கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு கடந்த பல மாதகாலமாக `பிளாஸ்மா தெரபி’ என்றொரு சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உடலில் செலுத்தும் முறைதான் பிளாஸ்மா தெரபி.

Blood

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சையை மத்திய அரசே பரிந்துரை செய்திருந்த நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்ட பலரும் பிளாஸ்மா தெரபிக்காகத் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) பிளாஸ்மா தெரபி குறித்து நடத்திய ஆய்வு முடிவு ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் `கொரோனாவால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க பிளாஸ்மா தெரபி பயனளிக்கவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 39 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறனை ஆராய்ந்து அதன் முடிவுகளை ஐசிஎம்ஆர் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமே `பிளாஸ்மா தெரபி பலனளிக்காது’ என்று கூறிய பின்னர் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு பிளாஸ்மா தெரபி மேற்கொள்ளப்படுமா என்றொரு சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், “ஏதோ சில ஆய்வுக் கட்டுரைகளை நம்பி எந்த முடிவும் எடுக்க முடியாது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் இதுவரை தமிழகத்தில் பெரும்பாலானோர் குணமாகியுள்ளனர். இந்தச் சிகிச்சை எதிர்பார்த்த அளவுக்குப் பயனளிக்கவில்லை என்றுதான் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. மேலும், இந்தப் பரிசோதனையைத் தொடர்வதற்கான அனுமதியையும் வழங்கியிருக்கிறது. எனவே, தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்றார்.

கொரோனா இறப்புகளைத் தடுக்க பிளாஸ்மா தெரபி எதிர்பார்த்த அளவுக்குப் பயனளிக்காதது ஏன்? ரத்த மாற்றுச் சிகிச்சை மருத்துவர் செல்வராஜனிடம் பேசினோம்.

ரத்த மாற்றுச் சிகிச்சை மருத்துவர் செல்வராஜன்

“ஏதேனும் ஒரு வைரஸ் அல்லது பாக்டீரியம் கிருமியால் நோய்த் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, அதே நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றொரு நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கும் சிகிச்சை முறைதான் `பிளாஸ்மா தெரபி‘.

ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தில் உருவாகியிருக்கும் ஆன்டிபாடிகள், பிளாஸ்மா மூலம் சிகிச்சை தரப்படும் நோயாளிக்கு மாற்றப்படும்போது அந்த நோயிலிருந்து அவர் குணமடைய அதிக வாய்ப்புள்ளது. இந்தச் சிகிச்சை முறைதான் கடந்த சில மாத காலமாகக் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலர் குணமடைந்தும் உள்ளனர்.

Also Read: தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி ஆராய்ச்சி நிறுத்தப்பட்டதா? சர்ச்சையும் அதிகாரியின் விளக்கமும்

இச்சிகிச்சை முறை இந்தியாவில் பரவலாக மும்பை, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கொரோனா இறப்புகளைத் தடுக்க பிளாஸ்மா தெரபி எதிர்பார்த்த அளவுக்கு உதவவில்லை என்று கூறியுள்ளது.

பிளாஸ்மா

Also Read: கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா தெரபி… தானமளிக்கத் தகுதியானவர்கள் யார்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வேறு எந்தச் சிகிச்சையும் அளிக்கப்படாத நிலையில் பிளாஸ்மா தெரபி மட்டும் மேற்கொள்ளப்பட்டு அவர் குணமடையவில்லை என்றால், பிளாஸ்மா தெரபி கொரோனா சிகிச்சையில் பயனளிக்கவில்லை என்று கூறலாம். ஆனால், இங்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோர்க்கு முதலில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவற்றால் குணமடையாமல் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கே பெரும்பாலும் பிளாஸ்மா தெரபி அளிக்கப்படுகிறது. அதனால் கொரோனா விஷயத்தில் பிளாஸ்மா தெரபியின் முழு வீரியத்தன்மை என்னவென்பதே நமக்கு தெரியாமல்தான் உள்ளது.

ஏற்கெனவே கொரோனா பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் இருக்கும் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள்தான் பிளாஸ்மா தெரபி மூலம் நோயாளிக்கு மாற்றப்படுகின்றன. ஆனால், கொரோனாவுக்கு எதிராக ஒருவரின் உடலில் உருவாகும் இந்த ஆன்டிபாடிகளே இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே வீரியத்துடன் உள்ளன என்று ஆய்வுகள் கூறும் நிலையில், கொரோனா விஷயத்தில் பிளாஸ்மா தெரபி எதிர்பார்த்த அளவு பயனளிக்காததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்றவர்களில் சிலர் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

Blood

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்று குணமடைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பல்வேறு சிகிச்சை முறைகளில் ஒன்றாக பிளாஸ்மா தெரபியும் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி அதிகளவு பலனளிக்காவிட்டாலும், அதனால் பக்க விளைவுகள் எதுவும் பெரிதாக ஏற்படப்போவதில்லை. அதனால் தமிழகத்தில் எப்போதும்போல கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தெரபியைத் தொடரலாம்.

பிளாஸ்மா தெரபி சிகிச்சை ஆராய்ச்சியில் நம் நாடு இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. அதனால் இந்தச் சிகிச்சையின் பலன் இப்படித்தான் இருக்கும் என்று நம்மால் உறுதியாகக் கூறவும் முடியாது. இது குறித்த பல்வேறு ஆய்வுகளும் சிகிச்சைகளும் செய்யப்பட்டால் மட்டுமே பிளாஸ்மா தெரபி சிகிச்சை குறித்த தெளிவு நமக்குக் கிடைக்கும்” என்றார் ரத்த மாற்றுச் சிகிச்சை மருத்துவர் செல்வராஜன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.