நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால், சமீபகாலமாக இந்திய வங்கிகள் தொடர்ந்து சிக்கலில் தவித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு யெஸ் வங்கி. தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கி. செப்டம்பர் 25-ம் தேதி வங்கியின் இயக்குநர் குழுவை மறுநியமனம் செய்வதற்கு பங்குதாரர்கள் அனுமதி வழங்கவில்லை (10 இயக்குநர்களில் ஏழு நபர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் கடந்த ஜனவரியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைமைச் செயல் அதிகாரிக்கும் வாய்ப்பில்லை!). 60% பங்குதாரர்கள் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர்.

மேலும், வங்கியின் இயக்குநர் குழுவைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்னும் பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வங்கியின் முன்னாள் ஊழியர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

நிராகரிப்பு, கைது…

ரிசர்வ் வங்கி அனுமதி அளித்த இயக்குநர் குழுவைப் பங்குதாரர்கள் நிராகரித்திருப்பது இதுவே முதல் முறை. இந்த நிலையில், இயக்குநர்கள் கமிட்டி (committee of directors) என்னும் புதிய அமைப்பை உருவாக்கி, அதன் மூலமே இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. தவிர, வங்கியின் இரண்டு முன்னாள் ஊழியர்களை டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. ரெலிகர் நிறுவனத்தின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் (ரூ.729 கோடி) முறைகேடு செய்ததற்காக இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மோசமான நிதிநிலையே காரணம்

பங்குதாரர்களின் இத்தகைய எதிர்ப்புக்கு நிதி நிலைமையே காரணம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். கடந்த 10 காலாண்டுகளாக வங்கி நஷ்டத்தையே சந்தித்து வருகிறது. 2018-ம் நிதி ஆண்டில் ரூ.580 கோடி, 2019-ம் நிதி ஆண்டில் ரூ.890 கோடி மற்றும் 2020-ம் நிதி ஆண்டில் ரூ.840 கோடி அளவுக்கு வங்கியின் நஷ்டம் இருக்கிறது.

இந்த வங்கியின் வாராக்கடன் அளவும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2018-ம் நிதி ஆண்டு முடிவில் வங்கியின் மொத்த வாராக்கடன் 5.8 சதவிகிதமாக இருந்தது. கடந்த மார்ச் முடிவில் 25.39% அளவுக்கு மொத்த வாராக்கடன் இருக்கிறது. வங்கியின் மூலதனத் தன்னிறைவு விகிதம் 0.17 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. (ஜூன் 30 நிலவரப்படி). ஆனால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி 10.875% அளவுக்கு இந்த விகிதம் இருக்க வேண்டும். இதுபோல, வங்கியின் எந்தவொரு நிதி சார்ந்த தகவல்களும் ஆரோக்கியமாக இல்லை.

2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இந்த வங்கியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்திருக்கிறது. 2016-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனால் பல கடன்கள் வாராக் கடன்களாக மாறி இருக்கின்றன எனப் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ள முன்னாள் ஊழியர் தெரிவித்திருக்கிறார்.

1926-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி 2014-ம் ஆண்டு வரை கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்தது. 2014-ம் ஆண்டு தலைமையிடம் சென்னைக்கு மாற்றப்பட்டது. அப்போது முதல் இறங்குமுகம் தொடங்கிவிட்டதாகக் கருதும் ஊழியர்களும் இருக்கிறார்கள்.

ரெலிகர், ஜெட் ஏர்வேஸ், காக்ஸ் அண்ட் கிங்ஸ், நீரவ் மோடி, காஃபிடே, ரிலையன்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் சுமார் ரூ.2,000 கோடிக்கு மேல் இருக்கும். இவை தற்போது பெரும் சிக்கலில் இருப்பதாக அந்த முன்னாள் ஊழியர் தெரிவித்திருக்கிறார். தவிர, தவறான நடவடிக்கைகளும், பல தகவல்களும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 2017-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 10 கோடி அளவுக்கு லாபம் என அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்தக் காலாண்டில் சுமார் ஏழு கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்றும் முன்னாள் ஊழியர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

RBI Governor shaktikanta das

அடுத்து என்ன?

