கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து, காய்கறி சந்தை திருமழிசையிலும், மாதவரத்தில் பழ மார்க்கெட்டும், வானகரத்தில் பூ மார்க்கெட்டும் செயல்பட்டு வந்தன. ஆனால், உரிய வசதிகள் இல்லாததால், கோயம்பேடு மார்க்கெட்டைத் திறக்க வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்

இந்தநிலையில், செப்டம்பர் 28-ம் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட்டைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி, நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரிகளில் பொருட்கள் வரத் தொடங்கின. இருப்பினும் வழிகாட்டுதல் நடைமுறையின்படி, இரவு 8 மணிக்குப் பிறகே அவை மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்பட்டன. சரக்கு வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், அதில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகளுக்கு உடல்வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகே, வாகனங்களும் வியாபாரிகளும் மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Also Read: கோயம்பேடு பகீர்! – மாற்றப்பட்ட மார்க்கெட்… யாருடைய டார்கெட்? – ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

கோயம்பேடு மார்க்கெட் நேற்றிரவு 8 மணிக்குத் திறக்கப்பட்டது. சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அதிகாரி பெரியசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி மார்க்கெட்டைத் திறந்துவைத்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்

சி.எம்.டி.ஏ தரப்பில் பல்வேறு விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தினசரி இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சரக்கு வாகனங்கள் வந்து செல்லவும் நள்ளிரவு 1 மணி முதல் காலை 9 மணி வரை வியாபாரிகள் வந்துசெல்லவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. காலை 9 மணிக்குச் சந்தை மூடப்பட்டு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு மாலை 6 மணிக்குத் திறக்கப்படும். முதற்கட்டமாக 194 பெரிய கடைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. சில்லரை விற்பனைக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

கடை பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து கடைகளிலும் வெப்ப பரிசோதனை கருவி, கிருமி நாசினி போன்றவை கட்டாயம் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடைகளுக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும், கடைகள் இருக்கும் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்

சந்தையினுள் முகக்கவசம் அணியாத நபர்கள் வெளியேற்றப்படுவார்கள், தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பதை சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது. உள்ளே வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்னர் உள்ளே வர அனுமதிக்கப்படுகிறது. பயணிகள் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளே நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு, சந்தை முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.

Also Read: “எப்படியிருக்கிறது கோயம்பேடு மார்க்கெட்?” – விவரிக்கும் சிறு வியாபாரிகள்

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததற்கு கோயம்பேடு மார்க்கெட்டும் ஒரு முக்கிய காரணியாகத்தான் பார்க்கப்படுகிறது. வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாகத்தான் கடந்த ஆறு மாதங்களாக மார்க்கெட் மூடப்பட்டது. இன்று சந்தை தொடங்கிய முதல் நாளே, நிலைமை தலைகீழாக உள்ளது.

கோயம்பேடு சந்தை

அரசு பின்பற்றவேண்டிய பல்வேறு வழிமுறைகளை அறிவுறுத்தியிருந்தது. அதில் மிக முக்கிய விஷயமே முகக்கவசமும் தனிமனித இடைவெளியும் தான். அந்த இரண்டும் பெரும்பாலான இடங்களில் பின்பற்றப்படவில்லை. பலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததைப் பார்க்க முடிந்தது. இதனால், மீண்டும் கொரோனா பரவும் அச்சம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.