‘நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாமல் போய்விடுவேன் என்ற அச்சத்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என ஜோதி ஸ்ரீ துர்காவின் மனதை உலுக்கும் கடிதம் கிடைத்துள்ளது

 நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜோதி ஸ்ரீ துர்கா, தான் கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் ஜோதி ஸ்ரீ துர்கா, ‘’அனைவரும் என்னிடம் அதிகம் எதிர்பார்த்தனர். நான் நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போய்விடுவேன் என்ற அச்சத்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன், என்னை மன்னித்துவிடுங்கள்.

அப்பா மறக்காம செக் அப்புக்கு போங்க. வழக்கம் போல நீங்கள் சந்தோஷமாக இருங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்திருங்கள். அது உங்களால் மட்டும்தான் முடியும்.

நான் செல்கிறேன் அப்பா. நான் உங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை. ஸ்ரீதர் (சகோதரர்)- எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். உனக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் என்னை மன்னித்துவிடு ஸ்ரீதர். நீதான் சிறந்த சகோதரர். நான் ஒரு கோழை.

image

உனது அன்புக்கும் மரியாதைக்கும் நான் தகுதியில்லாதவள். அப்பா, அம்மாவை நன்றாக பார்த்துக் கொள். எனக்காக அழ வேண்டாம். அம்மா, அப்பா கூட நீ மட்டும்தான் இப்போ இருக்கே. நீ சோகமாக இருந்தால் அவர்களும் சோகமாகி விடுவார்கள். நீ பெரியவனாகி விட்டாய், உயர் கல்விக்கு செல்கிறாய். அதனால் நன்றாக படி, என்னை மறந்துவிடு.

செல்போன்ல நிறைய நேரம் கேம் விளையாடாதே. அப்புறம் அதற்கு அடிமையாகி விடுவாய். நீ இரக்கக் குணம் கொண்டவன் ஸ்ரீதர். நன்றாக படி, பொறுமையாக இரு. முட்டாள்தனமாக எதையும் வீணடித்து விடாதே. தேவிகா (சகோதரி)- நீ என்னை அதிகமாக நேசித்தாய். நீ எனக்காக எதையும் செய்தாய். எனக்கு ஆதரவாக இருந்தாய்.

நான் மதுரை வந்தபிறகு, உன்னை பார்க்காமல் வருந்தினேன். நான் உன்னை விட்டு செல்வதற்கு என்னை மன்னித்துவிடு. நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பேன். ஸ்ரீதரையும் பார்த்துக் கொள்.

இது யாருடைய தவறும் அல்ல. யாரும் யாரையும் குற்றம்சாட்டி கொள்ளாதீர்கள். அம்மு நீதான் என்னுடைய நண்பர். மாமா, அத்தை, தாத்தா, பாட்டி அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். என் மேல் நீங்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தீர்கள். ஒருவேளை எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காவிட்டால் உங்கள் கஷ்டமெல்லாம் வீணாகியிருக்கும். என்னை மன்னித்துவிடுங்கள்.. நான் சோர்ந்துவிட்டேன்’’ என ஜோதி ஸ்ரீ துர்கா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.