வங்கியில் பல சிக்கல்கள் இருந்தாலும் இப்போதைக்கு உடனடித் தேவை ரூ.1,500 கோடி எனத் தெரிகிறது. இந்தத் தொகை வங்கியில் இருக்கும்பட்சத்தில்தான் வங்கி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்கிறார்கள். தற்போது இந்தத் தொகையைத் திரட்டும் நடவடிக்கையில் இயக்குநர் கமிட்டி ஈடுபட்டிருக்கிறது.

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் சிக்கல் சில காலாண்டுகளாக இருந்துவருவதால், நிதி திரட்டுதல் மற்றும் இணைப்பு நடவடிக்கையை பல மாதங்களாகவே எடுத்துவருகிறது. பிளாக்ஸ்டோன், பெயின் மற்றும் டி.பி.ஜி ஆகிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யத் திட்டமிட்டன. ஆனால், லக்ஷ்மி விலாஸ் வங்கி வாராக்கடனுக்காக அதிக ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும் என கே.பி.எம்.ஜி நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அந்தத் திட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்து, வங்கித் துறையில் ஆர்வமாக இருந்த இந்தியாபுல்ஸ் நிறுவனம் வாங்குவதாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த இணைப்புக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனத்துடன் இணைவதற்காக ஒப்பந்தத்தில் இந்த வங்கி கையெழுத்திட்டது. ஆனால், அந்த இணைப்பு இதுவரை முழுமை அடையவில்லை.

இந்த நிலையில், லக்ஷ்மி விலாஸ் வங்கியை மற்ற வங்கி அல்லது நிதி நிறுவனத்துடன் இணைக்கவே ரிசர்வ் வங்கி திட்டமிடும் எனத் தகவல்கள் வருகின்றன. ஒருவேளை கிளிக்ஸ் கேப்பிடல் இணைப்பு கைகூடவில்லையென்றால், பஞ்சாப் நேஷனல் வங்கி வாங்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு வங்கியும் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதி சார்ந்த தகவல்களை ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய, மேற்கு, கிழக்கு என இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் போதுமான அளவுக்கு கிளைகள் உள்ளன. லக்ஷ்மி விலாஸ் வங்கியை தன்னுடன் இணைத்துக்கொள்ளும்பட்சத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல், தென் இந்திய சந்தையையும் கைப்பற்ற முடியும் எனத் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

Lakshmi Vilas Bank

பணம் போட்டவர்களின் கதி?

வங்கியின் நிதி நிலைமை மோசமாக இருந்தாலும் டெபாசிட்தாரர்களுக்கு பிரச்னை ஏதும் இல்லை என வங்கியின் இயக்குநர் கமிட்டி தெரிவித்திருக்கிறது. வங்கிகளின் நலனைச் சொல்லும் முக்கியமான அளவீடான லிக்விடிட்டி கவர் ரேஷியோ (liquidity coverage ratio) 262% அளவுக்கு இருக்கிறது. ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, 100% இருந்தாலே போதுமானது. அதேபோல, புரொவிஷன் கவரேஜ் ரேஷியோ (Provision coverage ratio) 72.6 இருக்கிறது. ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, இது 70% இருந்தாலே போதுமானது. இதனால் முதலீட்டாளர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.

ஆனால், இவையெல்லாம் தற்காலிக சந்தோஷம் மட்டும்தான். நீண்ட கால அடிப்படையில் புதிய முதலீட்டாளர்கள் வருவதோ, வங்கியை வேறு வங்கியுடன் இணைப்பதோ மட்டும்தான் இது சரியான தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் வங்கித்துறை நிபுணர்கள். இந்த வங்கியின் பங்கு ஒரு காலத்தில் முதலீட்டாளர்களின் விருப்பமான பங்காக இருந்தது. 2017-ம் ஆண்டு ஒரு பங்கின் விலை ரூ.187 என்னும் உச்சபட்ச விலைக்கு சென்றது. ஆனால், தற்போது 18 ரூபாய் என்னும் அளவில் வர்த்தகமாகி வருகிறது.

இந்த வங்கி பங்குகளில் பல ஆண்டுகளாக முதலீட்டைத் தொடரும் முதலீட்டாளர்கள் மற்றும் டெபாசிட் தொடரும் வாடிக்கையாளர்கள் இந்த வங்கியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.