ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டி இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் அந்த முடிவு அவர்களை படுதோல்வியில் தள்ளும் என்பது பெங்களூர் கேப்டன் விராட் கோலிக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் வானத்துக்கும் பூமிக்கும் அப்படி ஒரு ஆட்டம் ஆடினார்.

image

7 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் என 69 பந்துகளில் 132 ரன்களை விளாசிவிட்டு இறுதிவரை களத்தில் நின்றார். இந்த ரன் பல போட்டிகளில் ஒரு அணியின் மொத்த ஸ்கோராக இருந்திருக்கிறது. அவருடன் களமிறங்கிய மயங்க் அகர்வால் 20 பந்துகளில் 26 ரன்களை எடுத்த நிலையில் சாஹல் வீசிய சூழலில் போல்ட் ஆனார். அப்போது சாஹல் இந்தப் போட்டியில் மிரட்டப்போகிறார் என்று தோன்றியது. ஆனால் மிரண்டுபோனது பெங்களூர் அணி தான். ஏனென்றால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி குவித்தது 206 ரன்கள். அந்த அணியில் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய பூரான் மற்றும் மேக்ஸ்வேல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இருப்பினும் ஒற்றை நாயகனாக பஞ்சாப் ஸ்கோரை தூக்கிச்சென்றார் ராகுல்.

image

பெங்களூர் அணியில் சொல்லிக்கொள்ளும்படி எந்த பவுலருடன் பந்துவீசவில்லை. ஆல்ரவுண்டர் சிவம் துபே மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். 80 ரன்னில் ஒருமுறை, 90 ரன்னில் ஒருமுறை என 2 முறை ராகுலின் கேட்ச்சை விராட் கோலியே தவறவிட்டது பெங்களூர் அணிக்கு பெரும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தியது. ஏனென்றால் அதன்பின்னரே ராகுல் தனது அதிரடியை வெளியப்படுத்தியிருந்தார். அதனால் தான் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 200-ஐ கடந்தது.

அத்துடன் 4 ஓவர்கள் வீசிய டேல் ஸ்டின் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் 57 ரன்களை வாரி வழங்கினார். மறுபுறம் 3 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவுமின்றி 35 ரன்களை உமேஷ் யாதவ் கொடுத்திருந்தார். நவ்தீப் சைனியும் விக்கெட் எதுவும் எடுக்காமல் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார். மொத்தத்தில் பெங்களூர் பவுலிங் மொத்தமும் சொதப்பல் தான். சாஹலை தவிர மெயின் பவுலர்கள் யாரும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

image

பவுலிங்கில் தான் சொதப்பல் என்றால் பேட்டிங்கில் அதைவிட சொதப்பல். தொடக்க வீரராக போன முறை அரை சதம் அடித்து அசத்திய படிக்கல், இந்தமுறை ஒரு ரன் மட்டுமே எடுத்துவிட்டு நடையை கட்டினார். அவரைத்தொடர்ந்து வந்த ஜோஸ் பிலிப்பே ரன் எதுவும் எடுக்கமால் விக்கெட்டை இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலியே ஒரு ரன்னில் அவுட் ஆகியபோது பெங்களூர் அணியின் நம்பிக்கை கண்ணாடிபோல உடைந்து சிதறியது. டி வில்லியர்ஸ் மற்றும் ஆரோன் ஃபின்ச் இருவரும் சிறிது நேரம் களத்தில் நின்று தங்கள் பங்கிற்கு 28 மற்றும் 21 ரன்கள் என எடுத்துவிட்டு ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் வந்தவர்களில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் 30 ரன்களை எட்ட, மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

image

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட பஞ்சாப் அணி பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும் அதைவிட சிறப்பாக செயல்பட்டது. அந்த அணியில் முகமது ஷமி மற்றும் காட்ரல் இருவரும் ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தியதுடன், விக்கெட்டுகளையும் சாய்த்தனர். மறுபுறம் 2ஆம் கட்ட பவுலர்களான ரவி பிஷ்னாய் மற்றும் முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். பஞ்சாப்பின் பந்துவீச்சில் 17 ஓவர்களில் 107 ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூர் அணி சுருண்டது. இதனால் 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. சொல்லப்போனால் கே.எல்.ராகுல் எனும் ஒற்றை மனிதர் எடுத்த ரன்னைக்கூட மொத்த பெங்களூர் அணியும் எடுக்கவில்லை என்பது, அந்த அணியின் ரன் ரேட்டை படுகுழியில் தள்ளிவிட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.