடம்பெற்றுள்ள 828 பேரின் மொத்த சொத்து மதிப்பு 60.60 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 10.29 லட்சம் கோடி ரூபாய் அதிகம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.