`ஆட்டோமேட்டிக் ஆம்புலன்ஸ் சிக்னல்’ என்ற மேலூர் இரட்டையர்களின் கண்டுபிடிப்பு தமிழக முதல்வரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மாணவர்களின் முயற்சிக்கு ஊக்கம் கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் வருகையைக் கண்டறியும் கருவி

பாலசந்தர், பாலகுமார் இருவரும் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சகோதரர்கள். இரட்டையர்களான இவர்கள் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அறிவியல் ஆர்வம் உள்ள இந்தச் சகோதரர்கள், இணைந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்லும் நோயாளிகளின் முக்கியத்துவத்தைக் கருதியும், சாலையில் செல்லும் மற்ற பயணிகளின் கவனத்தை ஒருங்கிணைத்து ஆம்புலன்ஸ்க்கு முன்னெச்சரிக்கையாக வழிவிடும் வகையிலும் கருவி ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

இரட்டையர்களிடம் பேசினேன். “நாங்க சின்ன வயசா இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அம்மாதான் சமையல் வேலை செஞ்சு எங்கள காப்பாத்திட்டு இருக்காங்க. அப்பா விபத்தில் சிக்கி இறந்துட்டதா அம்மா சொன்னாங்க.

பாலகுமார், பாலசந்தர்

அப்பாக்கு ஆக்சிடென்ட் ஆனப்ப ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டு ரத்தக் கசிவு அதிகமானதால தீவிர சிகிச்சை கொடுத்தும் பிரயோஜனம் இல்லாம போயிருச்சாம். இந்த விஷயத்தை அம்மா அழுதுட்டே சொல்றதை அடிக்கடி கேட்ருக்கோம். எங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசுல இருந்தே கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் ஜாஸ்தி. அப்துல் கலாம் ஐயாவின் ‘கனவு காணுங்கள்’ என்ற சொல்தான் எங்களுக்கான எனர்ஜி பூஸ்டர்.

அதனால குட்டி, குட்டி கண்டுபிடிப்புகள் எங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். நிறைய கண்டுபிடிப்புகள் உருவாக்கியிருக்கோம். இப்படி எங்களோட ஆசையில் ஒன்றுதான் ‘ஆட்டோமேட்டிக் ஆம்புலன்ஸ் சிக்னல்’.

ஆம்புலன்ஸ் வருகையை கண்டறியும் கருவி

நாங்க கண்டறிந்த இந்தக் கருவி மூலம் ஆம்புலன்ஸ் வாகனம் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் வரும்போதே அருகே உள்ள சிக்னலில் எச்சரிக்கைகள் விழும். பொதுவாக, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் விரைவாக வரும் போது ஒலி எழுப்பிக்கொண்டு வரும். அந்த ஒலி அருகில் வரும்போதுதான் நமக்கு தெரியும்.

Also Read: PUBG இல்லைனா என்ன… இந்த கேம்ஸையெல்லாம் ட்ரை பண்ணிப் பார்க்கலாமே ப்ரோ!

ஆனால், இந்தக் கருவியால் 2 கிலோ மீட்டருக்கு முன்பு ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கும்போதே சிக்னல்களில் செட் செய்துள்ள ஒலிப்பெருக்கி மூலம் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் போக்குவரத்து இடையூறு உள்ள பகுதிகள் மற்றும் மக்கள் கூட்டமாக உள்ள பகுதிகளில், விரைந்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழி விடுவது எளிதாக இருக்கும். இதனால் விபத்தில் சிக்கியவர்களைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளையும் அளிக்க முடியும்.

ஆம்புலன்ஸ் வருகையை கண்டறியும் கருவி

இந்தக் கருவியை கம்ப்யூட்டர், செல்போன்களில் கூட மானிட்டர் செய்து கொள்ளமுடியும். ஆம்புலன்ஸில் ஜி.பி.எஸ் கருவியின் உதவியால் நாம் இதை செய்யலாம். சிக்னல்களில் இருக்கும் சிவப்பு, மஞ்சள், பச்சையைத் தொடர்ந்து இந்தக் கருவியின் செயல்பாடுகளுக்கு ஊதா நிற விளக்கு அமைக்கலாம். இதனால் பொதுமக்கள் எளிமையாக வேறுபாடு காண்பார்கள். இது போன்ற நவீனங்களைப் பயன்படுத்தி அனைத்து சிக்னல் மற்றும் ஆம்புலன்ஸ்களை ஒருங்கிணைந்து இந்தப் பணியை வெற்றிகரமாக செய்ய முடியும். இதனை அரசு ஆய்வு செய்து மேம்படுத்தினால் நிச்சயம் அனைத்து இடங்களிலும் நல்ல திட்டமாக கொண்டுவரலாம். தற்போது தமிழக முதல்வர் எங்களைப் பாராட்டியது ஈடு செய்ய முடியாத மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து எங்களுடைய கண்டுபிடிப்புகளை செய்ய இது ஊக்கமாக உள்ளது” என்றார்கள்.

வாழ்த்துகள் சகோதரர்களே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.