புதுக்கோட்டை நகர்ப் பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர், கணேஷ் நகர் போலீஸாரிடம் ஒரு புகாரளித்தார். அதில், `மர்ம நபர் ஒருவர் எனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்கிறார். போனில் ஆபாசமாகப் பேசுவதோடு, தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், அப்படி இல்லையேன்றால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வருகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். புகாரை விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை டி.எஸ்.பி செந்தில்குமார் உத்தரவிட்டதின் பேரில், சைபர் கிரைம் போலீஸாரின் உதவியோடு, கணேஷ் நகர் போலீஸார் தனிப்படை அமைத்து, செல்போன் எண்ணைக் கண்காணித்து, குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கணேஷ் நகர் காவல் நிலையம்

செல்போன் எண்ணைவைத்து டிராக் செய்ததில், பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்தது, சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த கார்த்திகேயன் (37) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், இதே எண்ணின் மூலம் கல்லூரி மாணவிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசமாகப் பேசி அவர்களை மிரட்டியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து கார்த்திகேயனைக் கைதுசெய்தனர். கார்த்திகேயன் மீது பெண் கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Also Read: திருச்சி: 400 ஆபாச வீடியோக்கள்… பெண் வாடிக்கையாளர்கள் டார்கெட்! – சிக்கிய வங்கி ஊழியர்

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “தனது நண்பரின் பெயரில் சிம் வாங்கிய கார்த்திகேயன், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான பெண்களிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார். சில பெண்களிடம், தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால், உன்னுடைய அந்தரங்க விஷயங்களை வெளியில் விட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டியிருக்கிறார். பெரும்பாலும் கல்லூரி மாணவிகளைத்தான் டார்கெட் வைத்திருக்கிறார்.

கார்த்திகேயன்

பெண்கள் யாரும் இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முன்வராததால், தொடர்ந்து அடுத்தடுத்த பெண்களிடம் தனது வேலையைக் காட்டிவந்திருக்கிறார். கையும் களவுமாகப் பிடித்துவிட்டோம். வேறு பெண்கள் யாராவது நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரித்துவருகிறோம்” என்றார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.