இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற ஊரில் பிறந்த கல்பனா சாவ்லா தனது பள்ளிப்படிப்பை கர்னலில் உள்ள அரசுப் பள்ளியில் முடித்தார். பின்னர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் துறையில் இளங்கலை முடித்தார். இதனையடுத்து அமெரிக்கா சென்ற சாவ்லா, அங்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும், பல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். தொடர்ந்து நாசா ஆராய்ச்சிக் கூடத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற அழிக்கமுடியாத பெருமைக்குச் சொந்தக்காரர். 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி அமெரிக்காவின் நாசா அனுப்பிய கொலம்பியா விண்கலம் STS -107ல் கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்கள் பயணித்தனர். இவர்கள் தங்கள் சோதனைகளை முடித்துக்கொண்டு பிப்ரவரி 1-ம் தேதி மீண்டும் புவிக்குத் திரும்பும்போது விண்கலம் வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

Also Read: வானிலிருந்து அசரீரி, நாசாவின் `கேசி’, கடைசி ஆசை… கல்பனா சாவ்லா நினைவலைகள்! #VikatanOriginals

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நார்த்ராப் க்ரூம்மான் என்ற நிறுவனம் தன்னுடைய அடுத்த விண்கலத்துக்கு கல்பனா சாவ்லா பெயரைச் சூட்டவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா முதல் இந்தியப் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த காரணத்துக்காக இவர் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குப் பொருள்களை ஏற்றிச் செல்லும்.

Kalpana Chawla

இது தொடர்பாக நார்த்ராப் க்ரூம்மான் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவுக்கு இன்று நாங்கள் மரியாதை செலுத்தவுள்ளோம். மனிதர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லும் விண்கலத்துக்கு கல்பனா சாவ்லா அளித்த பங்களிப்பு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும். எங்களின் என்ஜி -14 சைக்னஸ் விண்கலத்துக்கு சாவ்லா பெயரைச் சூட்டுவதில் நார்த்ராப் க்ரூம்மான் நிறுவனம் பெருமைகொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.