அ.ம.மு.க பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் திடீரென நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றது தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கயிருக்கிறது. தன் நண்பரான மல்லிகார்ஜுனன், உதவியாளர் ஜனார்த்தனனுடன் காலை 10:15 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி பறந்த தினகரன், இரவு 8:30 மணிக்குச் சென்னை திரும்பினார். சசிகலா விடுதலை குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் அவர் விவாதித்ததாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவர் வேறு சில விவகாரங்களுக்காக டெல்லி சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

டி.டி.வி.தினகரன்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்து, கட்சியின் சின்னமும் பெயரும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டன. சசிகலா தலைமையிலான அணி அ.தி.மு.க (அம்மா) என்றும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி அ.தி.மு.க (புரட்சித்தலைவி அம்மா) என்றும் செயல்பட்டன. இந்தச் சூழலில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசாரம் சூடுபிடித்தது. அ.தி.மு.க (அம்மா) அணியின் வேட்பாளராக தொப்பி சின்னத்தில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். அந்தச் சமயம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் திடீர் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை, வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் கொடுத்ததாகச் சில ஆவணங்களைக் கைப்பற்றியது. இதைக் காரணமாக வைத்து, இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

Also Read: தினகரன் ஒதுக்கப்பட்டு இன்றோடு மூன்றாண்டுகள்: ஆடு புலி ஆட்டம் முடிந்துவிட்டதா? #OnThisDay

இந்தக் களேபரச் சூடு அடங்குவதற்குள்ளாக, டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் ஏப்ரல் 15-ம் தேதி இரவு கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.3 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் மூலமாக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை அ.தி.மு.க (அம்மா) அணிக்குப் பெற தினகரன் முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சுகேஷ் கைது செய்யப்படுவதற்கு 20 மணி நேரத்துக்கு முன்னால் அவருடன் தினகரனுடன் போனில் பேசியதாக டெல்லி போலீஸ் கூறியது. இதன் அடிப்படையில் ஏப்ரல் 26-ம் தேதி தினகரனும் அவர் நண்பர் மல்லிகார்ஜுனாவும் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைதுசெய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று இருவரும் வெளியே இருக்கும் சூழலில் இந்த வழக்கு வேகமெடுத்திருப்பதாகவும், இது குறித்து சட்ட ஆலோசனை நடத்தத்தான் நண்பர் மல்லிகார்ஜுனாவுடன் தினகரன் டெல்லி சென்றதாகவும் கூறப்படுகிறது.

டி.டி.வி.தினகரன்

இது குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க மூத்த தலைவர்கள் சிலர், “இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், குரல் டெஸ்ட் எடுப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தினகரன் தடையாணை பெற்றிருக்கிறார். சில ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருந்த இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தினகரனுக்கு நெருக்கடி முற்றலாம் எனத் தெரிகிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் நேரில் சட்ட ஆலோசனை நடத்துவதற்காக தினகரன் டெல்லி சென்றார். வரும் செப்டம்பர் 28-ம் தேதி அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில், கட்சியின் சட்டதிட்டங்களை மாற்றிவிட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்க எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் திட்டமிடுவதாக தினகரன் தரப்பு கருதுகிறது. அப்படி உருவாக்கப்படும் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு தங்களில் ஒருவரையும், முதல்வர் வேட்பாளராக மற்றொருவரையும் முன்னிறுத்திக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம்.

Also Read: அண்ணன் மகள் மீது கடும் கொதிப்பில் சசிகலா: அப்படி என்ன செய்தார் கிருஷ்ணப்ரியா?

ஒருவேளை இந்தத் திட்டப்படி அ.தி.மு.க-வில் மாற்றங்கள் அமலானால், அந்தக் கட்சியை மீட்டெடுப்பதாக சூளுரைத்து அ.ம.மு.க-வைத் தொடங்கிய தினகரனுக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே அதிருப்தி கிளம்பும். எதையாவது செய்ய வேண்டிய நெருக்கடி முற்றும். டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பை நீக்கியது தவறு என சசிகலா தரப்பு தொடர்ந்திருக்கும் வழக்கும் நீர்த்துப்போய்விடும். இது சம்பந்தமாக டெல்லி வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனையும் நடத்தியிருக்கிறார் தினகரன். தன் தனிப்பட்ட விவகாரத்துக்காகத்தான் தினகரன் டெல்லி சென்றாரே ஒழிய, அந்தப் பயணத்துக்கும் சசிகலா விடுதலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத்தான் தனி விமானத்தில் தினகரன் டெல்லி பறந்தார்” என்றனர்.

சசிகலா

பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவரிடம், “தனி விமானத்தில் தினகரன் டெல்லி சென்றது, பா.ஜ.க-வுடன் டீல் பேசத்தான் என்கிறார்களே..?” என்று கேட்டோம். “தினகரனுக்கு ஆதரவளிப்பதால் பா.ஜ.க-வுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது… 1,200-க்கும் அதிகமான இடங்களில் மெகா ரெய்டு நடத்தி சசிகலா குடும்பத்தை முடக்கியது வருமான வரித்துறை. அதற்குப் பிறகும் சசிகலா குடும்பத்தை பா.ஜ.க ஆதரிப்பதாகக் கூறுவது தவறு. ஜனவரி 27, 2020-ம் தேதியுடன் சசிகலாவின் சிறைவாசம் முடிவுக்கு வருகிறது. ஆனால், சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வசதிகளை சசிகலா அனுபவித்ததாக அப்போதைய கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா எழுப்பிய புகார்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. அந்தப் புகார் தொடர்பாக விசாரித்து 600 பக்கங்களில் அறிக்கையளித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார், `லஞ்சம் கொடுத்தது உண்மைதான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இந்தச் சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டது. இந்த எஃப்.ஐ.ஆர்-ல் சசிகலாவின் பெயர் சேர்க்கப்பட்டால், அவர் விடுதலை மேலும் தாமதமாகலாம்’’ என்றார்.

தேர்தல் நெருங்கும் சூழலில், தினகரனின் டெல்லி விசிட் பரபரப்பை அதிகமாக்கியிருக்கிறது. டெல்லியின் காய்நகர்த்தல்களும் செப்டம்பர் 28-ம் தேதி அ.தி.மு.க செயற்குழுவில் எடுக்கப்படப் போகும் முடிவுகளும் மேலும் பரபரப்பை அதிகமாக்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.